தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகத்துவம் நிறைந்த கஸ்தூரி மஞ்சள்

2 mins read
16595da6-f896-433b-ac9d-2b4b6f472c49
‘குர்குமா அரோமாட்டிக்கா’ என்ற கஸ்தூரி மஞ்சள் - படம்: பிக்சாபே

சுமார் 4,000 வருடங்களுக்கு முன்னரே நம் முன்னோர்கள் மஞ்சள் என்ற பெருமை வாய்ந்த மூலிகையைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இன்றோ அது அனைத்து வீடுகளில் இருக்கும் அத்தியாவசியமாக உள்ளது.

மஞ்சள், காஞ்சன், நிசி, அறித்திரன்பம் ஆகியவை சங்க இலக்கியங்களில் மஞ்சளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள். அதன் சிறப்புகள் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ நூல்களில் போற்றப்பட்டுள்ளன. மஞ்சளுக்குப் பல பெயர்கள் இருப்பதுபோல அதில் பல வகைகளும் உண்டு. விரலி மஞ்சள், காட்டு மஞ்சள், கருமஞ்சள், பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் என்று மஞ்சள் பலவகை உண்டு.

இவற்றுள் தோலுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது கஸ்தூரி மஞ்சள். ‘குர்குமா அரோமாட்டிக்கா’ என்றும் தாவர அறிஞர்களால் அழைக்கப்படும் இந்த மூலிகை மற்ற மஞ்சள் வகைகளை விட அதிகம் மணம் கொண்டது. தோல் நோய்களைத் தீர்க்கும் தன்மைகொண்ட மஞ்சளை இடித்து பொடியாக்கி உடலிலும் முகத்திலும் பலர் பூசுகின்றனர்.

ஆரோக்கியப் பலன்கள்

சரும பாதுகாப்பு: உடலில் ஏற்படும் காயங்களிலும் கீறல்களிலும் மஞ்சள் வழக்கமாகப் பூசப்படுகிறது. மஞ்சள் ஒரு கிருமிநாசினி என்பதால் காயங்களை எளிதில் குணமாக்கக்கூடியது. முகத்தில் ஏற்படும் பருக்கள், தோல் அழற்சி, எண்ணெய் வழிதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் பூசுவதால் முகத்தில் கரும்புள்ளிகளும் குறையும் என்று கூறப்படுகிறது. கண்களுக்கு கீழ் ஏற்படும் கருவளையங்களையும் குறைக்கும். 

தலைமுடி பராமரிப்பு: கஸ்தூரி மஞ்சள் தலைமுடி வளர்வதற்கும் கைகொடுக்கும். அழற்சியை எதிர்க்கும் ஆற்றல்கொண்ட மஞ்சளால் உச்சந்தலை வலிமை பெற்று முடி உதிர்வதை தடுக்கிறது. தலைமுடியும் அடர்த்தியாக வளர்வதாகக் கருதப்படுகிறது.

பயன்படுத்தும் முறை: கஸ்தூரி மஞ்சளை ஆணும் பெண்ணும் பயன்படுத்தலாம். தூய கஸ்தூரி மஞ்சளைத் தண்ணீர், பன்னீர், தயிர் அல்லது எலுமிச்சை சாற்றுடன் கலந்து முகத்திலோ உடலிலோ பூசி வந்தால் பலன்கள் கிடைக்கும்.

குறிப்புச் சொற்கள்