தன் இரு முழங்கால்களும் 2023ல் காயமடைந்தபோது தன் சீருடற்பயிற்சி (Gymnastics) எதிர்காலம் முடிந்துவிட்டது என அஞ்சினார் அப்துல் பார் அப்துல்லாட்டிஃப், 18.
ஆனால் மனந்தளராமல் போராடிய அவர், தன் முதல் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கவுள்ளார். ஆறு வயதில் சீருடற்பயிற்சியைத் தொடங்கினார் அப்துல் பார். சிலர் ‘டிராம்போலீன்’னில் குதித்ததைக் கண்டதும் அதற்கு ஈர்க்கப்பட்டார். தொடக்கப்பள்ளிக்குப் பிறகு ‘பிரைம் ஜிம்னாஸ்டிக்ஸ் கிளப்’பில் சேர்ந்து நாளடைவில் தேசிய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் சாகசம் ஒன்றைச் செய்ய முயற்சிசெய்தபோது இரு முழங்கால்களிலும் அடிபட்டு, காயம் ஏற்பட்டபோது மனதளவில் உடைந்து போனார் அவர். “என் குழுவினர், நண்பர்கள் அனைவரும் முன்னேறுவதைக் கண்டு துவண்டேன்,” என்றார் பார்.
“நான் சீருடற்பயிற்சியை நிறுத்தவேண்டும் என என் தாயாரிடம் கூறினேன். ஆனால் முதலில் குணமடைவதில் கவனம் செலுத்தும்படி அவர் அறிவுறுத்தினார். குடும்பத்தினர், நண்பர்கள், பயிற்றுவிப்பாளர் ஊக்குவித்தனர்,” என்றார் அந்த இளையர்.
அன்றாடம் இயன்முறை மருத்துவரைச் சந்தித்தார் பார்; நீச்சல்குளச் சிகிச்சை பெற்றார். ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பயிற்சிக்குத் திரும்பினார். “சில சாகசங்களைச் செய்யச் சற்று அச்சம் இருந்தது. ஆனால் மீண்டும் வலியின்றி செய்யத் தொடங்கியதும் தன்னம்பிக்கை வளர்ந்தது,” என்றார் அவர்.
2024 சிங்கப்பூர் சீருடற்பயிற்சி தேசியப் போட்டிகளில் அவர் ‘உயர் கம்பி’ (High Bar) பிரிவில் தங்கம் வென்றார். 2025 அக்டோபரில் உலகக் கோப்பை கலைநய சீருடற்பயிற்சியில் அவர் முதன்முறையாகப் பங்கேற்கவும் செய்தார்.
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் அவர் ‘எஃப்ஐஜி சீனியர்’ பிரிவில், ‘உயர் கம்பி’, ‘இணைக் கம்பிகள்’ போட்டிகளில் பங்கேற்பார்.
சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி, ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் (joint polytechnic programme) இணைந்து வழங்கும் படிப்பைப் பார் மேற்கொள்கிறார். தம் தேவைகளுக்கேற்ப, போட்டி அட்டவணைக்கேற்ப படிப்பை மேற்கொள்ளும் சுதந்திரத்தை இத்திட்டம் விளையாட்டாளர்களுக்கு வழங்குகிறது.
தொடர்புடைய செய்திகள்
கல்விக்கு மத்தியில் வாரத்துக்கு ஆறு முறை பார் தேசிய அணியுடன் பயிற்சி செய்கிறார் பார். தான் விளையாடுவதைப் பார்க்கத் தாய்லாந்துக்குத் தன் சகோதரி வருவதாகவும் கூறிய பார், ஒரு நாள் ஒலிம்பிக்குக்குத் தகுதிபெறுவதே தன் இலட்சியம் என்றார்.
அவரைப் போல் சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளியின் இணைப் பலதுறைத் தொழிற்கல்லூரித் திட்டம்வழி நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படிக்கிறார் தடகள வீராங்கனை லாவண்யா ஜெய்காந்த். அவரும் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் முதன்முறையாகப் பங்கேற்கிறார்.
50 ஆண்டுகளாக நீடித்த U20 400மீட்டர் தேசிய சாதனையை 2024 உலகத் தடகள U20 போட்டிகளில் முறியடித்தவர் லாவண்யா. 2025ல் தேசிய சாதனையை முறியடித்த 4x100மீட்டர் அணியிலும் அவர் ஓடினார்.

