மின்னிலக்க உலகில் அதிக அளவில் குறுங்காணொளி பார்த்தல் ‘டோப்பமின்’ சுரப்பை அதிகரித்து, உடல், மன நலனுக்குத் தீங்கு விளைவிக்கிறது எனும் கருத்து பரவலாகியுள்ளது.
இதனைச் சரிசெய்ய, ‘டோப்பமின் டீடாக்ஸ்’ எனும் முறையும் பின்பற்றப்படுகிறது.
ஆனால், ‘டோப்பமின் டீடாக்ஸ்’ என்பது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
டோப்பமின் ஓர் வேதிப்பொருள்போலச் சித்தரிக்கப்படுகிறது. உண்மையில் அது ஒரு சுரப்பு. மூளைக்கு மிகவும் பிடித்த, உடனடியான ஒரு வெற்றியை உணரும் வகையிலான செயல்களைச் செய்யும்போது டோப்பமின் சுரக்கிறது.
சமூக ஊடகங்களில் நேரம் செலவிடுவது, இனிப்பு உண்பது உள்ளிட்ட தற்காலிக மகிழ்ச்சியைத் தூண்டக்கூடிய செயல்கள் இதற்கு எடுத்துக்காட்டு.
இதன் சுரப்பு உடலுக்கு அவசியம். ஆனால், அது சரியான அளவில் இருப்பது முக்கியம்.
எடுத்துக்காட்டாக, முறையற்ற பழக்கங்களினால் அதிகமாகச் சுரக்கும் டோப்பமின், மன அமைதியைக் குலைத்து, மேலும் பல தேவையற்ற செயல்களில் ஈடுபடத் தூண்டும். கவனச்சிதறலை அதிகரிக்கும்.
அதேபோல, டோப்பமின் குறைவாக இருந்தால், குழப்பமான மனநிலை, தாழ்வு மனப்பான்மை, சமநிலையற்ற போக்கும் ஏற்படும்.
தொடர்புடைய செய்திகள்
இது, மனிதர்களுடன் பழகும் விருப்பத்தைக் குறைக்கவும் வாய்ப்புள்ளது.
டோப்பமினில் இருவகைகள் உள்ளன. விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு டோப்பமின் சுரக்கும்.
இதனை ‘ரன்னர்ஸ் ஹை’ என்பார்கள். இயல்புக்கு மீறிய ஒன்றைச் சாதிக்கும்போது வரும் வெற்றியின் உணர்வால் சுரக்கும் டோப்பமின் இது.
இரண்டாவது வகை, மேற்சொன்ன தீய, தேவையற்ற செயல்களினால் வரும் களிப்பின் பயனாகச் சுரப்பது.
மன அமைதி, ஒழுங்கு, சீரான உணர்வுகள், சிறு சிறு அழகியலை ரசிக்கும் போக்கு ஆகியவற்றைக் கவனித்தால், டோப்பமின் சமநிலை குறித்து அறிந்துகொள்ளலாம்.
டோப்பமின் சுரப்புக்கு, ஒழுங்கான வாழ்வியல் நடைமுறைகளைப் போலவே, சமச்சீரான ஊட்டச்சத்து மிக்க உணவும் அவசியம்.
ஓமேகா 3, வைட்டமின் பி12, உள்ளிட்ட மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை உட்கொள்வது நல்லது. நீர்ச்சத்துடன் இருப்பது, யோகா பயிற்சி, தியானம் ஆகியவற்றை மேற்கொள்வதும் டோப்பமின் அளவைச் சீராக வைத்துக்கொள்ள உதவும்.

