தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முடிக்கு உகந்த ஷாம்பு வகைகள்

3 mins read
fbe24628-5921-4b39-a4ea-497a53849598
மாதிரிப்படம்: - ஊடகம்

கடைகளில் எத்தனை வகை ஷாம்பு விற்கப்பட்டாலும் ஒருவர் தமது தலைமுடிக்கு உகந்த ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். தவறான ஷாம்பு பயன்படுத்தப்படும்போது அது முடி உதிர்தலுக்கு இட்டுச்செல்லும்.

முடி அளவைக் கூட்டுவது, முடியை மிளிரச் செய்வது, முடியின் அமைப்பை மெருகூட்டுவது போன்ற காரணங்களுக்காக பலர் விதவிதமான ஷாம்புவை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

விலை அதிகம் கொண்ட ஷாம்பு வாங்குவது சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சரியான ஷாம்புவை தேர்வுசெய்து பயன்படுத்தும்போது முடி அழகை மெருகூட்ட தேவையில்லாத மற்ற பொருள்களை வாங்க வேண்டாம்.

முடி அளவை கூட்ட

தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர். அது பரம்பரை சார்ந்த காரணங்களுக்காக இல்லாவிட்டாலும், பெரும்பாலும் உச்சந்தலையில் அழுக்கு சேர்வதால் முடி உதிர்ந்து அடர்த்தி குறைகிறது. முடி அளவை கூட்டும் பெரும்பாலான ஷாம்புவில் ‘சல்ஃபேட்’ எனப்படும் வேதிப்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.

சல்ஃபேட் கொண்ட ஷாம்பு தண்ணீரில் கலக்கப்படும்போது நுரை ஏற்படும். இதனால் அதை தலைக்குப் பயன்படுத்தும்போது தலையிலிருந்து அழுக்கு விரைவாக நீக்கப்படும் என்று பலர் நினைக்கின்றனர்.

ஆனால், சல்ஃபேட் முடியின் பிரகாசத்தை அழித்துவிடும். முடி உதிர்தலை ஏற்படுத்தும் தன்மை கொண்டுள்ள சல்ஃபேட், சாயம் பூசப்பட்ட முடியின் நிறமியை அழிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. எனவே, சல்ஃபேட் கலக்கப்படாத ஷாம்பு பயன்படுத்துவதே சிறந்தது.

முடியின் சுருளை குறைக்க

நேரான முடி உள்ளவர்களுக்கு முடி அடிக்கடி சுருளத் தொடங்கினால் அது உலர்ந்த முடிக்கு அறிகுறி. ஆங்கிலத்தில் ‘ஃபிரிஸ்சி’ எனப்படும் சுருள் முடி ஒருவரின் முடி ஆரோக்கியத்தைக் குறிக்கிறது.

முடி சுருள்வது, ஆடைகளுக்கு எதிரான அதிகப்படியான உராய்வு காரணமாகவும் ஏற்படலாம். மேலும், முடியின் புறத்தோல் சேதமடையும் போதும் முடி சீக்கிரமாக சுருளத் தொடங்கும்.

ஈரப்பதமான வெப்பத்தின் காரணத்தாலும் முடி எளிதில் சுருளும். சல்ஃபேட், சிலிக்கோன் கலக்கப்படாத ஷாம்பு முடி சுருளும் வேகத்தை தணிக்க உதவும். அதோடு, ஷாம்புவில் கற்றாழை போன்ற ஈரப்பதமூட்டும் மூலப்பொருள்கள் இருந்தால் சிறப்பு.

நீரேற்றேம் தரும் ஷாம்பு

நீண்ட நேரம் ஈரப்பதத்தைக் கட்டிக்காக்க முடியாத முடி வகைக்கு நீரேற்றம் அளிக்கும் ஷாம்பு சிறந்தது. சல்ஃபேட் சேர்க்கப்படும் ஷாம்புவை முதலில் தவிர்ப்பது நல்லது. அது நீரேற்றத்தை தடுக்கும். நீண்ட நேரம் வெயிலில் இருப்பதாலும் முடிக்கு தேவையான நீரேற்றம் குறையத் தொடங்கும்.

ஜொஜொபா எண்ணெய், கற்றாழை, அவோகாடோ எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற மூலப்பொருள்கள் கலக்கப்படும் ஷாம்புவில் நீரேற்றம் தன்மை இருக்கும்.

சுருள் முடியை கட்டிக்காக்க

இயற்கையாகவே சுருள் முடி உள்ளவர்கள் அதிகம் புலம்புவது, அவர்களின் முடி ஆரோக்கியத்தை கட்டிக்காப்பது பற்றியதே. நேரான முடி உள்ளவர்களுக்கு அதை கவனித்துக்கொள்வது எளிது.

அதிக நுரை ஏற்படுத்தும் ஷாம்புவை பயன்படுத்துவது சரியன்று. மேலும், சுருள் முடி உள்ளோர் அடிக்கடி ஷாம்பு வைத்து முடியைக் கழுவவும் கூடாது. அவ்வப்போது ஈரப்பதமூட்டும் பொருள்களை முடியில் தேய்ப்பதும் ஒரு சிறந்த வழி.

நச்சு நீக்கும் ஷாம்பு

தலையை மூடியுள்ள முடியின் தோலில் அழுக்கு சேரும்போது முடி வளர்ச்சி குன்றும். முடி வளர்ச்சி குன்றினால் அது முடியின் ஆரோக்கியத்தைக் குறைத்துவிடும்.

இரண்டு முறை ஷாம்பு தேய்த்து குளிப்பதற்குப் பதிலாக நச்சு நீக்கும் (டீட்டாக்ஸ்) ஷாம்புவை பயன்படுத்தப்படும்போது அது ஒரே தடவையில் அனைத்து அழுக்கையும் அகற்றிவிடும்.

சாயம் பூசிய முடிக்கு

சாயம் பூசிய முடிக்கு கூடுதல் கவனம் தேவை. சாயம் பூசப்பட்டதால் முடியின் ஆரோக்கியம் நன்றாக இருக்கவும் சாயம் நீண்ட நாள் முடியில் ஒட்டவும் வேண்டும்.

வேதிப்பொருள்கள் கலக்கப்படாத இயற்கை மூலப்பொருள்கள் கொண்ட ஷாம்புவே இதற்குச் சிறந்தது. சாயம் பூசப்பட்ட முடியில் ஏற்கெனவே பல வேதிப்பொருள்கள் இருப்பதால் அதில் மீண்டும் தவறான ஷாம்புவை பயன்படுத்தும்போது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

உலர் ஷாம்பு

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், அடிக்கடி ஷாம்பு தேய்த்து குளிப்பது சிரமம். மேலும், தேவைக்கு அதிகமாக ஷாம்பு பயன்படுத்துவதும் நல்லதன்று.

இதற்காக கடைகளில் புதிதாக உலர் ஷாம்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஷாம்புவை தண்ணீரில் கலக்க தேவையில்லை. தலை முழுவதும் அதை பூசி வெளியில் செல்லலாம்.

குறிப்புச் சொற்கள்