நம்மைச் சுற்றி நாம் அமைத்துக்கொள்ளும் சூழல், சொற்களுக்கும் செயல்களுக்கும் அப்பாற்பட்டது.
நமது அன்புக்குரியவர்கள் நம்முடன் இருக்கும்போது நாம் எத்தகைய சூழலை நல்குகிறோம் என்பது குறித்த சிந்தனை அவசியமானது.
நம்மீதும் பிறர் மீதும் பாசத்தையும் பரிவையும் பொழியும் சூழலை உருவாக்க இளமை முதற்கொண்டு உழைத்தால் வாழ்க்கை வளமாகும் என்று மனநல ஆலோசகர் கோபால் மஹே தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
நமக்கும் நாம் நல்லவர்களாக இருத்தல்
நமது அடிப்படையான தன்மைகள் யாவை, நமது நிலைப்பாடுகள் யாவை என்பதை நம்மைச் சுற்றியுள்ள சூழல் பிரதிபலிக்கும் என்று ‘சிஃபோபி’ (C4P) என்ற மனநல சிகிச்சை நிலையத்தின் மூத்த மனநல ஆலோசகரான திரு கோபால் கூறுகிறார்.
நம்மை மதிப்பவர்களும் நம்மீது அன்பு காட்டுபவர்களும் நம் சூழலுக்குள் நுழையும்போது அவர்கள் சரியாக மதிக்கப்படுகிறார்களா என்பதற்கான விடை, நாம் அமைத்துக்கொண்டுள்ள சூழலில் உள்ளதாக திரு கோபால் கூறுகிறார்.
நம்மை நாமே நல்ல முறையில் நடத்தத் தவறினோமானால் நமது சூழல் நல்லதாக இருக்காது. தனிமனிதர்கள் தங்களது சொந்த உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் பிறருக்கு மதிப்பும் அரவணைப்பும் தரும் சூழலை உருவாக்க மிகவும் சிரமப்படுவர் என்றும் திரு கோபால் சுட்டினார்.
“நம்மை நாமே அன்புடன் நடத்தாவிட்டால் பிறர்மீது அன்பைக் காட்டுவதில் சிரமப்படுவோம். சிரமப்பட்டு வழங்கும் அன்பு, சீரான தொடர்ச்சியில்லாமல் காலப்போக்கில் தேயக்கூடும். மாறாக, நம் அமைதியிலிருந்து பிறக்கும் அன்பு, நமது ஆளுமையிலிருந்து இயல்பாக விரியும் நீட்சியாக இருக்கும்,” என்றார் திரு கோபால்.
“உண்மைத்தன்மையாக இருப்பது என்பதற்கான பொருள், குற்றங்குறைகள் இல்லாமல் இருப்பது அன்று. ஆனால், அவை குறித்து நேர்மையாக இருக்கலாம். உண்மைத்தன்மை என்பது நேர்மையைப் பற்றியது,” என்றார் திரு கோபால்.
தொடர்புடைய செய்திகள்
ஒரு செயலில் இறங்க முற்படும்போது நம் நோக்கம் என்ன, உண்மைத்தன்மையுடன் நடந்துகொள்கிறோமா அல்லது பிறருக்கு நம்மைப் பிடிக்கவேண்டும் என்பதற்காகச் செயல்படுகிறோமா என்பதையும் நமக்குள் வினவும்படி திரு கோபால் ஊக்குவிக்கிறார்.
சுய பராமரிப்புக்கான வழிமுறைகள்
ஒருவர் தம்மைப் பற்றி அறிந்துகொள்வதிலிருந்துதான் அன்பும் பாசமும் தொடங்குவதாக திரு கோபால் சுட்டினார்.
“முதலில் நீங்கள் உங்களது பண்புகளையும் நோக்கங்களையும் புரிந்துகொள்ளுங்கள். அவை உங்கள் செயல்களுடன் ஒத்துப்போகிறதா என்பதை உற்றுப்பாருங்கள். உலகை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் புரிந்து வைத்துக்கொள்ளுங்கள். பிறர் பேசும்போது சரியாகக் காதுகொடுத்து கேளுங்கள். நேர்மையுடனும் பரிவுடனும் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்,” என்பது அவரது அறிவுரை.
சிரமமான, பாதகமான சூழ்நிலையிலும் அன்புசார்ந்த கொள்கையிலிருந்து மாறாமல் நடந்துகொள்ளும்படி திரு கோபால் இளையர்களைக் கேட்டுக்கொள்கிறார்.
“காதல் தோல்வி, வேலை இழப்பு போன்ற மிகக் கடினமான சூழல்களிலும் தொடர்ந்து நம்மைச் சுற்றி ஆக்ககரமான சூழலைத் தக்கவைத்திட முடியும்,” என்றார்.
இளையர்கள், தங்களுக்கு ஏற்பட்ட வேதனைகளைப் பரிவுணர்வையும் அன்பையும் வளர்க்கப் பயன்படுத்தும்படி அவர் ஊக்குவிக்கிறார்.
“நமக்குள் வலிமையையும் பரிவையும் வளர்ப்பதற்கான பயணம், முடிவில்லாத் தொடர்கதைதான். ஆயினும், இதில் நாம் வைக்கும் ஒவ்வோர் அடியும் முன்னேற்றமே,” என்று திரு கோபால் கூறினார்.