தீபாவளி உணர்வூட்டும் குடும்ப வணிகங்கள்

கைகொடுக்கும் சொந்தங்கள், தாங்கிப் பிடிக்கும் பந்தங்கள்

தீபாவளி உணர்வூட்டும் குடும்ப வணிகங்கள்

படம்: அருண் பாலாஜி

18 Oct 2026 - 6:30 am

5 mins read

பல்லாண்டுகளாக ஆடை, அணிகலன், அலங்காரப் பொருள்களின் அழகை ரசித்து இன்புற்றோரில் சிலர், விழாக்காலங்களில் துணிந்து பண்பாட்டுப் பொருள்களை மையப்படுத்தும் வணிகத்தில் ஈடுபடுவது வழமை. 

வணிகத்தில் எந்த முன்னனுபவமும் இன்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் நம்பி, ஒற்றுமையோடும் உறுதியோடும் கைகோத்து, போட்டி மிகுந்த தீபாவளிச் சந்தையில் களம்புகுகின்றனர்.  

இளமை ததும்பும் புதிய வணிகங்கள் மலரும் இடமாகக் கடந்த சில ஆண்டுகளாகத் திகழும் ‘தேக்கா பிளேஸ்’ கடைத்தொகுதியின் தீபாவளிச் சந்தையில் கடைகளை நடத்தும் சில குடும்பங்கள், தங்களது அனுபவங்களைத் தமிழ் முரசிடம் விவரித்தனர்.

அகத்தில் பிறந்த நறுமணம்

தேக்கா பிளேசின் இரண்டாவது மாடியில்  அமைக்கப்பட்டுள்ள பல்வேறு தற்காலிகக் கடைகளில் ‘வாசகம்’ (Vasagam) எனும் புதிய கடையும் ஒன்று.

சங்கீதா சுந்தரம் - சுரேந்திரன் ஆனந்தன்  இணையர், மூலிகைச் சாம்பிராணி தயாரிப்பிலும் விற்பனையிலும் தற்போது  ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி வணிகத்திற்காகச் சாம்பிராணிப் பொருள்களை  ஒன்றாகத் தயாரித்து மகிழ்வதாக சங்கீதா சுந்தரம் - சுரேந்திரன் ஆனந்தன் இணையர் கூறினர்.
தீபாவளி வணிகத்திற்காகச் சாம்பிராணிப் பொருள்களை ஒன்றாகத் தயாரித்து மகிழ்வதாக சங்கீதா சுந்தரம் - சுரேந்திரன் ஆனந்தன் இணையர் கூறினர். - படம்: அருண் பாலாஜி

மனிதவளத் துறையில் பணியாற்றி வந்த திருவாட்டி சங்கீதா, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வேறு வேலை தேடிக்கொண்டிருந்தபோது இந்தத் தொழில் செய்யும் எண்ணம் தோன்றியது.

“வீட்டில் நாங்களே சொந்தமாக அரைக்கும் மூலிகைச் சாம்பிராணியின் நறுமணம் எங்கள் குடும்பத்தினருக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘ஏன் இதை ஒரு வணிகமாகச் செய்யக்கூடாது?’ என உறவினர்கள் கேட்டபோதுதான் சிறிய அளவில் டிக்டாக் வழியாக விற்றுவந்தோம்,” என்று அவர் கூறினார்.

தொடக்கத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் கிடைத்த வரவேற்பு, பின்னர் நண்பர் வட்டம் வழியாக விரிவடைந்தது. பல்வேறு மாற்றங்களையும் தோல்விகளையும் கடந்து இறுதியில் தங்கள் செய்முறையை இந்த இணையர் செம்மைப்படுத்தினர்.  

“சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்படும் சாம்பிராணிகளையே பலரும் நம்பியுள்ளனர். ஆனால், உள்ளூரிலேயே நாம் வீடுகளில் தயாரிக்கும் தரமான சாம்பிராணியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்று திரு சுரேந்திரன் கூறினார்.

குடும்பமாகத் தொழில் செய்யும்போது பல கருத்து வேறுபாடுகள் வருவது இயற்கைதான். சந்தைப்படுத்துதல், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு எனப் பல்வேறு கோணங்களில் சிந்திக்கும்போது விவாதங்கள் எழுந்தாலும், அதை நலமுற அணுகுவதாகத் கூறுகிறார் திருவாட்டி சங்கீதா.

“சாம்பிராணி அரைக்கும் அந்த நேரத்தில், நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து நேரம் செலவிடுகிறோம். அது வேலைபோலத் தெரியாமல், ஒன்றாக நேரம் செலவிடக்கூடிய, மன அமைதியைத் தரும் பிணைப்பாகவும் மாறிவிடுகிறது,” என்றார் சுரேந்திரன். 

பங்காளிகளான தாய்-மகள் 

மகளின் கற்பனைத் திறனும் தாயாரின் கட்டுக்கோப்பும் இணையும்போது துணிக்கடையில் பல்வகை ஆடைகளுக்குப் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம்.

தலைமுறைகளைக் கடந்து வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஈடுகொடுக்க தாயாரும் மகளும் இணைந்து நடத்தும் ‘குட்ச்’ (Kutch) என்ற துணிக்கடை முற்படுகிறது. 

சிறுவயதிலிருந்து ஆடைகளை விதவிதமாக வடிவமைத்து அணிந்துகொள்வதில் மிகுந்த விருப்பம் இருந்ததாக 53 வயது சுமதி கன்னியப்பன் கூறினார்.

மகள் ஹரிணி சஞ்சய் நாயர், 26 - தாயார் சுமதி கன்னியப்பன்,  53 ,  இணைந்து ஆடை வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகள் ஹரிணி சஞ்சய் நாயர், 26 - தாயார் சுமதி கன்னியப்பன், 53 , இணைந்து ஆடை வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். - படம்: அருண் பாலாஜி

தமது திறமையைக் கண்டு உற்றார் உறவினர் பாராட்டியது திருவாட்டி சுமதிக்கு ஊக்கமளித்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடை வணிகத்தில் ஈடுபட்டு வரும் அவர், ஒன்பது ஆண்டுகளுக்குமுன் இந்த வணிகத்தைத் தொடங்கினார்.

இளைய தலைமுறையினரின் ரசனைக்கு ஈடுகொடுக்க தம் மகள் 26 வயது ஹரிணி சஞ்சய் நாயரின் திறன்கள் வலுசேர்த்ததாக சுமதி குறிப்பிட்டார். சந்தைப்படுத்துதல் துறையில் பயின்ற ஹரிணி, காப்புறுதி முகவராகச் சில காலம் பணியாற்றி, பின்னர் தாயின் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக் களமிறங்கினார்.

“வெளியிடங்களில் பணிபுரிவதைவிட அம்மாவின் உழைப்பையும் வணிக அடையாளத்தையும் பெரிதும் விரிவுபடுத்தவேண்டும் என்பதே என் விருப்பம்,” என்கிறார் திருவாட்டி ஹரிணி.

ஒரு வணிகத்தை இரு வேறு தலைமுறையினர் இணைந்து நடத்தும்போது சவால்கள் வருவது இயல்புதான் என்கின்றனர் தாயும் மகளும். “நான் பாரம்பரியமான ஆடைகளை யோசித்தால், ஹரிணி தற்கால இளையர்கள் விரும்பும் புதுமையான வடிவமைப்புகளைப் பற்றிச் சிந்திப்பார். தொடக்கத்தில் கருத்து வேறுபாடுகள் முளைத்தபோதும், இப்போதைய இளைய தலைமுறை வாடிக்கையாளர்களைக் கவர ஹரிணியின் யோசனைகளே பெரிதும் உதவுகின்றன,” என்று பெருமையுடன் கூறினார் திருவாட்டி சுமதி.

மகனின் பெயரில் வணிகம்

‘ரோஷன்’ கடையில் விற்கப்படும் லட்டு, ஜிலேபி போன்ற இந்தியத் தின்பண்டங்கள் போல் தோன்றும் பொருள்கள், உண்மையிலேயே நாவூற வைக்கும் நூதன வடிவ மெழுகுவத்திகள். இவற்றுக்கு ஒளியேற்றலாமே தவிர, சாப்பிட முடியாது. 

2021ல் ஷரண் கோர்- ரவீந்தர் சிங் இணையர்  தொடங்கிய இந்த வணிகத்திற்கு, தங்களின் மகனான ‘ரோஷன்’ பெயரைச் சூட்டினர். ரோஷன் என்றால் ‘ஒளி’ என்று பொருள். தீபாவளி என்பது ஒளித் திருவிழா என்பதால் அப்பெயர் சாலப் பொருந்தும் என்று திருவாட்டி ஷரண் பெருமிதத்துடன் கூறினார். 

மகன் பெயரில் கடை தொடங்கி, பலகார வடிவ மெழுகுவத்திகளை விற்கும் ரவீந்தர் சிங் - ஷரண் கோர்.
மகன் பெயரில் கடை தொடங்கி, பலகார வடிவ மெழுகுவத்திகளை விற்கும் ரவீந்தர் சிங் - ஷரண் கோர். - படம்: அருண் பாலாஜி

மூன்று பிள்ளைகளைப் பார்த்துக்கொண்டே இத்தொழிலை நடத்துவது சவாலானது என்றாலும், அதற்குத் தம் குடும்பத்தின் முழுமையான ஆதரவே காரணம் என்கிறார் திருவாட்டி ஷரண் கோர்.

லட்டு, ஜிலேபி, மோதகம், காஜு கத்லி வடிவில் செய்யப்பட்ட வாசனை மெழுகுவத்திகளை இந்தியாவில் பல குடும்பங்கள் கைவினைப்பொருள்களாகத் தயாரிப்பதாக இந்த இணையர் கூறுகின்றனர்.

“சூரத், அகமதாபாத் போன்ற நகரங்களில் உள்ள இல்லத்தரசிகள் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், அவர்களால் கைகளால் சிறப்பாக செய்யப்பட்ட இந்தக் கலைப்படைப்புகளைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவந்து விற்பனை செய்கிறோம்,” என்று திரு ரவீந்தர் கூறினார்.

குடும்பங்களிலிருந்து தொடங்கி, குடும்பங்களையே சேரும் இந்த மெழுகுவத்திகளைத் தயாரிக்க தம் கணவரின் முழுமையான ஆதரவும் உதவியும் நல்கியதாகத் திருவாட்டி ‌‌ஷரண் மகிழ்ச்சியுடன் கூறினார்.

வழிகாட்டும் தந்தையின் மதிநுட்பம்

இயற்கைச் சருமப் பராமரிப்புப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யும் ‘கல்ப்ஸ் பியூட்டி கிட்சன்’ (Kalps Beauty Kitchen) அமைப்பின் பின்னணியில் சுவை மிகுந்த தந்தை-மகள் கூட்டுறவு பொதிந்துள்ளது. 

நிறுவனத்தின் நிறுவனரான கல்பனா சர்வேஸ்வரன், கடந்த ஏழு ஆண்டுகளாக இயற்கை முறையில் சருமப் பராமரிப்பு, அழகுப் பொருள்களைத் தயாரித்து வருகிறார். 

தந்தை சர்வேஸ்வரனின் உதவியுடன் இயற்கை சருமப் பராமரிப்புப் பொருள்களை விற்றுவரும் திருவாட்டி கல்பனா.
தந்தை சர்வேஸ்வரனின் உதவியுடன் இயற்கை சருமப் பராமரிப்புப் பொருள்களை விற்றுவரும் திருவாட்டி கல்பனா. - படம்: அருண் பாலாஜி

வணிகம் வளரத் தொடங்கியதும் உற்பத்திப் பணிகளில் உதவிக்காகத் தமது 80 வயது தந்தை ஆறுமுகம் சர்வேஸ்வரனின் உதவியை அவர் நாடினார்.

“அப்பாவிற்குச் சமையலில் இருந்த பேரனுபவமும் கைப்பக்குவமும், எங்கள் அழகுப் பொருள்களைத் துல்லியமாகவும் இயற்கையான முறையிலும் தயாரிக்க பெரிதும் உதவுகின்றன,” என்றார் திருவாட்டி கல்பனா.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தந்தையுடன் திருவாட்டி கல்பனா, கடந்த ஐந்து ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறார்.

“தந்தை- மகள் உறவைக் காட்டிலும் தொழில்முறை கூட்டாளிகளாக இணைந்து பணியாற்றுவது முற்றிலும் மாறுபட்ட அனுபவம். தொடக்கத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் எழுந்தபோதும் இந்த வணிகப் பயணம்தான் என் தந்தையின் முழுத் திறமையையும் அவரது உழைப்பையும் எனக்கு இன்னும் ஆழமாகப் புரிய வைத்தது,” என்று திருவாட்டி கல்பனா குறிப்பிட்டார்.

தீபாவளி என்பது அன்பையும் ஒளியையும் பகிர்ந்துகொள்ளும் திருவிழா என்பதால்  இத்தகைய குடும்ப வணிகங்கள் ஒவ்வொரு பொருளிலும் அன்பையும் நேர்மறை எண்ணங்களையும் குழைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக அவர் கூறுகிறார்.  

வாடிக்கையாளர்களை வரவேற்கும் தோக்கா பிளேஸ்

தோக்கா பிளேஸ் கடைத்தொகுதியில் இதற்குமுன் சிறிய அளவில் நடத்தப்பட்டு வந்த தீபாவளிச் சந்தை, இம்முறை முதன்முறையாக மூன்று தளங்களில் நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ‘யுனிக் வெடிங் ஸ்டார்ஸ்’ (Unique Wedding Stars) நிறுவனத்தைச் சேர்ந்த திருவாட்டி ஜெனேல் ஹேமமாலினி கூறினார். இவவாண்டு கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட வணிகங்கள் அதில் தங்களது கடைகளை அமைத்துள்ளன.

இங்குள்ள பெரும்பாலான வணிகர்கள் இணையம்வழி தொழில் செய்துவரும் சிறுதொழில் குடும்பங்கள்தான் என்று இணை ஏற்பாட்டாளரான ‌‌’ஷர்வா’ நிறுவனத்தைச் சேர்ந்த திருவாட்டி கோபால் அமுதவல்லி குறிப்பிட்டார்.

“குடும்பங்களுக்காக குடும்ப வணிகங்கள் சேவையாற்றும் தளமாக தேக்கா பிளேஸ் தீபாவளிச் சந்தை திகழ்கிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்