1990களிலிருந்து சிங்கப்பூரில் பக்கவாதத்தால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை ஆறு மடங்கு வரை குறைந்துள்ளது.
ஆயினும், பக்கவாத அறிகுறிகள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
பேங்காக்கில் நடைபெற்ற ‘ஹோட்டல் மேனேஜ்மெண்ட் ஏஷியா 2026’ மாநாட்டில் ‘சீமன்ஸ் ஹெல்தினீர்ஸ்’ (Siemens Healthineers) நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இதைத் தெரிவித்தது.
பக்கவாதச் சிகிச்சை தரத்தைத் தக்கவைத்துக்கொள்ள, ‘ஃபாஸ்ட்’ எச்சரிக்கை அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் நிபுணத்துவச் சிகிச்சையாளர்களுக்கான முதலீட்டைத் தொடர வேண்டும் என்றும் சிங்கப்பூர் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏழு முன்னணி நிபுணர்களின் கருத்துகளை இந்த அறிக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
உலக அளவில் நால்வரில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் பக்கவாதம் ஏற்பட சத்தியமுள்ளதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது முக்கியம்.
முகம் கோணுவது, கை வலுவிழப்பது, பேச்சு தடுமாறுவது போன்ற பக்கவாத அறிகுறிகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததே, சிகிச்சை அளிப்பதில் நிலவும் மிகப்பெரிய இடைவெளியாக நிபுணர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உலகச் சுகாதார நிறுவனத்தின் வரையறைக்குட்பட்ட தென்கிழக்காசிய வட்டாரத்தில், உலக அளவில் பக்கவாதத்தால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகளில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானவை பதிவாகின்றன.
மேலும், வளர்ந்துவரும் நாடுகளில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளோரில் பாதியளவினர் இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். அதோடு, பக்கவாதத்திலிருந்து மீண்டு நீண்டகால உடற்குறைக்கு ஆளானோரில் மூன்றில் ஒரு பங்கினரும் இப்பகுதியில் வாழ்கின்றனர்.
சிங்கப்பூரில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நான்காவது முக்கியக் காரணமாகப் பக்கவாதம் உள்ளது. மரண விகிதம் தொடர்ந்து குறைந்துள்ளபோதிலும், மூப்படைந்துவரும் மக்கள்தொகையால் இங்கு பக்கவாதப் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தென்கிழக்காசியாவில் சுகாதார அமைப்புகள் பக்கவாதப் பராமரிப்புப் பயணத்தில் வெவ்வேறு கட்டங்களில் இருந்தாலும், அவை எதிர்கொள்ளும் சவால்கள் பொதுவானவை என்று சீமன்ஸ் ஹெல்தினீர்ஸ் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் தலைவர் பேப்ரிஸ் லெகெட் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் பக்கவாதச் சிகிச்சையில் மருத்துவமனைகள் காட்டும் அதே அவசரத்தை மக்களிடமும் கொண்டுசேர்க்க வேண்டும். அப்போதுதான் நோயாளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் அறிகுறிகளை விரைவாகக் கண்டறிந்து செயல்படுவார்கள் என்று சீமன்ஸ் ஹெல்தினீர்ஸ் சிங்கப்பூர், மலேசியா, புரூனைக்கான மேலாண் இயக்குநர் ஐ லி சியோ கூறினார்.

