உயரத்தில் பணியாற்றும்போது சிறு தவறு நேர்ந்தாலும் விளைவுகள் பெருங்கவலைக்கு உரியதாக இருக்கும். டிசம்பர் 4ஆம் தேதி கட்டடக் கூரையில் பணியாற்றி வந்த 21 வயது மியன்மார் நாட்டவர், பத்து மீட்டர் உயரத்திலிருந்து விழுந்து மாண்டார்.
கட்டுமானத் துறையில், 2024ன் முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதியில் மாண்டோரின் எண்ணிக்கை ஐந்திலிருந்து 15ஆக மும்மடங்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில், வேலையிடப் பாதுகாப்பின் பல அம்சங்களை வெளிநாட்டு ஊழியர்களுக்கு நினைவூட்டுவதற்காக ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழு, பல பங்காளி அமைப்புகளுடன் இணைந்து கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் ‘ஹீரோகோட்’ (HeroCODE) நிகழ்ச்சியை இரண்டாம் ஆண்டாக நடத்தியது.
வேலையிடப் பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள், முதலாளிகள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் வலியுறுத்தும் நெறிமுறையே ‘ஹீரோகோட்’. இதனை ‘ஃபியூஷன் சேஃப்டி’ நிறுவனம் உருவாக்கியது.
‘தைரியமாகச் செயல்படு’, ‘சவால்களை ஏற்கவும்’, ‘ஆர்வத்துடன் செய்யவும்’, ‘மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள்’ என்ற நான்கு ‘ஹீரோகோட்’ நெறிமுறைகளை வெளிநாட்டு ஊழியர்களின் மனத்தில் பதியவைக்கும்படி பல நடவடிக்கைகள் இடம்பெற்றன.
“பெரும்பாலான நிறுவனங்களிடம் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளன. ஆனால், அவற்றைச் செயல்படுத்தக்கூடிய அதிகாரம் சில நேரங்களில் அவர்களுக்கு இல்லை. ‘ஹீரோகோட்’ மூலம் அவர்களுக்கு உதவ எண்ணுகிறோம்,” என்றார் ‘ஃப்யூஷன் சேஃப்டி’ நிறுவனத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் முருகேசன் சிங்காரவேலு.
வேலையிடப் பாதுகாப்பை அதிகரித்தல்
“வெளிநாட்டு ஊழியர்கள் எழுப்பும் எந்தக் கேள்வியும் தவறானதல்ல. அனைத்துக் கருத்துகளுக்கும் நிறுவனத்தார் செவிசாய்க்க வேண்டும். தொழிலாளர்களைத் தண்டிப்பது அவர்களது வளர்ச்சிக்கு உதவாது,” என்றார் ‘லைஃப் செண்டர் சமூகச் சேவைகள்’ அமைப்பின் தலைவரும் ‘ஃபியூஷன் சேஃப்டி’யின் ஆசிய பசிபிக் செயல்பாடுகளின் பொதுமேலாளருமான ஃபிலிப் செல்வம்.
கூடுதலான ‘கடைசி நிமிட அபாய மதிப்பீடு’களின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். “காலையில் அபாய மதிப்பீட்டைச் செய்திருந்தாலும், பிற்பகலுக்குள் ஏதேனும் மாறியிருக்கலாம். அதனால், மீண்டும் ஒரு மதிப்பீட்டைச் செய்யவேண்டும்,” என அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
வேலையிடப் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியான, இலவசக் கற்றல் அனுபவம் வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தேவை என்றார் ’ஏக்சஸ் சேஃப்டி ரெஸ்கியு’ (ஏஎஸ்ஆர்) நிறுவனத்தின் பயிற்சி நிலையத் தலைவர் ஷான் செல்வம்.
“ஊழியர்கள் சிங்கப்பூருக்கு வந்ததும் மூன்று மாதங்கள் மேற்கொண்ட அடிப்படைப் பயிற்சியோடு பணியாற்றுகின்றனர். இது போதாது. அதனால், மாதத்திற்கு ஒருமுறை இதுபோன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய விரும்புகிறோம்,” என்றார் ஷான்.
“மேற்பார்வையாளர் ஊழியர்களுக்குச் சரியான தகவலைக் கூறினால் விபத்துகளைக் குறைக்கலாம். இருதரப்பினரும் கவனக்குறைவைத் தவிர்க்கவேண்டும்,” என்றார் ‘ஏக்டிவ் ஃபையர்’ நிறுவனத்தின் வேலையிடப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஷேக் மாலிக் யாரப்பாஷா.
இது தவிர்த்து, பணப் பற்றாக்குறையால் ஏற்படும் மன உளைச்சலும் வெளிநாட்டு ஊழியர்களின் கவனக்குறைவுக்குக் காரணமாகக்கூடும் என்றார் வாகன ஓட்டுநர் இளங்கோவன் சுப்பையா.
அதே நாளில், ‘ஹோப் இனிஷியேடிவ் அலையன்சின்’ சிங்கப்பூர் கபடிக் கூட்டணி (Kabaddi Alliance of Singapore - HIA), மனிதவள அமைச்சின் ‘ஏஸ்’ குழுவின் ஆதரவுடன் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கபடிப் போட்டிகளை நடத்தியது. போட்டி கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் தொடங்கி, ஜூரோங் லேக் கார்டன்சில் நிறைவுபெற்றது. 24 அணிகள் போட்டியிட்டன. வெற்றிபெற்ற முதல் நான்கு குழுக்களுக்கு மனிதவள அமைச்சர் டான் சீ லெங் பரிசு வழங்கினார்.