ஆவி பறக்கும் இறைச்சி ‘சூப்’, மிருதுவான பதத்தில் இறைச்சி, மணக்கும் கொத்தமல்லி.
தரமான இறைச்சி சூப்பை பல இடங்களில் தேடி அலைந்தேன்.
சைனாடவுன் காம்ப்ளெக்ஸ் உணவு நிலையத்திலுள்ள ஒரு கடை அத்தகைய ‘சூப்’பை பரிமாறுவதாகக் கேள்வியுற்றேன்.
ஸ்மித் ஸ்திரீட்டில் அமைந்துள்ள புளோக் 335ன் இரண்டாவது மாடியில் 270 கடைகளுக்கிடையே அந்த இறைச்சி ‘சூப்’ கடையைத் தேடினேன்.
‘கூக்@சைனாடவுன்’ என்ற அந்தக் கடை என் கண்ணில் பட்டுவிட்டது!
கடையை நடத்துபவர் இங் காய் சூன்.
இவரது கடை, உணவங்காடி நிலையத்தின் ஓர் ஓரத்தில் இருப்பதால் அதிகமானோரின் கண்ணில் சட்டென்று படாது.
“இங்குள்ள மற்ற கடைகளிலும் தரமான உணவு கிடைக்கிறது. எனினும், என் கடை இருக்கும் இடம் வரை பலரும் வருவதில்லை,” என்று 57 வயது திரு இங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
எனினும், அதுபற்றி இவர் அதிகம் கவலைப்படுவதில்லை. ஏனெனில், இவரது கடைக்கு வாடகை மாதம் ஒரே ஒரு வெள்ளிதான்.
கடந்த 2023 செப்டம்பரில் அந்தக் கடையை ஏலக் குத்தகையின் மூலம் பெற்ற திரு இங், ஜனவரி முதல் கடையை நடத்தி வருகிறார்.
“பல மாதங்களாக இந்தக் கடையின் குத்தகையை எவரும் எடுக்க முன்வரவில்லை. என் வீட்டுக்கு அருகே அமைந்துள்ள இந்தக் கடை, அளவில் எனக்கு வசதியாக உள்ளது. காற்றோட்டமாகவும் உள்ளது. ஏலத்தில் ஒரு வெள்ளி கட்டினேன், கிடைத்தது,” என மகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்தக் கடையில் இறைச்சி சூப்புடன் ஆலு கோபி சப்பாத்தி, சாம்பார், குழம்பு, காய்கறிக் கலவை ஆகியவை விற்கப்படுகின்றன. வாரத்தில் இவர், சனி, ஞாயிறு மட்டுமே இரண்டே இரண்டு மணி நேரத்திற்கு (காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை) வேலை செய்கிறார்.
இந்தக் கடையுடன் சைனாடவுனில் இவர் கிட்டத்தட்ட இதே உணவுப்பொருள்களை விற்கும் மற்றொரு கடையையும் நடத்துகிறார்.
அந்தக் கடைக்கும் அவர் குறைந்த வாடகையாக 44 வெள்ளி செலுத்துகிறார்.
இறைச்சி சூப்பின் விலை $8.50. பருப்பு சேர்க்கப்பட்ட, மஞ்சள் நிறம் தோய்ந்த இந்த சூப்புடன் ஆறு இறைச்சித் துண்டுகளை வாடிக்கையாளர்கள் சுவைக்கலாம்.
எலும்பிலிருந்து சதையைப் பிளாஸ்டிக் கரண்டியாலேயே மெல்ல சுரண்டிச் சாப்பிடலாம்.
வாரத்தில் இரண்டே இரண்டு நாள்களுக்குக் கடை நடத்துவதால் இறைச்சியை வாங்கி குளிர்பதனப் பெட்டியில் வைப்பதில்லை என்றார் திரு இங்.
ஒரு நாளைக்கு அவர் 10 மடங்கு அளவுக்கான சூப்பைப் பரிமாறுவார். மாதத்திற்கு இவர், இந்தக் கடையிலிருந்து $1,000 லாபம் காண்கிறார்.
“நான் சீனப் பாணியிலும் இந்தியப் பாணியிலும் தயாரிக்கப்படும் இறைச்சி சூப்புகளை விரும்பி உண்பேன்,” என்றார் அவர்.
உணவங்காடி நிலையங்களில் பணிபுரிவோர், சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசியாக இருக்கவேண்டும் என்பதால் உதவிக்கு ஆளைக் கண்டுபிடிப்பதுதான் இவருக்குச் சிரமமாக உள்ளது.
“இருந்தாலும், எங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து உதவி கிடைக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு மாத முன்னறிவிப்புடன் உணவங்காடி அதன் கடைக் குத்தகையை நிறுத்திக்கொள்ளலாம். காப்பிக் கடையில் குத்தகை எடுப்பவர்களோ, வழக்கமாக மூன்று ஆண்டு ஒப்பந்தத்திற்குக் கட்டுப்படவேண்டும்,” என்றார் திரு இங்.
குளிர்பதனப் பெட்டிகளுக்கான எரிசக்திச் செயல்திறன் மானியம், உணவங்காடி உற்பத்தித்திறன் மானியம் ஆகியவையும் உதவியாய் உள்ளன என்றார் அவர்.
இவையெல்லாம் தாண்டி இந்தத் தொழிலை விருப்பத்துடனே செய்வதாக முகத்தில் புன்னகை ததும்ப திரு இங் கூறினார்.