தைரியமான அச்சுகள் முதல் கண்ணைக் கவரும் வடிவங்கள்வரை, இந்திய ஆடை அலங்காரம் உலகளவில் எவ்வாறு உணரப்பட வேண்டும் என்பதை ஆடை வடிவமைப்பாளர் மசாபா குப்தா நீண்ட காலமாகவே மறுவரையறை செய்து வருகிறார்.
இந்தியா முழுவதும் 23 தனிக்கடைகளை கொண்டுள்ள ‘ஹவுஸ் ஆஃப் மசாபா’ நிறுவனத்தின் நிறுவனரான 35 வயது மசாபா, அதைச் சிங்கப்பூர், லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அனைத்துலக நகரங்களுக்கும் வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளார்.
பிரியங்கா சோப்ரா, சிமோன் ஆஷ்லீ போன்ற அனைத்துலக பிரபலங்கள் அவரது வடிவமைப்புகளை அணிந்துள்ளனர்.
சிங்கப்பூரில் நடைபெற்ற அவரது முதல் முழுமையான ஆடை அலங்காரக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக அவர் கடந்த வாரம் சிங்கப்பூருக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பினார். மெலஞ்ச் சிங்கப்பூர் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி வியாழக்கிழமை (செப்டம்பர் 26) கிராண்ட் காப்தோர்ன் வாட்டர்ஃபிரன்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்திய நகை வடிவமைப்பாளர் ‘அம்ரபாலி ஜுவல்ஸ்’ (Amrapali) நிறுவனத்துடன் இணைந்து மசாபா உருவாக்கிய 40 வகைகளைக் கொண்ட நுண்ணிய நகைத் தொகுப்பு (Fine Jewellery Collection) சிங்கப்பூர் நிகழ்ச்சியில் உலகளாவிய அளவில் முதல்முறை அறிமுகம் கண்டது.
இந்தத் தொகுப்பில், மசாபாவின் வடிவமைப்புகளின் முக்கிய அடையாளங்களான கேமராக்கள், பனை ஓலைகள், நந்தி வடிவங்கள் 18 காரட் தங்கத்தில் செதுக்கப்பட்டு, வைரம், மாணிக்கம், மரகதம், நீலக்கல், முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டன. இதன்வழி, அன்றாடம் அணியக்கூடிய அழகிய கலைப் படைப்புகளை நவீனப் பெண்களுக்கு வழங்க நினைத்தார் மசாபா.
இவை ஒரு வெள்ளைச் சட்டை போன்ற எளிய ஆடையுடன் இணைத்து அன்றாட வாழ்க்கைக்கு தினமும் அணியக்கூடியவை, என்றும் மசாபா கூறினார்.
நகை தொகுப்பின் அறிமுகத்துடன், மசாபாவின் அண்மைய ஆடைத் தொகுப்புகளும் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
பாரம்பரிய இந்திய இனிப்புகளில் பயன்படுத்தப்படும் வெள்ளி, தங்க உறைகளிலிருந்து உத்வேகம் பெற்ற ‘வாரக்’ தொகுப்பு ஆடம்பரத்தையும் எளிமையையும் இணைப்பதாக மசாபா கூறினார்.
தனித்துவத்தைக் கொண்டாடும் வண்ணமயமான லெஹங்காக்களையும் சேலைகளையும் கொண்ட ‘மசாபா பிரைட் 2025’ தொகுப்பு நவீன விருப்பங்களுக்கேற்ப திருமண மரபுகளைப் புதுப்பித்து விளக்குவதாக அவர் கூறினார்.
தெற்காசிய வடிவமைப்பின் உலகளாவிய தன்மையை வலியுறுத்தினார் மசாபா. “இந்திய ஆடை அலங்காரங்கள் நீண்ட காலமாக ‘பாரம்பரியம்’ என்ற குறுகிய வரம்புக்குள் மட்டுமே பார்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் நமது பாரம்பரியத்தை புதிய, துணிச்சலான, நவீன வடிவில், எங்கும், எந்நாளும் அணியக்கூடியதாய் வெளிப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்,” என்றார் அவர்.
கலாசார, பாணி எல்லைகளைத் தாண்டிய நகைவகைகளுடன், அவரது தனித்துவமான அச்சு வடிவங்களும், பல்துறை ஆடை வடிவங்களும் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்காக முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டன.
சிங்கப்பூர் கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர்கள், தங்களுக்கு பிடித்த நகைகளையும் ஆடைகளையும் அணிந்து பார்ப்பதற்கும், உடனடியாக வாங்குவதற்கும், மசாபாவுடன் நேரடியாகப் பேசுவதற்கும் வாய்ப்புக் கிடைத்தது.
“இந்த நிறுவனத்தின் தனித்துவமான வடிவமைப்புப் பாணி, கையொப்ப அச்சுகள், சிறப்பான வடிவங்கள் இந்திய பாரம்பரியத்தை நவீனத்துடன் அருமையாக இணைக்கின்றன,” என்று இந்தியாவில் வடிவமைக்கப்படும் ஆடைகளின் இருப்பு மையமான (stockist) மெலஞ்ச் சிங்கப்பூர் நிறுவனத்தின் நிறுவனர் சமியா கான், 50, கூறினார்.
இந்நிறுவனம் 2021 முதல் ‘ஹவுஸ் ஆஃப் மசாபா’ வடிவமைப்புகளைச் சிங்கப்பூரில் விற்பனை செய்துவருகிறது.
இந்த நிகழ்ச்சி, கைவினைத்திறன், பாரம்பரியம், தனித்துவத்தைக் கொண்டாடியதாக மசாபா குறிப்பிட்டார்.
“இந்திய ஆடை அலங்காரம் என்பது இந்தியாவிற்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட துறை அல்ல. அது உலகளாவிய பார்வையை உடையது, எல்லா இடங்களுக்கும் சொந்தமானது,” என்று அவர் கூறினார்.