தானியக்கமயமாகும் வீட்டுப் பணிகள்

2 mins read
36467a9a-040d-4760-b064-6fb1ec48c37f
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வணிக, பொருளாதாரம் மட்டுமின்றி, தனிமனிதப் பயன்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதை விரைவில் பார்க்கலாம். - படம்: பிக்சாபே

வீட்டிலுள்ள குழந்தைகள் பெரியவர்களைக் கவனித்துக்கொள்வது, வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள் செய்வது, கார் பராமரிப்பு, செல்லப்பிராணி வளர்ப்பு என அனைத்தும் தானியக்கமயமாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.

உலகின் பல மூலைகளில் ஒவ்வொரு மணித்துளியிலும் தொழில்நுட்ப மேம்பாடுகள் நடந்தேறி வருகின்றன. வீட்டின் வரைபடத்தை அறிந்து தானே பெருக்கித் துடைக்கும் கருவிகள் தொடங்கி, குளிர்சாதனப் பெட்டிக்குள் சிறிய படக்கருவி பொருத்தப்பட்டு உள்ளே இருப்பவற்றை பொருள்கள் வாங்குமிடத்திலிருந்தே பார்ப்பது, ஒருவரது காப்பி அருந்தும் வழக்கத்தைக் குறித்துக் கொண்டு உரிய நேரத்தில் உரிய பக்குவத்தில் கலந்து தரும் இயந்திரங்கள் வரை வழக்கத்துக்கு வந்துவிட்டன.

எதிர்காலத்தில், “குளிர்சாதனப் பெட்டியில் கொத்தமல்லிக்கீரை தீரப்போகிறது, வாங்க வேண்டும்; பால் காலாவதியாகும் நாள் நெருங்குகிறது, விரைவில் பயன்படுத்துங்கள்” உள்ளிட்டவற்றையும் இயந்திரங்களே சொல்லத் தொடங்கலாம்.

“இவை நடைமுறைக்கு வர நூறாண்டுக் காலம் தேவையில்லை, இன்னும் சில ஆண்டுகளிலேயே நடக்கும். ஏறத்தாழ 40 விழுக்காட்டு வீட்டு வேலைகள், பராமரிப்புப் பணிகள் ஆகியவை அடுத்த பத்தாண்டுகளில் தானியக்க முறையில் நடைபெறத் தொடங்கும்,” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இணைய ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.

வீட்டு வேலைகளில், சமைத்தல், சுத்தம் செய்தல், தேவையான பொருள்களை வாங்குதல் ஆகியவற்றில் 44 விழுக்காடு, தானியக்க முறைக்கு மாறிவிடும் என்கிறது இந்த ஆய்வு. குழந்தையைப் பராமரித்தல், கற்பித்தல், வயதான குடும்ப உறுப்பினரைக் கவனித்துக்கொள்ளுதல் ஆகியவற்றில் 28 விழுக்காட்டுப் பணிகள் தானியக்கமயமாகும்.

அடுத்த பத்து ஆண்டுகளுக்குள், வீட்டு வேலை போன்ற சில ஊதியமற்ற பணிகளில் செலவிடப்படும் நேரத்தில் சராசரியாக 39 விழுக்காடு தானியக்க முறையால் குறைக்கப்படும் என்று இங்கிலாந்து, ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த மாற்றத்தின் அடுத்த கட்டமாக குழந்தைப் பராமரிப்புக்கான நேரமும் 21 விழுக்காடு குறையும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஏற்கனவே மாதம் செலுத்த வேண்டிய கட்டணங்களுக்கான நினைவூட்டல் தொடங்கி பலவற்றையும் தொழில்நுட்பம் எளிதாக்கிவிட்ட நிலையில், பெண்கள் பெரும்பாலும் செய்வதாகச் சொல்லப்படும் வீட்டுப் பராமரிப்புப் பணிகளும் தானியக்கமயமாக்கப்படுவது, சமநிலையை எட்டவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்