பயணத்தின்போது மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்கான வழிகள்

3 mins read
e24e0343-8faa-4357-88f7-29679713b3fb
தொலைதூரப் பயணங்களின்போது மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பல வழிகள் உள்ளன. - படம்: ஐஸ்டோக்

புதிய இடம், புதிய கலாசாரம். விடுமுறைக் காலத்தில் வெளிநாட்டிற்குச் சுற்றுலா மேற்கொள்ளும்போது நாம் புதியனவற்றை பல காண்கிறோம், பலவற்றுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறோம்.

சுற்றுப்பயணத்தை இன்பமாகக் களிக்க நமது உடல் ஆரோக்கியமும் கைகொடுக்க வேண்டும். பயணத்திற்கு முன்னர் தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்வது மிக முக்கியமான ஒன்று.

சுற்றுப்பயணங்களில் பெரும்பாலான நேரத்தில் வழக்கமாக ஏற்படும் சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டு பலருக்கு மலச்சிக்கலும் ஏற்படுகிறது.

உடலில் நீரேற்றம் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம் என உணவு நிபுணர்கள் கூறுகின்றனர்.

அடிக்கடி கழிவறைக்குச் செல்வதைத் தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் பருகாமல் பலர் வெளிநாட்டுப் பயணங்களில் ஈடுபடுகின்றனர்.

பயணங்களின்போது ஏற்படும் மலச்சிக்கல் பொதுவாக உடல் வறட்சி, தினசரி வழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள், உணவு முறையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாக உண்டாகிறது.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காதபோது மலம் இறுகிப்போய் வெளியேறுவதற்கு மிகவும் கடினமாகும்.

குறைவான நார்ப்பொருள் உள்ள உணவுகள், நீண்டநேர விமான அல்லது வாகனப் பயணங்களின்போது தொடர்ந்து அமர்ந்திருப்பது, ஒருவரின் செரிமான மண்டலத்தின் வேகத்தைக் குறைத்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

பலர் செல்ல வேண்டிய இடத்தை அடைந்த பிறகு சோர்வாகவோ, வயிறு உப்பலாகவோ அல்லது மலம் கழிக்க முடியாமலோ போகும் வரை நீர்ச்சத்துக் குறைபாடுதான் மலச்சிக்கலுக்கு முக்கியக் காரணம் என்பதை உணருவதில்லை.

பயணத்தின்போது போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், சரும வறட்சி, சோர்வு, தலைவலி போன்ற பொதுவான பயண உபாதைகளையும் தடுக்க உதவும்.

எளிய முறையில் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கலாம். விமான நிலையப் பாதுகாப்புச் சோதனைக்கு ஒரு காலியான மறுசுழற்சி நீர் போத்தலை எடுத்துச் சென்று பின்னர் சோதனை முடிந்ததும் அதில் தண்ணீர் நிரப்பிக்கொள்ளலாம்.

இப்போது பெரும்பாலான விமான நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இடங்கள் இருப்பதால், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு போத்தலை எளிதாக நிரப்பிக்கொள்ள முடியும்.

விமானத்தில் பானங்கள் வழங்கப்படும் போதெல்லாம் வேறு ஏதேனும் பானம் குடித்தாலும் கூட ஒரு போத்தல் தண்ணீரையும் சேர்த்துக் குடிக்கலாம்.

விமானப் பயணம் முழுவதும் அவ்வப்போது தண்ணீர் குடிப்பது நல்லது. இதனால் அடிக்கடி கழிவறைக்குச் செல்ல வேண்டியிருந்தாலும் நடப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உடல் இறுக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

வாகனத்தில் பயணம் செய்தாலும் நீர்ச்சத்து மிக அவசியம். விமானப் பயணத்தின்போது ஏற்படும் அளவுக்கு உடல் வறட்சி ஏற்படாவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்.

மேலும், செரிமானத்தை ஊக்குவிக்க ஓரிரு மணிநேரத்திற்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்தி, உடலசைத்து சிறிது நேரம் நடக்கலாம்.

இவற்றுக்கு அப்பாற்பட்டு, அதிக கொழுப்புச் சத்து இருக்கும் உணவைத் தவிர்ப்பது சிறந்தது. செரிமான மண்டலம் சீராக இயங்க உடல் இயக்கத்தில் இருப்பது அவசியம்.

விமானம், ரயில் அல்லது வாகனப் பயணங்களில் இது சவாலானதாக இருந்தாலும், உடலை அசைக்கும் இடைவேளைகளைத் திட்டமிடுவதன் மூலமோ அல்லது அமர்ந்தபடியே செய்யும் சிறிய பயிற்சிகள் மூலமோ ஒருவர் முடிந்தவரை உடல் அசைவுகளையும் நீட்சிப் பயிற்சிகளையும் செய்ய முயற்சி செய்யலாம்.

பயணத்தின்போது மலச்சிக்கலுக்கு உணவும் உடற்பயிற்சியும் பலன் அளிக்காவிட்டால் மலத்தை இளக்கும் அல்லது மென்மையாக்கும் மருந்தை உட்கொள்ளத் தயங்க வேண்டாம்.

ஆனால், எந்த மருந்தை உட்கொள்ள வேண்டும் என்பதை முதலில் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னர் அதைப் பயன்படுத்தலாம்.

குறிப்புச் சொற்கள்