தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரவேற்பறையை அழகாக்கும் சாய்விருக்கை தேர்வு

2 mins read
d7c89c5b-ca89-458d-8ee8-9b6a464baf40
‘ரிக்லைனர்’ எனும் சாயும் தன்மையுள்ள சோஃபாக்கள் பிரபலமாக இருந்தாலும், அவை வழக்கமான இருக்கைகள் தரும் நேர்த்தியான தோற்றத்தை வழங்குவதில்லை. இவை, தோற்றத்தைவிட வசதிக்கு முக்கியத்துவம் தருவோர்க்கு ஏற்றவை. - படம்: பிக்சா பே

வரவேற்பறைகளின் மையமாக, வீடுகளுக்குள் நுழைந்தவுடன் அனைவரது கண்கள் செல்வதும், வீடுகளில் பெரும்பாலான நேரம் அனைவரும் செலவிடுவதும் ‘சோஃபா’ எனும் சாய்விருக்கைகளில்தான்.

வரவேற்பறையின் நீளம்-அகலம், சுவர் நிறம், பயன்பாடு ஆகியவற்றுக்கேற்ப அவற்றைத் தேர்ந்தெடுப்பது அவசியம். குறிப்பாக, அதன் தொடு உணர்வுக்கேற்றபடி தேர்ந்தெடுப்பதும் முக்கியம்.

வண்ணம், அளவுகள்

இரண்டு மீட்டர் நீளமுள்ள சுவற்றுக்கு இணையாக வைக்கத் திட்டமிருந்தால், அதிகபட்சமாக 1.8 மீட்டர் வரையுள்ள சாய்விருக்கைகளைத் தேர்ந்தெடுக்கலாம். பக்கத்தில் சிறு மேசை வைக்கும் விருப்பம் இருந்தால் இன்னும் குறைவான நீளத்தில் தேர்வுசெய்ய வேண்டும்.

நிறத்தைப் பொறுத்தமட்டில் 60/30/10 எனும் விதியைப் பின்பற்றுவது சிறந்தது. சுவர் முழுவதும் தீட்டப்பட்டுள்ள வண்ணத்தை 60 விழுக்காடெனக் கருதி அவற்றை முதன்மை நிறமாகக்கொள்ள வேண்டும். அடுத்ததாக, அதில் பாதியளவு ஆதிக்கம் செலுத்தும் வண்ணத்தில் சாய்விருக்கை அமைவது சிறந்தது. 

இது இடத்தில் அதிக உறுத்தல் ஏற்படுத்தாமல், கண்களைக் கவரும். இந்த இரு நிறங்களுக்கும் எதிரான, கண்ணைப் பறிக்கும் நிறங்களில் மீதமுள்ள 10 விழுக்காடு இருக்கலாம். ‘கு‌‌ஷன்’ எனும் சிறு தலையணைகள், தரை விரிப்புகள் (ரக்ஸ்), அலங்காரப் பொருள்களை இந்நிறங்களில் தேர்தெடுக்கலாம். 

இவை பார்வைக்குச் சமநிலையான உணர்வைத் தரும்.  

வகைகள்

‘லெதர்’ எனப்படும் தோல் போன்ற மேற்புறத் துணியிலான இருக்கைகள் பொதுவாக ஆடம்பரமான, நவீனமான, நேர்த்தியான தோற்றமளிக்கும். அதிக நாள்களுக்குப் புதியது போன்ற தோற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏற்றது. சீரான வெப்பத்தை அளிப்பதால் பயன்பாட்டுக்கும் வசதியானவை. 

சுத்தம் செய்வதற்கு எளிது எனினும், இதில் கீறல்கள் விழும் அபாயம் அதிகம். 

‘மைக்ரோஃபைபர்’ எனும் ‘சிந்தெடிக்’ வகை சாய்விருக்கைகள் செல்லப்பிராணிகள் வைத்திருப்போர்க்கு ஏற்றது. மிருதுவான மேற்புறம் கொண்ட இவை, சுத்தம் செய்வதற்கு எளிதானவை. இறுக்கமான துணியென்பதால் கீறல் விழுவதற்கான சாத்திக்கூறுகள் குறைவு. 

இவை பல்வேறு நிறங்களில் கிடைப்பதால், எல்லாவித சுவர் நிறங்களுக்கும் ஏற்றபடி பொருத்திக்கொள்ள முடியும்.

பருத்தி, ‘லினன்’ ஆகிய துணிகளில் வரும் இருக்கைகள் வலுவான, அதிகம் உழைக்கும் தன்மை கொண்டவை. உடலை உறுத்தாது என்பதால், அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்றவை. வீடுகளுக்கு வசதியான தோற்றம் ஏற்படுத்தும் இவை, விரைவில் பழையதாய் தோற்றம் அளிக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்புச் சொற்கள்