ஒரு குறிப்பிட்ட உணவைப் பார்த்தவுடன் அதை உடனே சாப்பிட வேண்டுமெனத் தோன்றுகிறதா? அல்லது சில உணவுகள் பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து உங்கள் மனத்தை ஆட்கொண்டு, விலக மறுக்கின்றனவா?
இதுதான் உணவு மீதான ஏக்கம் (Food Cravings) எனப்படும் நிலை.
உலகச் சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, இந்த நிலை பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினையாக இருந்தாலும் கவனிக்கக்கூடிய ஒன்றாகும்.
உணவு மீதான ஏக்கம் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. உடல்நிலை, மனநிலை, சுற்றுச்சூழல் எனப் பல்வேறு அம்சங்களால் ஒருவர் அளவுக்கதிகமாக உண்ண விரும்புவதுபோல் உணரலாம்.
உடல்நிலை சார்ந்த காரணங்களில் ஊட்டச்சத்துக் குறைபாடுகள், போதிய தூக்கமின்மை, ஹார்மோன் அளவுகளில் வேறுபாடு, உடல் ஆற்றல் குறைதல் போன்றவை அடங்கும்.
மன அழுத்தம், சோர்வு, பதற்றம் போன்ற மனநிலைகள், குறிப்பாக காரம், உப்பு, சர்க்கரை நிறைந்த உணவுகளுக்கான விருப்பத்தைத் தூண்டும்.
சுற்றுச்சூழல் காரணிகளும் இந்த ஆசையை ஊக்குவிக்கலாம். எடுத்துக்காட்டாக, தொலைக்காட்சி விளம்பரங்கள், சமூக ஊடகங்கள், குடும்பத்தின் உணவுப் பழக்கங்கள், அல்லது குழந்தைப் பருவ உணவுப் பழக்கங்கள், ஒருவர் வளர்ந்த பிறகும் உணவு மீதான ஏக்கம் ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்.
இந்த உணவு ஏக்கத்தை முறையாகக் கையாள எளிய வழிகள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
முதலில், தாகத்தை உணரும்போது உடனடியாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில், சில நேரங்களில் தாகம்கூட உணவு மீதான ஏக்கம்போல் தோன்றக்கூடும்.
அடுத்ததாக, நார்ச்சத்தும் புரதமும் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இவை வயிற்றை நிறைத்து, தேவையற்ற உணவு ஏக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
போதிய தூக்கம், ஹார்மோன்களைச் சீராக வைத்திருக்க உதவுவதால், அது உணவு மீதான ஏக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
மேலும், மன அழுத்தம் அல்லது பதற்றம் ஏற்படும்போது உணவுண்பதற்குப் பதிலாக வாசிப்பு, நடைப்பயிற்சி, மனஅழுத்தத்தைக் குறைக்கும் மற்றவகைச் செயல்களில் ஈடுபடுவது பயனளிக்கும்.
உணவு மீதான ஏக்கம் என்பது இயற்கையானது. ஆனால், அதை நன்கு புரிந்துகொண்டு, கட்டுப்படுத்தும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால், நீண்டநாள் உடல்நலத்திற்கும் சீரான உணவுப் பழக்கங்களுக்கும் அது உறுதுணையாக இருக்கும்.

