சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் 11 நாள்கள் பொது விடுமுறை நாள்களாக அறிவிக்கப்படுகின்றன.
அந்தப் பொது விடுமுறை நாள்கள் வார இறுதியை ஒட்டி வருவதையே பெரும்பாலும் அனைவரும் விரும்புவர்.
அவ்வகையில், 2025ஆம் ஆண்டில் நான்கு பொது விடுமுறை நாள்கள் வார இறுதியை ஒட்டி வருகின்றன.
இந்நிலையில், மேலும் ஏழு நாள் வருடாந்தர விடுப்புகளை எடுத்துக்கொண்டால், அரசாங்கம் முன்பு அறிவித்த நான்கு நீண்ட வார இறுதி விடுமுறைகளை பத்தாக மாற்றிக்கொள்ளலாம். கவனமாகத் திட்டமிட்டால், ஓய்வெடுக்க அல்லது பயணம் மேற்கொள்ள அதிக நேரத்தை ஒதுக்கிக்கொள்ளலாம்.
ஐந்து நாள்களாக அதிகரிக்க...
உங்கள் வார இறுதி விடுமுறையை ஐந்து நாள்களுக்கு நீட்டிக்க 2025ஆம் ஆண்டில் இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
சீனப் புத்தாண்டின்போது, ஜனவரி 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுப்பு எடுப்பதன் மூலம் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரை ஐந்து நாள் விடுமுறையை அனுபவிக்கலாம்.
அதேபோல புத்தாண்டின்போது, டிசம்பர் 30, 31 என இரு நாள்கள் விடுப்பு எடுத்தால், 2024 டிசம்பர் 28 முதல் 2025 ஜனவரி 1 வரை ஐந்து நாள் வார இறுதியை அனுபவித்து மகிழலாம்.
தொடர்புடைய செய்திகள்
நான்கு நாள்களாக நீட்டிக்க...
மே தினத்தின்போது மே 1 முதல் மே 4 வரை நான்கு நாள் வார இறுதி விடுமுறை கிடைக்க, மே 2ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று விடுப்பு எடுக்கலாம்.
அதேபோல், அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வியாழக்கிழமை வருவதால், டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை ஒருநாள் விடுப்பு எடுத்தாலும் அந்த வார இறுதியை நான்கு நாள்களாக நீட்டிக்கலாம்.
மூன்று நாள்கள் போதுமெனில்...
2025ஆம் ஆண்டு முழுவதும் ஏராளமான மூன்று நாள் வார இறுதி விடுமுறைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றுக்கு வருடாந்தர விடுப்பு எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.
நோன்புப் பெருநாளின்போது மார்ச் 29 முதல் மார்ச் 31 வரை மூன்று நாள் வார இறுதி விடுமுறையில் இன்புறலாம்.
அதேபோல், புனித வெள்ளி (ஏப்ரல் 18), விசாக தினம் (மே 12), தீபாவளி (அக்டோபர் 20) ஆகிய பொது விடுமுறைகளின்போதும் மூன்று நாள் வார இறுதி விடுமுறைகளை அனுபவிக்கலாம்.
ஹஜ்ஜுப் பெருநாளின்போது, ஜூன் 6ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) விடுப்பு எடுத்தால் அவ்வார இறுதியை மூன்று நாள்களாக நீட்டித்துக்கொள்ளலாம்.
அதேபோல், 2025 தேசிய தினம் சனிக்கிழமை வருவதால், அதற்கு முதல் நாள் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று விடுப்பு எடுப்பதன்மூலம் மூன்று நாள் வார இறுதி விடுமுறை கிட்டும்.
வார இறுதி விடுமுறையை கொண்டாடத் தகுந்த இடங்கள்
ஜோகூர் பாரு, பாத்தாம், பிந்தான் ஆகிய இடங்கள் குறுகிய பயணங்களுக்குச் சிறந்தவை. அங்கு ஷாப்பிங், உணவு, ஓய்வு எனப் பொழுதை இன்பமாகக் கழிக்கலாம். சற்று தொலைவாகப் பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கு, பாலி, புக்கெட், பேங்காக் போன்ற இடங்கள் நான்கு நாள் வார இறுதிக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
ஐந்து அல்லது அதற்கும் அதிகமான நாள்கள் பயணம் மேற்கொள்ள திட்டமிடுபவர்கள், ஜேஜு தீவு, ஒகினாவா அல்லது ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களைக் கருத்தில் கொள்ளலாம். அழகான நிலப்பகுதிகளை ஆராயவும், உள்ளூர்ப் பண்பாட்டில் மூழ்கவும், கடற்கரை ஓரத்தில் ஓய்வெடுக்கவும் அவ்விடங்கள் உகந்தவையாக இருக்கும்.