நமது சுற்றுப்புறம் மாசடையும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
தொழிற்சாலைகள், சாலைகள் போன்ற இடங்களில் மட்டும்தான் காற்றுத் தூய்மைக்கேடு ஏற்படும் என்ற நிலை மாறி இன்று வீடுகளுக்குள்ளும் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை சில இடங்களில் ஏற்பட்டுள்ளது.
வீட்டில் காற்றுத் தூய்மைக்கேடு உச்சத்தை அடைந்தால், கண் எரிச்சல், தும்மல், சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். கூடுதலாக, நமது வீடுகளில் ஈரப்பதம் அதிக அளவில் இருந்தால் பூஞ்சை வளரக்கூடும். இது உடல்நலத்திற்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
வீட்டிற்குள் காற்றைச் சுத்தமாக வைத்திருப்பதற்கான சில சிறந்த வழிகளை ஆராய்வோம்.
ஈரப்பத அளவைச் சோதித்தல்
வீட்டில் ஈரப்பத அளவு மிக அதிகமாகவோ குறைவாகவோ இருந்தால் அது பாதகமாக நேரிடலாம். உட்புற ஈரப்பதத்தை 30% முதல் 50% வரை பராமரிப்பதே சிறந்தது என்று ஆய்வு ஒன்று காட்டுகிறது.
பூஞ்சையானது ஈரப்பதத்திலும் சூடான வெப்பநிலையிலும் வளரும். காற்றிலுள்ள ஈரப்பதம் குளிர்ந்த மேற்பரப்புகள் இருக்கும் இடங்களில், சுவர்களில் ஒடுங்கி நீர்த் துளிகளாக மாறுகிறது. இதனால், சுவர்களில் பூஞ்சை வளர்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
இயற்கையான காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும்
வீட்டில் இயற்கையான காற்றோட்டம் எப்போதும் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வீட்டில் சன்னல்களையும் கதவுகளையும் அவ்வப்போது திறந்து வைக்கவும். இதன் மூலம் வீட்டுக்குள் இருக்கும் காற்று வெளியேறி, வெளிக்காற்று உள்ளே வர வாய்ப்பு உண்டாகும்.
அதுமட்டுமல்லாமல் சன்னல்களைத் திறந்து வைப்பதால் சூரிய ஒளியும் வெப்பமும் வீட்டினுள் வரும். சூரிய வெப்பம் ஈரப்பதத்தைக் குறைக்க உதவுவதோடு பூஞ்சை வளர்வதையும் தடுக்கும்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, குளியலறை, சமையலறை போன்ற ஈரப்பதம் அதிகம் நிலவும் இடங்களில், சூரிய வெளிச்சமும் இயற்கையான காற்றோட்டமும் பரவ வேண்டியது அவசியம்.
வீட்டுத் தாவரங்கள்
காற்றைச் சுத்திகரித்து, வீட்டில் சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும் சில தாவரங்களையும் செடிகளையும் வளர்க்கலாம். மேசையில் வைப்பதற்கு, சமையலறையில் வைப்பதற்கு எனப் பலவகைச் செடிகள் உள்ளன. சிலந்திச் செடி, பாம்புச் செடி, ஆர்க்கிட், கற்றாழை, மணி பிளான்ட் (Money Plant), அரேகா பனைச் செடி (Areca Palm) போன்ற உட்புறச் செடி வகைகள் உயிர்வாயுவை அதிகரித்து காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைக்க உதவும்.
இந்தச் செடிகள் காற்றிலிருக்கும் நச்சு வாயுக்களை உறிஞ்சி, சுத்தமான காற்றை வெளியிடுகின்றன. மேலும், இவை வீட்டை அழகுபடுத்தும் அலங்காரமாகவும் அமைகின்றன.
காற்றுச் சுத்திகரிப்புக் கருவிகள்
காற்றுச் சுத்திகரிப்புக் கருவிகளைப் பயன்படுத்துவது வீட்டினுள் காற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவும். குறிப்பாக, உயர்திறன் கொண்ட ‘HEPA’ வடிகட்டியைக் கொண்ட காற்றுச் சுத்திகரிப்புக் கருவிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இக்கருவிகள், காற்றில் மிதக்கும் தூசு, அழுக்குத் துகள்கள், துர்நாற்றம், நச்சு வாயுக்கள் போன்றவற்றை வடிகட்டி, தூய்மையான காற்றை வெளியிடுகின்றன. மேலும், இவை வீட்டின் ஈரப்பத அளவைக் குறைக்கவும் உதவுகின்றன.
வீட்டைச் சுத்தமாகப் பராமரித்தல்
வீட்டைச் சுத்தமாக, அதிகமான பொருள்களைக் குவிக்காமல் வைத்திருப்பது நாம் சுவாசிக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்த உதவும் ஒரு முக்கியமான நடைமுறையாகும். அழுக்கும் குப்பைகளும் வீட்டில் கூடும்போது, காற்றில் மிதக்கும் மாசு, தூசு, ஒவ்வாமை ஏற்படுத்தும் துகள்கள் போன்றவை அதிகரிக்கும். இதைத் தவிர்க்க தரையையும் சுவர்களையும் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களையும் முறையாக அவ்வபோது சுத்தம் செய்யவேண்டும்.
மேலும், வீட்டினுள் பொருள்கள் அடைத்தபடி இருந்தால் காற்றோட்டம் தடைப்படும். இது காற்றில் மாசையும் ஈரப்பதத்தையும் அதிகரிக்கும். பொருள்களைச் சீராக ஒழுங்குபடுத்தி வைத்திருப்பதன் மூலம் காற்று சீராகச் சுழலும். இதனால் அதன் தரம் மேம்படும்.

