மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகும் வயதில் உள்ள மகளிரின் தசைநிறை இழப்பையும் (muscle loss), வலிமைக் குறைபாட்டையும் கண்டறிய புதிய எளிய ரத்தப் பரிசோதனை கண்டறியப்பட்டுள்ளது.
உடல் தசை வலிமையுடனும் உள்ளுறுப்புக் கொழுப்புடனும் மாதவிடாய் சுழற்சிக்குமான தொடர்பு, மகளிரின் உடல்நலனை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த புதிய தகவல்களும் ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, யோங் லூ லின் மருத்துவப் பள்ளி ஒருங்கிணைந்த மகளிர் சுகாதாரத் திட்டத்தின்கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அது, உடல் ரீதியான செயல்திறன் மதிப்பீடுகள், எளிய ரத்தப் பரிசோதனை ஆகியவற்றின் மூலம் எவ்வாறு கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் கண்டறிந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மற்றோர் ஆய்வு, ஒரு எளிய ரத்தப் பரிசோதனைமூலம் ஒவ்வொருவருக்கும் வயதுக்கேற்ப உடற்தசை, வலிமை இழப்பைத் தெரிந்துகொள்ள முடியும் என்பதைக் கண்டறிந்தது. இது தற்போதுள்ள ‘இமேஜிங்’ முறையைவிட குறைந்த நேரமும் செலவும் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விரைவில் இப்பரிசோதனையை மேற்கொள்வதால் ‘சர்கோபீனியா’ எனும் தசை வலிமை இழப்பு சார்ந்த நோய்களைத் தடுக்க உதவுகிறது. பெரும்பாலும் உடல் நிறை குறியீட்டெண் (BMI) மூலம் இதனைக் கண்டறிய முடிவதில்லை என்றும் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், எலும்புப்புரை ஆகிய நோய்களுக்குத் தசை நிறை, வலிமை இழப்பு காரணியாக அமையலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
“உடற்பருமன், உடல் நிறை குறியீட்டு எண்ணைக் குறைத்தலுடன் தசைகளை வலிமையாக்கத் தேவையான உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வது நடுத்தர வயதுடைய சிங்கப்பூர் பெண்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்,” என்றார் தேசியப் பல்கலைக்கழக மகப்பேறு மருத்துவத் துறையின் ஓய்வுபெற்ற ஆலோசகரான பேராசிரியர் யோங் இயூ லியோங்.
சுகாதார அமைச்சு, தேசிய சுகாதார மன்றம் இரண்டுடன் இடம்பெற்று வரும் பல்வேறு கட்ட ஆய்வுகளின் ஒரு பகுதியாக இது கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள், குடும்பங்களின் ஆரோக்கியமான வாழ்வை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படும் தேசியப் பல்கலைக்கழக மகளிர், குழந்தைகள் மையம் 45 முதல் 69 வயது வரையுள்ள மகளிரைத் தேர்ந்தெடுத்து ஆய்வு நடத்தியது.
தொடர்புடைய செய்திகள்
இந்திய, சீன, மலாய் இனப் பெண்கள் 2014 முதல் 2016 வரை பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 2020 முதல் 2023 வரை இரண்டாவது கட்ட ஆய்வுகள் நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்ட ஆய்வு 2026ல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.