நகைச்சுவை உணர்வு குழந்தை வளர்ப்பில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் நகைச்சுவை உணர்வுள்ள பெற்றோர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இடையே நல்லுறவு நிலவுவதாகவும் அண்மைய ஆய்வு தெரிவித்துள்ளது.
பெற்றோரின் நகைச்சுவை உணர்வு குழந்தைகளைச் சிரிக்க வைப்பதற்கு அப்பால் மேலும் சில முக்கியச் செயல்பாடுகளுக்கு உதவுகிறது என்கின்றனர் வல்லுநர்கள்.
சில குழந்தைகள் வளரும்போது இயற்கையாகவே கோபம், பிடிவாதம் போன்ற குணங்களை வளர்த்துக்கொள்வார்கள். சில பிள்ளைகளுக்குப் புதிய மனிதர்களுடன் பழகுவதில் சிரமம் இருக்கலாம். இவற்றில் சிக்காமலிருக்க நகைச்சுவை உணர்வு உதவும் என்பது மனநல நிபுணர்களின் கருத்தாக உள்ளது. மேலும், சூழலுக்கேற்ற எதிர்வினையாற்றும் திறன், புதிய அணுகுமுறைகள் உள்ளிட்டவற்றையும் அது ஊக்குவிப்பதாகத் தெரியவந்துள்ளது.
நகைச்சுவை உணர்வுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் தங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தங்களை மேம்பட்ட முறையில் கையாள்வதாகத் தெரிவித்தார் தாயாரும் மனநலத் துறை வல்லுநரான கோமதி ஜெயகுமார்.
நகைச்சுவைத் திறன், சிக்கலுக்குத் தீர்வுகாணும் திறனை மேம்படுத்துவதாகவும் மீள்திறனைக் கற்றுத்தருவதாகவும் அவர் சொன்னார்.
தோல்வியைப் பக்குவத்துடன் எதிர்கொள்ளும் ஆற்றலை, பிள்ளைகளுக்குக் கற்றுத்தருவது அவசியம் என்று சொன்ன கோமதி, நகைச்சுவை உணர்வுடன் பெற்றோர்கள் இருப்பது, பிள்ளைகள் பொய் சொல்வதைத் தடுத்து, பயமின்றி, வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட ஊக்குவிப்பதாகவும் சொன்னார்.
அதேநேரத்தில் நகைச்சுவை என்பது பிறர் மனத்தைப் புண்படுத்தாததாய் இருப்பதற்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அதன் நுணுக்கங்களை அறிந்து கையாள்வது அவசியம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நகைச்சுவையின் நோக்கம் சூழலை இலகுவாக மாற்றுவதாக இருக்க வேண்டுமே தவிர, தனி நபரை எந்த விதத்திலும் காயப்படுத்தும் விதமாகவோ மரியாதை குறைவாக நடத்தும் விதமாகவோ அமைவது சரியன்று என்பதைப் பிள்ளைகளுக்கு நன்கு உணர்த்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நகைச்சுவைக்கும் கேலி, கிண்டலுக்கும் உள்ள வேறுபாட்டைக் கற்றுக் கொடுப்பதும் முக்கியம் என்கின்றனர் நிபுணர்கள்.

