முழுநேர இசைக்கலைஞர் லலித் குமார் கணேஷ், 36, தமது தபேலாவில் இசைக்கும் ஒவ்வொரு தட்டும் ஒரு சொல்லாகும்.
மிருதுவாகவும் சுறுசுறுப்பாகவும் தொடர்ச்சியாகவும் விட்டுவிட்டு ஒலிக்கக் கூடியதாகவும் கொண்டுள்ளது பன்முகத்தன்மை வாய்ந்த அவரது இசைத்திறம்.
எஸ்பிளனேட் ரெசிடல் ஸ்டூடியோவில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) ‘ஃபுளோ’ (பாய்ச்சல்) எனப் பெயரிடப்பட்டுள்ள இசை நிகழ்ச்சி வாயிலாகத் தம் உணர்வுகளைக் கதையாகக் கோத்து வெளிப்படுத்துவதாகத் திரு லலித் கூறுகிறார்.
தபேலா இசைக்குப் பக்கபலமாகப் புல்லாங்குழல் இசை, வாய்ப்பாட்டு, பியானோ, மாண்டலின் ஆகியவற்றின் நாதம் பேதமறக் கலக்கும். இந்த நிகழ்ச்சியில் கதக் நடனமும் இடம்பெறும்.
திரு லலித்தின் இசைப் பயணம், பத்து வயதில் ‘டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற அமைப்பில் தொடங்கியது.
இசைத்துறையில் அவரது எதிர்காலத்திற்கு அந்த இசைப்பள்ளி வலுவான அடித்தளத்தை அமைத்தது.
தொடக்கத்தில் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்ட அவர், நவாஸ் மிராஜ்கரின் கீழ் தபேலா வாசிப்பதில் அதிக கவனம் செலுத்தினார்.
2015ல் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொறியியலில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தபிறகு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்ட ஆலோசகராக திரு லலித் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
தொடர்புடைய செய்திகள்
முழுநேர இசைக்கு மாற முடிவெடுத்ததை அடுத்து அவர் 2019ல் பெர்க்லி இசைக்கல்லூரியில் ஓராண்டு முதுநிலைப் படிப்பை மேற்கொண்டார்.
“கல்லூரிக்குள் நான் நுழைந்தபோது எனக்கு ஒரே ஓர் இசைக்கருவியை வாசிக்க மட்டுமே தெரிந்தது. ஆனால், ஓராண்டுக்குப் பின்னர் இசைத் தயாரிப்பாளருக்குரிய பன்முகத் திறன்களைப் பெற்றேன்,” என்றார் திரு லலித்.
பல நாடுகளுக்குப் பயணம் செய்து பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த இசைக்கலைஞர்களுடன் கூட்டு சேர்ந்த திரு லலித், அவற்றின் வழியாக முழுமையான, செழுமையான இசை அனுபவத்தைச் சேர்த்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கோலாலம்பூரைச் சேர்ந்த பியானோ கலைஞர், மெல்பர்னைச் சேர்ந்த மாண்டலின் கலைஞர், இந்துஸ்தானிப் பாரம்பரியப் பாடகர், புல்லாங்குழல் கலைஞர் எனப் பல்திறன் மிக்கவர்கள் கைகோத்து வழங்கும் நிகழ்ச்சியாக ‘ஃப்லோ’ உள்ளது.
இந்த இசை நிகழ்ச்சி, இந்தியப் பாரம்பரிய இசையுடன் லத்தீன் ஜாஸ், ஃபிளமெங்கோ, பங்க் போன்ற கூறுகளின் கலவையாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
இந்தியப் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளின் வழக்கமான எல்லைகளைத் தாண்டிய இந்த நிகழ்ச்சியின் பரந்த பாணி, திரு லலித்தின் உலகளாவிய கண்ணோட்டத்தையும் வெளிப்படுத்துகிறது.
“இந்த இசை நிகழ்ச்சியில் அனைவருக்கும் விருப்பமான ஏதேனும் ஒரு கூறு இருக்கும் என நம்புகிறேன். வலி, காதல், ஏக்கம் என அனைத்துக்கும் ஆதியானதை இதில் நீங்கள் உணரலாம்,” என்று அவர் கூறினார்.
ஏற்ற இறக்கத்தை ஏற்று, எப்போதும் மாறிவரும் வாழ்க்கையின் நீரோட்டத்தில் நமக்கான ஒன்றைக் கண்டறியலாம் என்கிறார் இவர். இசை ஆர்வலர்கள் இந்தத் தனித்துவமான நிகழ்ச்சியை அனுபவிக்க ‘எஸ்ஜி கலாசார சிறப்புத் தொகை’யைப் பயன்படுத்தலாம்.