மரினா பேயை விளக்கொளியில் அலங்கரிக்கும் ‘ஐலைட் சிங்கப்பூர்’

2 mins read
343bf341-0634-4680-96af-aba51ebd1e2d
தொடக்க விழாவில் ஒளிப் படைப்புகளைக் கண்டுகளித்த தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (இடமிருந்து 3வது). - படம்: த. கவி

மரினா பே, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டுதோறும் விளக்கொளியில் அலங்கரிக்கும் ‘ஐலைட் சிங்கப்பூர்’ மே 31 ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. இதனை தேசிய வளர்ச்சி அமைச்சரும் சமூக சேவைகளின் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டெஸ்மண்ட் லீ தொடங்கி வைத்தார்.

2010 முதல் மரினா பேயில் நடைபெற்றுவரும் இந்த நிகழ்ச்சியில் இம்முறை உலகெங்குமிருந்து வந்த 25 கலைஞர்களின் 17 ஒளிப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

“மரினா பே வட்டாரம், துடிப்பான சுற்றுச்சூழலை உறுதி செய்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் அதனை மேம்படுத்தி பொதுமக்கள் ஒருங்கிணைந்து மகிழ்வுறச் செய்கிறது,” என்றார் அமைச்சர் லீ.

நீடித்த நிலைத்தன்மையைக் கருத்தில்கொண்டு இடம்பெறும் ஐலைட் நிகழ்ச்சி, சுற்றுப்புறம் குறித்த உணர்வையும் உரையாடல்களையும் ஊக்குவிப்பதுடன் மறுசுழற்சியையும் வலியுறுத்துகிறது என்றார் அவர்.

மரினா பே, சவுத் பீச், மிலேனியா வாக் பகுதிகளை அலங்கரிக்கும் இந்த கலைப் படைப்புகள் இம்முறை தஞ்சோங் பகாரிலும் இடம்பெறுகின்றன. மேலும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘ஐ லைட்ஸ் ரிவர் க்ரூஸ்’, பொதுமக்கள் அனைத்துப் படைப்புகளையும் சுற்றிவர வழிவகுக்கும்.

தஞ்சோங் பகார் வரை இப்படைப்புகள் நீண்டுள்ளதையடுத்து, ஜூன் மாத இரு வாரயிறுதிகளில் ‘பாப் அப் மார்க்கெட்’ எனும் தற்காலிக அங்காடிகள், இசை நிகழ்வுகளுடன் களைகட்டும்.

நகர மறுசீரமைப்பு ஆணையம் சார்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, இயற்கையின் ‘சுழற்சி இயல்பைக் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

அன்றாடம் பயன்படுத்தப்படும் பல்வேறு பொருள்களின் மறுவடிவமைப்பு, மறுசீரமைப்பு, மறுபயன்பாட்டு வாய்ப்புகளைத் தெரியப்படுத்தும் விதமாக கலைப் படைப்புகளை வடிவமைத்துள்ளனர் கலைஞர்கள்.

படைப்புகளைக் ரசிக்கும் பொதுமக்கள்.
படைப்புகளைக் ரசிக்கும் பொதுமக்கள். - படம்: த. கவி

ஆடை அலங்காரப் பொருள்கள் தயாரிப்பில் வெளிவரும் கழிவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘ஸ்பின் மீ ய யான்’, சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழக மாணவர்கள் படைத்த கட்டுமானத் தளங்களின் கழிவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘லிமினல்; மினிமல்’, ஒருமுறை பயன்படுத்தப்படும் 1,000 நெகிழிக் கலன்களினால் செய்யப்பட்ட ‘பாட்டில் பிளாசம்ஸ்’ என ஒவ்வொரு படைப்பும் முக்கியக் கருத்தைப் பறைசாற்றும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

நீடித்த நிலைத்தன்மையைப் பறைசாற்றும் வகையில் அமைந்த இந்தப் படைப்புகள் ஜூன் 23ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வார நாள்களில் இரவு 7.30 மணி முதல் 11 மணி வரையும், வாரயிறுதி நாள்களில் நள்ளிரவு 12 மணி வரையும் இந்நிகழ்வு இடம்பெறும். இந்நிகழ்வுக்கு அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்