தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
மும்முறை புற்றுநோயை எதிர்கொண்டவரின் இலக்கு

புன்னகையோடு புற்றுநோயை எதிர்கொள்பவர்

3 mins read
மார்பகப் புற்றுநோய் பாதித்தபோதும் திருவாட்டி மல்லிகா புன்னகை பூத்த முகத்துடன் வலம்வருகிறார்
fca01259-a868-40d6-9c7a-011df08697c9
மகிழ்ச்சி என்பது உள்ளத்தைப் பொறுத்தது, சூழலைப் பொறுத்ததன்று என்று கூறும் மல்லிகா பெரியசாமி, 54, தனது புற்றுநோய்ப் பாதிப்பு குறித்து ஒரு நூலை எழுதவுள்ளார். - படம்: மல்லிகா பெரியசாமி

இறுதிக்கட்ட மார்பகப் புற்றுநோய், மூன்றாம் கட்டத் தொண்டைப் புற்றுநோய் ஆகியவற்றுடன் போராடிவரும் மல்லிகா பெரியசாமிக்கு வயது 54. புற்றுநோய் பாதிப்பு தனக்குப் பல பாடங்களைக் கற்பித்துள்ளதாக அவர் கூறினார்.

அவற்றின் அடிப்படையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்குப் பயனளிக்கும் ஒரு நூலை எழுத அவர் திட்டமிடுகிறார். குறிப்பிட்ட கால அவகாசத்தில் அதை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் அவர் அறிவார்.

சிகிச்சை பெறாவிட்டால் மூன்று ஆண்டுகளே வாழலாம் என்றும் சிகிச்சை செய்தால் பத்து ஆண்டுகள்வரைகூட வாழலாம் என்றும் மருத்துவர்கள் அவரிடம் கூறியுள்ளனர்.

அதைக் கேட்டும் மனந்தளராமல் உற்சாகத்துடன் வாழ்வை எதிர்நோக்குகிறார் மல்லிகா.

“நம் வாழ்க்கை நம் கைகளில் இல்லை. எங்கு, எப்போது இறப்போம் என யாருக்கும் தெரியாது. ஆனால் எனக்குத் தெரியும். அதை நான் வரமாகப் பார்க்கிறேன்,” என்றார் மல்லிகா.

சோதனைகளைக் கடந்தாலும் மல்லிகாவின் முகத்தில் எப்போதும் புன்சிரிப்பு தவழுகிறது.
சோதனைகளைக் கடந்தாலும் மல்லிகாவின் முகத்தில் எப்போதும் புன்சிரிப்பு தவழுகிறது. - படம்: மல்லிகா பெரியசாமி

நூல் எழுதும் இலக்கு

தான் எழுதவுள்ள நூல், புற்றுநோயாளிகளுக்கான உணவுகளை மையப்படுத்தும் என்றார் மல்லிகா.

கதிர்வீச்சு சிகிச்சையின்போது உணவு உட்கொள்வதில் சந்தித்த சிரமங்களே நூல் எழுதும் எண்ணத்தை அவர் மனத்தில் விதைத்தன.

“ஒருகட்டத்தில் சாப்பிடவே முடியவில்லை. உணவை அரைத்து, உறிஞ்சி அருந்த வேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் உணவு உண்ண நெடுநேரம் தேவைப்பட்டது,” என்றார் மல்லிகா.

‘கீமோதெரபி’, கதிர்வீச்சு சிகிச்சை ஆகியவற்றால் நோயாளிகளுக்கு வாய்ப்புண் ஏற்படும் என்றும், உணவைச் சுவைக்கவும் உண்ணவும் அவர்கள் சிரமப்படுவர் என்றும் மல்லிகா கூறினார். சரியாக உண்ணமுடியாமல் பலருக்கும் உடல் எடை குறையும் என்றார் அவர்.

“ஆனால் நான்காவது கீமொதெரபி வரை எனக்கு எடை குறையவில்லை. மருத்துவர்களே வியந்தனர்,” என்றார் மல்லிகா.

சத்துள்ள உணவை உண்டது உடல் எடையைத் தக்கவைத்துக்கொள்ள உதவியதாக அவர் கூறினார்.

“காரம், எண்ணெய்ப் பசை இல்லாத உணவை உண்ணவேண்டியுள்ளது. எனக்கு இறைச்சி, இறால் பிரியாணி மிகவும் பிடிக்கும். ஆனால் காரம் என்பதால் அவற்றைத் தவிர்க்கவேண்டியிருந்தது.

“அம்மா எனக்குச் சோற்றைக் குழைவாக வடிப்பார். கோழி, மீன், காய்கறி சூப் போன்றவற்றை அதிகம் தயாரித்துக் கொடுப்பார். சில நேரங்களில் நானே காய்கறி சமைத்துக்கொள்வேன்,” என்றார் மல்லிகா.

தன் 74 வயதுத் தாயாரும் தன்னைப் போன்று உறுதியானவர் என்றார் மல்லிகா. கைத்தடியைப் பயன்படுத்தி நடமாடும் தாயாருக்கு ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் இருந்தபோதும் தன்னை அவர் அன்பாகக் கவனித்துக்கொள்வதாகச் சொன்னார் மல்லிகா.

ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டம் மருத்துவச் செலவுகளுக்கு உதவுவதாக மல்லிகா கூறினார்.

ஒருமுறை ‘கீமொதெரபி’ செய்துகொள்ள கிட்டத்தட்ட $13,000 செலவாவதாகவும் ஒருமுறை நோயெதிர்ப்பாற்றலுக்கான சிகிச்சைக்கு (Immunotherapy) $11,000 செலவாவதாகவும் கூறிய அவர், அதில் பெரும்பகுதியை மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏற்றுக்கொண்டது என்றார். மீதமுள்ள தொகையிலும் ஒரு பகுதிக்கு மருந்து உற்பத்தி நிறுவனம் சலுகை வழங்கியது.

இளமையிலேயே தெரிந்தது

மல்லிகா 20களில் இருந்தபோது அவருடைய காதுப் பகுதியில் கட்டி ஏற்பட்டது. அப்போது அக்கட்டியை அகற்றியபோதிலும், அடுத்தமுறை அது புற்றுநோயாக வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.

2021ஆம் ஆண்டில் அவருக்கு முதற்கட்ட மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. 2022ல் மூன்றாம் கட்டத் தொண்டைப் புற்றுநோயும் கண்டறியப்பட்டது.

வலது மார்பகத்தை அகற்றிய பின்பும் மல்லிகாவின் மார்பகப் புற்றுநோய் நான்காம் கட்டமாக எலும்புகளுக்குப் பரவியது 2024ல் கண்டறியப்பட்டது.

எனினும், சளைக்காமல் தொடர்ந்து நோய்க்கு எதிராகவும், சமூகத்துக்குப் பங்களிக்கவும் போராடிவருகிறார் மல்லிகா.

பிறர் வாழ்விலும் புன்னகையை ஏற்படுத்த விழையும்  மல்லிகா.
பிறர் வாழ்விலும் புன்னகையை ஏற்படுத்த விழையும் மல்லிகா. - படம்: மல்லிகா பெரியசாமி
குறிப்புச் சொற்கள்