தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்த மாநாடு

2 mins read
89ff67bc-c66d-4bdb-af4a-cf9fd1f6e8f5
வர்த்தகத் தலைவர்கள் மாநாடு 2024. - படம்: இந்தியாவின் உரிமம் பெற்ற கணக்காய்வாளர்க் கழக (ஐசிஏஐ) சிங்கப்பூர்ப் பிரிவு

இந்தியாவின் உரிமம் பெற்ற கணக்காய்வாளர்க் கழகத்தின் (ஐசிஏஐ) சிங்கப்பூர்ப் பிரிவு, பான் பசிபிக் சிங்கப்பூர் ஹோட்டலில் ‘வர்த்தகத் தலைவர்கள் மாநாடு 2024’ஐ நவம்பர் 26ஆம் தேதி நடத்தியது.

அந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட வர்த்தகத் தலைவர்களும் தொழில்துறை நிபுணர்களும் இந்தியா, சிங்கப்பூர் நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இந்தியாவில் முதலீடு செய்வதே நிகழ்ச்சியின் மையக் கருப்பொருளாக இருந்தது.

நாடாளுமன்ற நியமன உறுப்பினரும் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபையின் (SICCI) தலைவருமான நீல் பாரிக், சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்தியா வழங்கும் பலவகையான முதலீட்டு வாய்ப்புகள், அவற்றில் ஐசிஏஐ வகிக்கும் முக்கியப் பங்கு போன்றவற்றைப் பற்றிப் பேசிய ஐசிஏஐ தலைவர் ரஞ்சித் குமார் அகர்வால், “கற்க, சம்பாதிக்க, திரும்பக் கொடுக்க,” என்ற எண்ணப்போக்கை வலியுறுத்தினார்.

அறிவு, புத்துணர்ச்சியைப் பிரதிபலிக்க சிங்கப்பூர், இந்தியப் பிரதிநிதிகள் விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கினர்.
அறிவு, புத்துணர்ச்சியைப் பிரதிபலிக்க சிங்கப்பூர், இந்தியப் பிரதிநிதிகள் விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கினர். - படம்: ‘ஐசிஏஐ’ சிங்கப்பூர்ப் பிரிவு

‘ஐசிஏஐ’யின் வர்த்தக, தொழில்துறை உறுப்பினர்க் குழுவின் தலைவரான தீரஜ் கன்டெல்வால், ‘ஐசிஏஐ’யின் அனைத்துலகப் பார்வையை விவரித்ததோடு உறுப்பினர்களுக்கும் புது நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்கும் திட்டங்களையும் குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா-சிங்கப்பூர்க் கூட்டுமுயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் திரு நீல் பாரிக்.

இந்தியாவின் வளர்ச்சி வாய்ப்புகளையும் உலக முதலீட்டு மையமாக அது உருப்பெற்றுவருவதையும் எடுத்துரைத்தார் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் (பொருளாதாரம்) சன்யம் ஜோ‌ஷி.

இத்துடன் இரு மேடைக் கலந்துரையாடல்களும் மக்களைக் கவர்ந்தன. ‘இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகளும் பொருளாதாரப் போக்குகளும்’ என்ற கலந்துரையாடலில் 30-30-30 என்ற அடிப்படையில் அடுத்த 30 ஆண்டுகளில் சராசரி வயது 30 என்ற நிலையில் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு 30 டிரில்லியன் டாலர் சேர்க்கப்படும் குறிக்கோளைப் பற்றிப் பேசினார் ‘இன்வெஸ்ட் இந்தியா’ துணைத் தலைவர் ராஜா சிங் குரானா.

அவருடன் எச்எஸ்பிசி அனைத்துலகத் தனியார் வங்கியின் தென்கிழக்காசிய, இந்தியத் தலைமை முதலீட்டு அதிகாரி ஜேம்ஸ் சியோ, ‘மறுமலர்ச்சி, சீர்திருத்தம், லாபம்’ என்ற கொள்கைகளை முன்வைத்தார்.

‘கூட்டுமுயற்சிகளை அமைத்தலும் வரவுகளை அதிகரித்தலும்’ என்ற இரண்டாவது கலந்துரையாடல், ஒவ்வொரு துறையிலும் இந்தியாவிலுள்ள வாய்ப்புகள், கட்டுப்பாடுகளும் கொள்கைச் சூழலும், முதலீட்டு ஆபத்துகளும் அவற்றைக் குறைக்கும் உத்திகளும், நிலைத்தன்மைமிக்க வளர்ச்சி, பண்பாட்டுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல், எதிர்காலப் போக்கு போன்ற கூறுகளை அலசி ஆராய்ந்தது.

“சிங்கப்பூர் வர்த்தகங்களுக்கு இந்தியாவிலுள்ள பல்வேறு வாய்ப்புகளைக் காட்சிப்படுத்தியதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார் ஐசிஏஐ சிங்கப்பூர்த் தலைவர் நி‌‌‌ஷாந்த் குமார் சுரானா.

‘ஐசிஏஐ’யின் 75வது ஆண்டு நிறைவு விழாவும் இவ்வாண்டு கொண்டாடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்