தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்களை ஊக்குவித்த ‘இளமைமிகு இன்பத் தமிழ்’

2 mins read
5f4667fd-9385-48a5-906e-b246da5bee81
சிறப்பு விருந்தினர்கள், பேராளர்களுடன் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்ற மாணவர்கள். (பின்வரிசையில் இடமிருந்து) சிங்கப்பூர்த் தமிழர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ந நாராயணசாமி, சிறப்பு விருந்தினர் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி, சிங்கப்பூர்த் தமிழர் இயக்கத்தின் தலைவர் ரெ. செல்வராஜூ. - படம்: சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம்

பல்வேறு தமிழ் மொழி சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 73 மாணவர்களுக்கு ‘இளமைமிகு இன்பத்தமிழ்’ விழாவில் பரிசளிக்கப்பட்டது.

தமிழ் மொழி விழாவையொட்டி சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம் சார்பில் ஏப்ரல் 13ஆம் தேதியன்று இப்பரிசளிப்பு விழா நடைபெற்றது.

மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் என ஏறத்தாழ 240 பேர் பங்கேற்ற இவ்விழா நோரிஸ் ரோட்டில் உள்ள சிங்கப்பூர்த் தமிழர் இயக்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் நசீர் கனி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மேலும், வளர்தமிழ் இயக்கத்தின் ஆலோசகர் ரா ராஜாராம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன், சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவைத் தலைவர் முகமது பிலால், கவிமாலைக் காப்பாளர் மா அன்பழகன் உள்ளிட்ட பல பேராளர்கள் பங்கேற்றனர்.

பாலர் பள்ளி முதல் தொடக்கநிலை ஆறாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடம் போட்டிகள்மூலம் தமிழ்ப் புழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம் இப்போட்டிகளைக் கடந்த பத்தாண்டுகளாக நடத்தி வருகிறது.

“தமிழ்மொழி விழா ஒரு குடும்ப விழா போன்ற உணர்வைத் தருகிறது. ஒவ்வோர் ஆண்டும் பல தமிழ் அமைப்புகள் நடத்தும் விழாக்களில் அனைவரும் ஒன்றுகூடும் வாய்ப்புபோல அமைகிறது. அடுத்த தலைமுறைக்கும் மொழி உணர்வை ஊட்டும் வாய்ப்பாக இவ்வகை விழாக்கள் அமைவது, அதில் சிங்கப்பூர்த் தமிழர் இயக்கம் தொடர்ந்து பங்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார் அவ்வியக்கத்தின் தலைவர் ரெ. செல்வராஜூ, 55.

“தமிழ் மொழியைப் பயிலவும் பழகவும் நான் சிறுவனாக இருந்தபோது கிடத்ததைவிட தற்போது அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. சின்னஞ்சிறு குழந்தைகளும் அழகு தமிழில் பேசுவதைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது,” எனப் புன்னைகைத்தார் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ந நாராயணசாமி, 78.

“ஆண்டுதோறும் இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது,” என்ற விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ரா விவேக், 43, இவ்வாண்டு 283 பேர் பங்கேற்றதாகச் சொன்னார்.

பேச்சுப் போட்டி, கலந்துரையாடல், சொல் விளையாட்டு, தமிழ்மொழி வாசித்தல் உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளில் போட்டிகள் கடந்த மார்‌ச் 15, 22 ஆம் தேதிகளில் நடைபெற்றன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு முறையே 100, 70, 50 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து மாணவர்களுக்கு ஆறுதல் பரிசாகத் தலா 30 வெள்ளி வழங்கப்பட்டது.

பங்கேற்ற பொதுமக்களுக்கும் தமிழ்மொழி, தமிழ்மொழி விழா சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டு, வென்றோர்க்குப் பற்றுச்சீட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்