தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிம்ஃபொனியால் சிலிர்க்க வைத்த இசைஞானி

3 mins read
6cb65bc2-3a06-4073-972a-d73695976e3f
பன்னாட்டு ரசிகர்களையும் தம் இசையால் கிறங்கடித்த இளையராஜா. - படம்: இளையராஜா
multi-img1 of 2

இந்தியாவின் முதல் முழு மேற்கத்திய சிம்ஃபொனி இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜாவை நிலைநாட்டிய அவரின் ‘வேலியண்ட்’ சிம்ஃபொனி சனிக்கிழமை (மார்ச் 8) லண்டன் மாநகரின் இவண்டிம் அப்போலோ அரங்கில் அரங்கேறியது.

ஈராயிரத்திற்கு மேற்பட்ட இசை ரசிகர்கள் இசைஞானியின் இசை மழையில் நனைந்தனர்.

கிட்டத்தட்ட 80 ஆண்டுகால வரலாறு கொண்ட ‘ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா’ எனும் இங்கிலாந்தின் முன்னணி பல்லியல் இசைக்குழு நான்கு பகுதி கொண்ட இளையராஜாவின் சிம்ஃபொனியை உயிர்ப்பித்தது. 77 இசைக் கலைஞர்கள், தோல், நரம்பு, குழல் இசை வாத்தியங்கள் சூழ மேடையில் அமர்ந்திருந்தார் இளையராஜா.

இந்த சிம்ஃபொனி இசை 35 நாள்களில் எழுதப்பட்டதாக தமது சமூக ஊடக பக்கத்தில் இளையராஜா கடந்த ஆண்டு பதிவிட்டிருந்தார். இந்நிகழ்ச்சி ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமையும் என்றும், இது தமக்கான பெருமை மட்டுமன்று, இந்தியாவுக்கான பெருமையும்கூட என்றும் லண்டனுக்குப் புறப்படுவதற்கு முன்னர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

“சிம்ஃபொனி என்பது விளக்க முடியாதது; அதை அனுபவிக்கத்தான் முடியும்,” என்று அவர் மேடையில் கூறியதை பார்வையாளர்கள் ஆரவாரித்து வரவேற்றனர்.

சாய்கோவ்ஸ்கியின் ‘ஃபெஸ்டிவெல் ஒவர்ச்சரோடு’ சிம்ஃபொனி தொடங்கியது. அதனை தொடர்ந்து நான்கு பாகங்களிலும் வெவ்வேறு சந்தங்களில், தொனிகளில் ‘வேலியண்ட்’ படைக்கப்பட்டது. நிகழ்வின் இரண்டாம் பாகத்தில் கண்ணே கலைமானே, மடை திறந்து, ராஜா ராஜாதி ராஜன், பூவே செம்பூவே ஆகிய பிரபல பாடல்களின் வாத்திய இசை வழங்கப்பட்டது பார்வையாளர்களை நெகிழச் செய்தது. ‘இதயம் போகுதே’ பாடலை வாத்தியங்கள் இசைக்க நேரடியாகப் பாடினார் இளையராஜா. ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் அரங்கையே எழுந்து கைதட்ட வைத்தது, இரண்டு மணி நேரம் நீடித்த அவரின் இசை.

இந்தியப் பின்னணி கொண்ட தம்மைப் போன்ற இசைக்கலைஞர்களின் வானங்களை விரிவுபடுத்தி வரலாறு படைத்து, பிரமிக்க வைத்துள்ளார் இளையராஜா என்றார், நிகழ்ச்சிக்குப் பார்வையாளராக வந்திருந்த பாடகர் சாஹி சிவா.

“என் காலத்திற்கு முந்தைய கலைஞராக இருந்தாலும் இந்நாள்வரை அவரின் இசை உலகெங்கும் தொடர்ந்து ஒலிக்கிறது. அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள விரும்புவது இன்னும் ஏராளம். அப்பயணத்துக்கு முடிவில்லை,” என்று தமிழ் முரசிடம் திரு சிவா கூறினார். இசை எளிமையால் காலங்காலமாக மக்கள் மனங்களைத் தொட்ட இளையராஜா, முற்றிலும் வேறுபட்ட, மிகக் கடினமான இம்முயற்சியை நனவாக்கியுள்ளது இளம் தலைமுறைக்கு மிகுந்த ஊக்கமளிக்கும் என்றார் அவர்.

சிம்ஃபொனியோடு நின்றுவிடாமல், அடுத்து வழங்கப்பட்ட திரையிசை 26 வயது பொறியாளர் ஆ. ரெஷிந்துக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

சிம்ஃபொனி இசையைக் கையிலெடுத்தது இளையராஜாவுக்கு இது முதல் முறையன்று. திரையிசைப் பாடல்களிலே கலவைப் பாணிகளோடு அவர் பல சோதனை முயற்சிகளைப் புரிந்துள்ளார். ‘ராக்கம்மா கையத் தட்டு’ போன்ற பாடல்களில் மெய்சிலிர்க்க வைத்த மேற்கத்திய வயலின் இசையை நினைவுபடுத்துவதாய் சிம்ஃபொனியின் சில இடங்கள் அமைந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

“81 வயதிலும் இசையின்மீது அவர் கொண்டுள்ள தீராக் காதலுக்கு அவரின் இந்த பிரம்மாண்ட சிம்ஃபொனி முயற்சி பெருஞ்சான்று,” என்றார் 14 வயது மகளுடன் வந்திருந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் சூர்யா நந்தூரி, 46. முழுநேரமாக இசையில் களமிறங்கும் முனைப்பில் உள்ளவரின் மகள் செரெயு, இளையராஜாவை தமது வாழ்நாளில் நேரில் காணும் வாய்ப்பு கிட்டியதை எண்ணி மகிழ்ந்தார்.

குடும்பத்தோடு வருகை தந்திருந்த உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் டி. தயாபரன், 45, மேற்கத்திய செவ்வியல் இசையில் இந்தியப் பங்களிப்பானது அதன்மீது கூடுதலான கவனத்தைத் திருப்பும் என்றும் தமது இசை ரசனையை இன்னும் விரிவுபடுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆசியாவின் ஜான் வில்லியம்ஸ் என இளையராஜாவைக் கருதும் 32 வயது அமெரிக்கர் கிரேஸ் ஆண்ட்ரூஸை சிம்ஃபொனியின் ஒவ்வொரு பகுதியும் மெய்சிலிர்க்க வைத்தது. தாம் மொழியை அறியாவிடிலும், மொழியைத் தாண்டிய உணர்ச்சிகளைத் தூண்டும் இளையராஜாவின் இசை பாணி தமது மனத்திற்கு மிக நெருக்கமானது என்றார் திரு ஆண்ட்ரூஸ்.

அவரைப் போன்றே அமெரிக்கா, இந்தியா, பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் சிம்ஃபொனியைக் கேட்க வந்திருந்தனர்.

கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தினார். தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதலிய திரை நட்சத்திரங்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் துபாயிலும் வேலியண்ட் சிம்ஃபொனி அரங்கேற உள்ளது.

குறிப்புச் சொற்கள்