தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெங்காய ஏற்றுமதி வரியை நீக்கிய இந்தியா: சிங்கப்பூரில் தாக்கம்

3 mins read
6aed79ce-f24c-484f-8cfe-b04424b705d9
லிட்டில் இந்தியாவில் சில வாரங்களில் வெங்காய விலை குறையலாம் என்கின்றனர் கடைக்காரர்கள். - படம்: ரவி சிங்காரம்

சிங்கப்பூரில் வெங்காய விலை இன்னும் சில வாரங்களில் சரியக்கூடும் என்று லிட்டில் இந்தியா கடைக்காரர்களும் விநியோகிப்பாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கு விதித்த 20 விழுக்காட்டு வரியை இம்மாதம் 1ஆம் தேதி நீக்கியதை அடுத்து வெங்காய விலையில் மாற்றம்வரும் என்று கடைக்காரர்கள் கருதுகின்றனர்.

எனினும் விலை எவ்வளவு குறையும், எப்போது குறையும் என்று அவர்களால் இன்னும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. மொத்த விற்பனையாளர்கள் எந்த அளவிற்கு விலையைக் குறைக்கிறார்கள், பழைய வெங்காயங்களின் விநியோகத்துக்குப் பிறகு எப்போது புதிய வெங்காயங்களை விநியோகிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே புதிய விலை அமையும் என்று கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

தற்போது லிட்டில் இந்தியாவின் பல கடைகளிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ $1.80லிருந்து $2.50 வரை விற்கப்படுகிறது. மூன்று கிலோ எடைகொண்ட ஒரு மூட்டை பெரிய வெங்காயத்தின் விலை $3.50லிருந்து $4ஆக உள்ளது. சிறிய வெங்காயத்துக்கான விலை ஒரு கிலோ $5.50 முதல் $6.50ஆக உள்ளது.

“இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கான வரியை அகற்றியிருப்பதால் மூன்று கிலோ பெரிய வெங்காயத்தின் விலை $3.20 அல்லது $3.30 வரை குறையலாம்.

“இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் புதிதாக இறக்குமதியான வெங்காய மூட்டைகள் விநியோகிக்கப்படும் என விநியோகிப்பாளர்கள் கூறுகின்றனர். அதையடுத்து விலை குறையக்கூடும்,” என்றார் குட் லக் ஸ்பைஸ்மார்ட் உரிமையாளர் இராமலிங்கம் அன்பழகன், 56.

லிட்டில் இந்தியாவிலுள்ள மற்ற கடைகளுக்கு வெங்காய விநியோகம் செய்யும் யூச்சுவான் டிரேடிங் மேலாளர் சிவகுருநாதன், 53, மூன்று கிலோகிராம் பெரிய வெங்காய மூட்டையைத் தற்போது மூன்று வெள்ளிக்கு விநியோகம் செய்கிறார்.

“விலை என்பது வெங்காய உற்பத்தியைப் பொறுத்தது. கோடைக்காலத்தில் உற்பத்தி அதிகரிப்பதால் விலை குறையும். மழைக்காலத்தில் விலை ஏறும்,” என்றார் அவர். எனவே, கோடை மழையையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் புதிதாக இறக்குமதியான வெங்காய மூட்டைகள் விநியோகிக்கப்படும் என விநியோகிப்பாளர்கள் கூறுகின்றனர். அதையடுத்து விலை குறையக்கூடும்.
குட் லக் ஸ்பைஸ்மார்ட் உரிமையாளர் இராமலிங்கம் அன்பழகன், 56

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் வெங்காயம் சிங்கப்பூரை வந்தடைய இரு வாரங்கள் ஆகலாம் என்பதால் ஏற்றுமதி வரி நீக்கத்தின் விளைவை உடனடியாக உணரமுடியாது என்றார் அவர்.

இந்திய வெங்காயத்தை விரும்பும் மக்கள்

மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் வெங்காயத்தைவிட இந்தியாவிலிருந்து வருபவற்றை உள்ளூர்வாசிகள் அதிகம் வாங்குகின்றனர் என்று கடைக்காரர்கள் கூறினர். “சீனர்கள்கூட இந்திய வெங்காயத்தையே விரும்புகின்றனர்,” என்றார் இராமலிங்கம்.

“நான் இந்திய வெங்காயங்களையே வாங்குகிறேன். 3 கிலோ பெரிய வெங்காய மூட்டை விலை $2.50க்குக் குறைந்தால் நன்றாக இருக்கும்,” என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத வாடிக்கையாளர் ஒருவர்.

“வெங்காயம் இப்போதைக்கு அதிக விலையில்தான் உள்ளது. கடைகளுக்கிடையிலும் விலை சற்று மாறுபடுகிறது. விலைவாசி உயர்ந்துள்ளது,” என்றார் வாடிக்கையாளர் தமிழ் மணி, 60.

வெங்காயங்களைப் பெற மாற்றுவழிகள்

“சென்ற ஆண்டு இந்திய வெங்காயத்துக்கு ஏற்பட்ட பற்றாக்குறையால் நாங்கள் பாகிஸ்தான் வெங்காயங்களை வாங்கத் தொடங்கினோம். இந்திய வெங்காயங்களைவிட அவை மலிவான விலையிலும் கிடைக்கின்றன,” என்றார் கேவிஆர்எஸ் டிரேடிங்கின் சியாமளன், 39.

சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றின் வெங்காயங்கள் மலிவான விலையில் கிடைப்பதால் அவ்வப்போது உணவகங்கள் பெரிய அளவில் வெங்காயம் கேட்கும்போது மட்டும் அவற்றை வாங்கிக் கொடுப்பதாகக் கூறிய குட் லக் ஸ்பைஸ்மார்ட் உரிமையாளர் இராமலிங்கம் அன்பழகன், அவற்றைக் கடையில் வைத்து விற்பதை நிறுத்திவிட்டார்.

அதனால், பிற நாடுகளை நாடாமல் தொடர்ந்து இந்திய வெங்காயத்தை விற்க இந்த வரி நீக்கம் சிங்கப்பூர் கடைக்காரர்களுக்குக் கைகொடுத்துள்ளது.

இந்தியாவில் வெங்காயப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க 2023 டிசம்பரில் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை 2024ஆம் ஆண்டு மே மாதம் நீக்கப்பட்டது. அதற்குப் பதிலாக வெங்காய ஏற்றுமதிக்கு 40 விழுக்காடு வரி விதிக்கப்பட்டு செப்டம்பரில் அது 20 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது. இம்மாதம் 1ஆம் தேதி அந்த வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்