தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உடற்குறையுள்ளோரைப் பிறருடன் இணைக்கும் விளையாட்டுகள்

3 mins read
eac6fed6-d12a-47a6-b24b-61a912527aef
‘பிளே இன்க்லூசிவ்’ வழியாகப் புதிய நட்பு கிடைத்ததாக ‘ஏபிஎஸ்என் டெல்டா சீனியர்’ பள்ளியைச் சேர்ந்த 17 வயது மாணவர் ராகவேந்திரன் தெரிவித்தார். - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 5

ஐந்து வயதில் தம்மீது வெந்நீர் ஊற்றப்பட்டபோது செவித்திறனை இழந்ததைக் கண்ணீர் மல்க நினைவுகூர்ந்தார் சீதா, 17.

“அப்போது என் குடும்பத்தினர் என்னை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனது செவித்திறன் பாதிப்படைந்துள்ளதை என் தாயார் என்னிடம் கூறியதும் நான் அழத் தொடங்கினேன்,” என்று சீதா கூறினார்.

அன்று முதல் பிறர் கூறுவதை உதட்டசைவுகள் மூலமே ஊகித்து அறிய அவர் கற்றுக்கொண்டார். செவித்திறன் கருவியை அவர் அவ்வப்போது பயன்படுத்தவும் செய்தார்.

செவித்திறன் குறைபாட்டை விஞ்சிய விளையாட்டு ஆர்வம்

செவித்திறன் குறைபாடு இருப்பதால் தன்னால் குழு விளையாட்டுகளில் சிறக்க முடியாது என்ற கருத்துக்குச் சீதா செவிசாய்க்கவில்லை.

ஐந்து வயதிலிருந்து கூடைப்பந்து விளையாடிவரும் சீதா, சிறப்புத்தேவை உடையோருக்கான ‘ஏபிஎஸ்என் டெல்ட்டா சீனியர்’ பள்ளியில் கூடைப்பந்து இணைப்பாட நடவடிக்கையில் சேர்ந்தார்.

கூடைப்பந்து விளையாட்டாளரும் பயிற்றுவிப்பாளரும் ஆக விரும்பும் சீதா, 17.
கூடைப்பந்து விளையாட்டாளரும் பயிற்றுவிப்பாளரும் ஆக விரும்பும் சீதா, 17. - படம்: ரவி சிங்காரம்

“எதிர்காலத்தில் நான் கூடைப்பந்து விளையாட்டாளரும் பயிற்றுவிப்பாளருமாகி, என்னைப் போல செவித்திறன் குறைபாடுடையோருக்குக் கூடைப்பந்துப் பயிற்சியளிக்க விரும்புகிறேன்,” என்று சீதா கூறினார்.

இவ்வாண்டின் ‘பிளே இன்க்லூசிவ்’ போட்டிகளில் அவருடன் இணைந்து மிலெனியா கல்விநிலைய மாணவி ஏ‌ஷ்லீ விளையாடினார். “புதிய நண்பருடன் விளையாடுவதுபோல்தான் இருந்தது,” என்று ஏ‌ஷ்லீ கூறினார்.

மிலெனியா கல்விநிலைய தோழி ஏ‌ஷ்லீ உடன் சீதா.
மிலெனியா கல்விநிலைய தோழி ஏ‌ஷ்லீ உடன் சீதா. - படம்: ரவி சிங்காரம்

உடற்குறை உள்ளவர்களுக்கும் அற்றவர்களுக்கும் இடையே பந்தம்

விளையாட்டுமூலம் ஆண்டுதோறும் தேசிய தினத்தைக் கொண்டாடும் ‘கெட்ஆக்டிவ்! சிங்கப்பூர்’ கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக, ‘பிளே இன்க்லூசிவ் 2025’ ஆகஸ்ட் 22, 23ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதை ஸ்போர்ட்கேர்ஸ், ஸ்பெ‌‌ஷல் ஒலிம்பிக்ஸ் சிங்கப்பூர், சிங்கப்பூர் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டு மன்றம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.

புதிய நட்புகளுக்கு வழிவகுக்கும் வகையில், உடற்குறையுள்ள அல்லது சிறப்புத் தேவைகள் கொண்ட விளையாட்டாளர்களுடன் இணைந்து மற்றவர்கள் விளையாடினர்.

மொத்தம் பத்து விளையாட்டுகளில் 1,200 பேர் பங்கேற்றனர். இதற்கு முன்னதாக அவர்கள் குறைந்தது நான்கு முறை இணைந்து பயிற்சி மேற்கொண்டனர்.

‘ஏபிஎஸ்என் டெல்டா சீனியர் பள்ளி’ மாணவர் ராகவேந்திரன், 17, சிறப்புத் தேவை உள்ளவர். அவருடன் மிலெனியா கல்விநிலையத்திலிருந்து ஹர்‌ஷிதா கிரு‌ஷ்ணா, 18, கூடைப்பந்து விளையாட்டில் பங்கேற்றார்.

இணைந்து கூடைப்பந்து விளையாடிய ஏபிஎஸ்என் டெல்டா சீனியர் பள்ளி மாணவர் ராகவேந்திரன், மிலெனியா கல்விநிலைய மாணவி ஹர்‌ஷிதா கிரு‌ஷ்ணா.
இணைந்து கூடைப்பந்து விளையாடிய ஏபிஎஸ்என் டெல்டா சீனியர் பள்ளி மாணவர் ராகவேந்திரன், மிலெனியா கல்விநிலைய மாணவி ஹர்‌ஷிதா கிரு‌ஷ்ணா. - படம்: ரவி சிங்காரம்

ஹர்‌ஷிதா ஒரு மாததத்திற்கு சனிக்கிழமைக் காலைகளில் ராகவேந்திரனின் பள்ளிக்கு வருவார். அங்கு டெல்ட்டா சீனியர் பள்ளியின் பயிற்றுவிப்பாளர்கள் உதவியுடன் இருவரும் பயிற்சி செய்வர்.

“என் இலட்சியம் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் விளையாட்டு நிர்வாகம் படித்து, ஆசிரியராவதே,” என்று முதன்முறையாக ‘பிளே இன்க்லூசிவ்’வில் பங்குபெற்ற ராகவேந்திரன் கூறினார். இதன்வழி கூடைப்பந்து விளையாடவும் அவர் கற்றார்.

“ராகவேந்திரன் எனக்கும் ஒரு முன்னுதாரணம். அவர் சக மாணவர்களுக்குக் கற்பித்து உதவுவார் என அவரது ஆசிரியர்கள் என்னிடம் கூறியுள்ளனர்,” என்றார் ஹர்‌ஷிதா.

பெற்றோர், பள்ளிகளின் ஊக்குவிப்பு அவசியம்

தரைப்பந்து விளையாட்டில் வெண்கலம் வென்றார் ‘மைண்ட்ஸ்’ உட்லண்ட்ஸ் கார்டன்ஸ் பள்ளி மாணவி திவ்யா, 18. நான்காம் முறையாக அவர் இப்போட்டிகளில் பங்கேற்கிறார். இதற்கு முன் அவர் ‘போசா’வில் தங்கமும் வென்றார்.

“எனக்கு மொத்தம் ஒன்பது பதக்கங்கள் கிடைத்துள்ளன,” என்றார் திவ்யா.

“திவ்யாவுக்கு ‘ஏடிஎச்டி’ எனப்படும் கவனக்குறைவு உள்ளது. அவருக்கு விளையாட்டு பிடிக்கும். தொடக்கப்பள்ளியில் அவர் தரைப்பந்து அணியில் சேர ஆசைப்பட்டபோதும் அவர் ஏற்கப்படவில்லை. இந்தப் பள்ளியோ அவரை நன்கு ஊக்குவிக்கிறது,” என்றார் அவருடைய தந்தை திரு குமரன்.

தன் தாயார் ராதிகா உடன் திவ்யா. பிளே இன்க்லூசிவ் வழியாக, திவ்யாவுக்கு விளையாட்டில் நாட்டம் அதிகரித்துள்ளதாகக் கூறினார் ராதிகா.
தன் தாயார் ராதிகா உடன் திவ்யா. பிளே இன்க்லூசிவ் வழியாக, திவ்யாவுக்கு விளையாட்டில் நாட்டம் அதிகரித்துள்ளதாகக் கூறினார் ராதிகா. - படம்: ரவி சிங்காரம்

தசைவளக் குறைபாடு (muscular dystrophy) கொண்ட ஹில்குரோவ் உயர்நிலைப்பள்ளி மாணவர் வில்பர் ஓங், 13, ‘போசா’ போட்டியில் கலந்துகொண்டார்.

‘போசா’ பந்தை வீச விளையாட்டாளர்கள் சாய்வுப்பாதையைப் (Ramp) பயன்படுத்துகின்றனர். அத்தகைய சாய்வுப்பாதை அவருக்கு இல்லாததால் அவருடைய பள்ளியே சாய்வுப்பாதை ஒன்றை உருவாக்கி உதவியது.

“எங்கள் பள்ளியில், தவறான சகவாசத்துக்கு ஆளாகக்கூடிய இளையரை, உடற்குறையுள்ளோருடன் சேர்ந்து விளையாட ஊக்குவித்தோம்.

இதன்வழி, தங்களுக்கு மட்டும்தான் பிரச்சினைகள் உள்ளன என அவர்கள் எண்ணமாட்டார்கள். பிறருக்கு ஆதரவு தரவும் அவர் கற்றுக்கொள்வார்கள்,” என்றார் ஹில்குரோவ் பள்ளியாசிரியர் சியாமளா.

‘போசா’ விளையாட்டில் பங்கேற்ற வில்பருக்காக அவருடைய பள்ளி சாய்வுப்பாதை ஒன்றை அமைத்தது. படத்தில் அவருடன் ஹில்குரோவ் பள்ளியாசிரியர்கள்.
‘போசா’ விளையாட்டில் பங்கேற்ற வில்பருக்காக அவருடைய பள்ளி சாய்வுப்பாதை ஒன்றை அமைத்தது. படத்தில் அவருடன் ஹில்குரோவ் பள்ளியாசிரியர்கள். - படம்: ரவி சிங்காரம்

‘மைண்ட்ஸ்’ அங் மோ கியோ தினப் பராமரிப்பு நிலையத்துக்குச் செல்லும் 20 வயது மகனின் தாயார் பானு, அவரை ‘பிளே இன்க்லூசிவ்’வுக்கு அழைத்துவந்திருந்தார்.

ஒற்றைப் பெற்றோரான அவர், மகனுக்காகத் தன் முழுநேர வேலையை விட்டுவிட்டுப் பகுதிநேர வேலை செய்கிறார்.

‘பிளே இன்க்லூசிவ்’ போன்ற நிகழ்ச்சிகள் மகனுக்கு நல்ல வாய்ப்புகளை நல்குவதாக அவர் கூறினார்.

‘போசா’ விளையாட்டு.
‘போசா’ விளையாட்டு. - படம்: ஸ்போர்ட்எஸ்ஜி/லாரன்ஸ் லோ
குறிப்புச் சொற்கள்