தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய ஐஃபோன் 17 தொடர்பான இணைய மோசடிகள் அதிகரிப்பு

2 mins read
fa75a5f7-5392-46e4-b4a9-07fd25b75b92
சிங்கப்பூரில் செப்டம்பர் 19 முதல் புதிய ஐஃபோன் 17 பொது விற்பனை தொடங்கியுள்ளது. - படம்: ப்ளூம்பெர்க்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஃபோன் 17ன் வெளியீட்டைத் தொடர்ந்து, அதன் தொடர்பில் மோசடிகள் அதிகரித்துள்ளதை இணையப் பாதுகாப்பு நிறுவனம் ‘காஸ்பர்ஸ்கை’ (Kaspersky) கண்டறிந்துள்ளது.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களையும் வங்கி விவரங்களையும் பறிக்க, இணைய மோசடிக்காரர்கள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

சிங்கப்பூரில் செப்டம்பர் 19 முதல் புதிய ஐஃபோன் 17ன் விற்பனை தொடங்கியுள்ள நிலையில், இத்தகைய இணையத் தாக்குதல்கள் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், வாடிக்கையாளர் தரவு திருட்டு, நிதி இழப்பு போன்ற ஆபத்துகளைச் சந்திக்க நேரிடலாம்.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் மோசடிகள்

‘காஸ்பெர்ஸ்கை’ வெளியிட்டுள்ள ஆய்வின்படி, புதிய ஐஃபோனைச் சுற்றியுள்ள மக்களின் மோகத்தை மோசடிக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிகாரபூர்வ ஆப்பிள் வலைத்தளத்தைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட போலி இணையத்தளங்கள் சில இயங்கி வருகின்றன.

போலி உத்தரவாதங்களை அளித்து வங்கி அட்டை விவரங்களைத் திருடுவதற்காக இத்தகைய வலைத்தளங்கள் செயல்படுகின்றன.

வங்கி அட்டை விவரங்களைத் திருடுவதோடு, ஐஃபோன்களைப் பரிசாக வழங்கும் அதிஷ்ட குலுக்கல்களை நடத்துவதாகக் கூறி மோசடி செய்பவர்களும் உள்ளனர்.

மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைச் சமர்ப்பிக்க இத்தகைய தளங்களின்வழி பயனீட்டாளர்கள் கேட்கப்படுவர். 

நம்பகத்தன்மையைக் கூட்டுவதற்காக, மோசடி செய்பவர்கள் இதற்கு முன் வெற்றி பெற்றவர்களின் போலிச் சான்றுகளைக் காட்டுகின்றனர்.

சில சமயங்களில், இணையம் வழி வாங்கிய பொருள்கள் வாடிக்கையாளரிடம் சென்று சேரும் முன்பே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இதனையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி மோசடிகள் மின்னஞ்சல்கள் அல்லது தொடர்ச்சியான ‘ஃபிஷிங்’ முயற்சிகளுக்கு ஆளாகிறார்கள்.

ஐஃபோன் தொடர்பான மோசடிகளில் சிக்காமல் இருக்க, ‘காஸ்பெர்ஸ்கை’ நிறுவனம் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது.

அதிகாரபூர்வ ஆப்பிள் நிறுவன வலைத்தளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இணையக் கடைகள் வாயிலாக மட்டுமே புதிய ஐஃபோனை வாங்க வேண்டும். 

இணையத்தளங்களின் முகவரிகளை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கவும். பெரிய தள்ளுபடிகள் அல்லது பரிசுகளை வாக்குறுதி அளிக்கும் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் அல்லது இணைய விளம்பரங்கள் பெற்றால் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

இலவசப் பொருள்களுக்காக உங்கள் தனிப்பட்ட தரவைப் பகிர்ந்துகொள்ளாதீர்கள். சட்டபூர்வமான போட்டிகள் பெரும்பாலும் முக்கியமான தகவல்களை முன்கூட்டியே கேட்பது அரிது. உங்கள் பெயர், அட்டை விவரங்கள் அல்லது முகவரி போன்றவற்றைக் கோருவது எச்சரிக்கைக்கான அறிகுறிகளாகக் கருதப்பட வேண்டும்.

இவை தவிர, முன்பின் தெரியாதோருடன் மேற்கொள்ளும் வங்கிப் பரிவர்த்தனைகளுக்குப் பிறகு உங்கள் வங்கிக் கணக்கைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.

குறிப்புச் சொற்கள்