பெரும்பாலான பெற்றோர் சிறிய அறிகுறிகள் மூலமே பிள்ளைகளுக்குக் கிட்டப்பார்வை குறைபாடு இருப்பதைக் கண்டறிகின்றனர்.
தொலைக்காட்சிக்கு மிக அருகில் சென்று அமருவது, தூரத்திலுள்ள வீதிப் பலகையைப் பார்க்கக் கண்களைச் சுருக்குவது, முகத்திற்கு மிக அருகில் வைத்துப் புத்தகத்தைப் படிக்கும் பழக்கம் போன்றவை அறிகுறிகளாகும்.
அவை சாதாரணமான ஒரு பழக்கமாகவோ அல்லது மாலையில் ஏற்படும் சோர்வாகவோ தோன்றலாம். ஆனால்,ஆவை அனைத்தும் ஒன்றிணைந்து ‘மயோப்பியா’ (Myopia) எனப்படும் கிட்டப்பார்வைக் குறைபாட்டின் தொடக்கநிலை அறிகுறியாக இருக்கலாம்.
கண் விழிப்பந்து (Eyeball) இயல்பான அளவைவிட சற்று நீளமாக வளரும்போது கிட்டப்பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.
இதனால், ஒளிக்கதிர்கள் விழித்திரையின் மேல் விழாமல், அதற்குச் சற்று முன்னதாகவே விழுகின்றன.
அதன் விளைவாக, அருகில் உள்ள பொருள்கள் தெளிவாகவும் தொலைவில் உள்ள பொருள்கள் மங்கலாகவும் தெரிகின்றன.
நகர்ப்புறங்களில் நீண்ட நேரப் பள்ளிப் படிப்பினாலும் பெரும்பாலான நேரத்தை வீடுகளுக்குள்ளேயே செலவிடுவதினாலும் சிறுவயதிலேயே பிள்ளைகள் கிட்டப்பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது.
பிள்ளைகள் தங்களது நேரத்தை எங்கே செலவிடுகிறார்கள் என்பதே இதன் முக்கியக் காரணியாகும்.
சூரிய ஒளி கண்களில் படும்போது ‘டோப்பமைன்’ எனும் இயற்கை வேதிப்பொருள் சுரக்கிறது. அது விழிப்பந்து அதிகளவில் நீண்டு வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
வெளியே செல்வதைக் குறைத்து, கணினித் திரைகள், அருகிலிருந்து படிக்கும் பழக்கத்திற்கு அதிக நேரத்தைச் செலவிடும்போது, இந்தக் கட்டுப்பாட்டுச் செயல்பாடு குறைகிறது.
கண்ணின் ஒளியைத் தீர்மானிக்கும் பிள்ளைப் பருவம்
பெரியவர்களுக்கு ஏற்படும் கிட்டப்பார்வையைவிட பிள்ளைப் பருவக் கிட்டப்பார்வை குறைபாடு மிகவும் மாறுபட்டது.
எவ்வளவு விரைவில் இது தொடங்குகிறதோ, அவ்வளவு வேகமாக இது தீவிரமடையக்கூடும்.
உரிய நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், இது தீவிரக் கிட்டப்பார்வை (High Myopia) நிலைக்குச் சென்று, பிற்காலத்தில் விழித்திரை விலகல் (Retinal detachment), கண் அழுத்த நோய் (Glaucoma), கண்புரை (Cataract), விழித்திரையில் மஞ்சள் புள்ளிப் பாதிப்பு போன்ற தீவிரக் கண் நோய்களுக்கு வழிவகுக்கும்.
பெரும்பாலான பிள்ளைகள் தங்களுக்குத் தொலைவில் உள்ளவை மங்கலாகத் தெரிவதைப் பற்றிப் பெற்றோரிடம் கூறுவதில்லை.
தங்களுக்குப் பார்வைக் குறைபாடு இருப்பதை உணராமல், வகுப்பறையின் முன் வரிசைக்கு மாறுவது அல்லது கண்களைச் சுருக்கிப் பார்ப்பது போன்ற மாற்றங்களைச் செய்துகொள்கின்றனர்.
எனவே, வழக்கமான கண் பரிசோதனைகளை மேற்கொள்வது பெற்றோரின் முக்கியப் பொறுப்பாகிறது.
இன்றைய ஒளியியல் தொழில் நுட்பம், பார்வையைச் சீராக்குவதோடு மட்டுமல்லாமல், கிட்டப்பார்வைக் குறைபாடு வேகமாகத் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையிலும் நவீனக் கண்ணாடி வில்லைகளை உருவாக்கியுள்ளது.
தினமும் ஓரிரு மணி நேரம் திறந்தவெளியில் செலவிடுவது, 20-20-20 விதிமுறையைப் பின்பற்றுவது (20 நிமிடப் படிப்பிற்குப் பிறகு 20 அடி தொலைவிலுள்ள பொருளை 20 விநாடிகள் பார்ப்பது), வழக்கமான கண் பரிசோதனைகளைச் செய்வது ஆகிய எளிய பழக்கவழக்கங்கள் பிள்ளைகளின் நீண்டகாலக் கண் சுகாதாரத்தை உறுதி செய்ய உதவும்.

