தாங்கள் சிறுவயதில் கொண்டாடிய பொங்கல் நினைவுகளைத் தங்கள் பிள்ளைகள் பார்வையிடுவதைக் களிப்புடன் ரசித்தனர் பெற்றோர். அழகிய, வண்ணமயமான பாரம்பரிய உடைகளுடன், பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தனர் சிறார்கள்.
‘அறுவடை’ எனும் கருப்பொருளில், கிராமிய மண்வாசனையை நினைவூட்டியது இந்திய மரபுடைமை நிலையத்தில் நடந்தேறிய பொங்கல் விழா.
நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைளில் பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொண்டனர்.
தமிழரின் முக்கியப் பண்பான விரும்தோம்பலைக் குறிக்கும் வண்ணம் உணவு, பானங்கள், வரவேற்பு நடனங்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின.
நிலையத்தின் ஓரத்தில், குயவரான கிருஷ்ணன் முனுசாமி மட்பாண்டங்கள் செய்ய, அவரைச் சூழ்ந்துகொண்ட குழந்தைகள் பானை வடிவமைப்பைக் கண்டு ரசித்தனர். வந்திருந்த அனைத்து குழந்தைகளுக்கும் தாம் செய்த சிறிய மண் பானைகளை அவர் பரிசளித்தார்.
மேல்மாடியில், பொங்கல் விழாவைக் குறிக்கும் ‘லேன்டர்ன்’ விளக்கு போன்ற வடிவில் அட்டையால் வடிவமைக்கக் கற்றுத்தரும் பயிலரங்கு நடைபெற்றது. அதில் சிறுவர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகப் பிற்பகல் இரண்டு மணியளவில் சர்க்கரைப் பொங்கல் வைக்க செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
நிலையத்திற்கு வெளியில், அலங்கரிக்கப்பட்ட பானையில், சர்க்கரைப் பொங்கல் சமைக்கப்பட்டது. பார்வையாளர்கள் பலரும் செய்முறைகளை அறிந்துகொண்டதுடன், பொங்கலையும் சுவைத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இந்தியப் பாரம்பரிய ஆடைகள், அலங்கார ஆபரணங்கள், உணவுப்பொருள்கள், தின்பண்டங்கள் விற்கப்பட்டன.
“இந்திய மரபுடைமை நிலையத்தில் இவ்வாண்டு, அறுவடையை மையமாகக் கொண்டு கிராமியச் சூழலை உருவாக்கியுள்ளோம். இது பலருக்கு பாரம்பரியத்தை நெருக்கத்தில் கொண்டு செல்லும் என நம்புகிறோம்,” என்றார் நிலையத்தின் பொது மேலாளர் கிருத்திகா மகேந்திரன்.
நிலையத்தின் ஒரு மேசையில், பல சிறுமிகளும் பெரியவர்களும் சூழ்ந்தபடி சிரமத்துடன் கம்பிக் கோலமிட்டுக் கொண்டிருந்தனர். அதனைச் சமூக ஊடகங்களில் பிரபலமாக உள்ள ஜீவா வழிநடத்தினார்.
“சிறுவயதில் கோலங்களைப் பார்த்திருக்கிறேன். திடீரென ஒருநாள் கோலமிட்டுப் பார்த்தேன். அதன் பின்னால் இருந்த நுணுக்கங்கள், கணிதம் ஆகியவை என்னை ஈர்த்தன. தற்போது பெரிய கோலங்கள் போடமுடிகிறது. இதனை நீடித்து நிலைக்கவைக்க அடுத்த தலைமுறைக்கு ஆர்வம் வர வேண்டும். அதற்கு இது வாய்ப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி,” என்றார் ஜீவா.
திறன்பேசியில் நேரம் செலவிடும் குழந்தைகளுக்குப் பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்துள்ளதாகச் சொன்ன மகேஸ்வரன், “பல்லாங்குழி, பரமபதம், ஆடுபுலியாட்டம் எல்லாம் உத்திகள் நிறைந்த விளையாட்டுகள். இது சமூக ஒன்றிணைவுக்கும் உதவும். அனைத்து வயதினரும் விளையாடி மகிழ்கின்றனர்,” என்றார்.
நிலையத்தில் பாரம்பரிய அணிகலன்களை விற்கும் கடைவைத்திருந்த அமுதா, “இந்தியர் மட்டுமின்றி பல இனத்தவரும், சுற்றுப் பயணிகளும்கூட தாமரை, மயில், அன்னபட்சி, யானை ஆகிய மரபுசார் அலங்காரங்கள் கொண்ட அணிகலன்களை ரசித்து வாங்குகின்றனர். பலரைப் பாரம்பரிய உடைகளில் பார்ப்பது கூடுதல் மகிழ்ச்சி,” என்றார்.
தமது கணவர் விஜய், ஏழு வயது மகள் சஹானா ஆராத்யாவுடன் வந்திருந்தார் சீமெய்வாசியான முத்து மாலதி,43.
“வீட்டில் பழமைகுறித்து எவ்வளவு கற்றுக்கொடுத்தாலும், அனுபவபூர்வமாக அறிவது கூடுதல் சிறப்பானது. சமூகத்தில் பலருடன் பழகவும், சந்தித்து மகிழவும் இது வாய்ப்பளித்துள்ளது,” என்றார்.
“மட்பாண்டம் செய்வதை இதுவரை நேரில் பார்த்ததில்லை. அருகில் இருந்து பார்த்தது, ஈரமான களிமண்ணைத் தொட்டு உணர்ந்தது எல்லாம் மாறுபட்ட அனுபவம்,” என்றார் உயர்நிலைப் பள்ளி மாணவி யுவராஜ் நிஹாரிகா.
தமது மனைவி, மூன்று குழந்தைகளுடன் வந்திருந்தார் முகம்மது ஜஹாஃபர். “நான் பள்ளியில் பயின்றபோது விளையாட்டுகள், பொங்கல் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்துள்ளேன். அந்த நினைவுகளை இது தூண்டியுள்ளது,” என்றார் அவர்.
தனியாக வசிக்கும்போது பொங்கல் படைத்து வழிபடுவது மட்டுமே வழக்கமாக இருந்துள்ளது. கம்பத்து நாள்களில் பெருங்கூட்டமாக இணைந்து பொங்கல் கொண்டாடுவோம். பேசி, சிரித்து, விளையாடி மகிழ்வோம். இது அந்நினைவுகளைக் கண்முன் நிறுத்தியது,” என்றார் 65 வயதான குமாரி.
“எனது தங்கை, அவரது கணவர், பேரப்பிள்ளைகளுடன் இங்கு வந்தது பொங்கல் விழாவைச் சிறப்பாக்கியுள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.

