கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டவுள்ள இந்திய மரபுடைமை நிலையம்

2 mins read
df0dd329-aa4b-46f3-9ec6-bf5328bf3574
முன்னோட்ட நிகழ்ச்சியில் கதாபாத்திரங்களாகத் தோன்றி கதை சொன்ன கலைஞர்கள். - படம்: லாவண்யா வீரராகவன்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 30 புதிய கலைப்பொருள்கள், அவற்றை எளிதில் விளக்கும் வகையிலான வசன நாடகம், பயிலரங்குகள், நடவடிக்கைகள் என இவ்வார இறுதியில் களைகட்டவுள்ளது இந்திய மரபுடைமை நிலையம்.

மே 7ஆம் தேதி நிலையம் தனது பத்தாண்டு நிறைவை எட்டிய நிலையில், அதனைக் கொண்டாடும் நோக்கில் வருகையாளர்களுக்கு இந்தியப் பண்பாட்டையும் மரபையும் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

வரும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி, 4 மணி என இருமுறை இந்நிகழ்ச்சிகள் பொதுமக்களுக்காக நடத்தப்படவுள்ளன. அவற்றுக்கு அனுமதி இலவசம்.

புதன்கிழமை நடைபெற்ற முன்னோட்ட நிகழ்ச்சியில் கலைப்பொருள்கள் சிலவற்றுடன், தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையை அடிப்படையாகக் கொண்ட கைவினைப் பொருள் வண்ணம் தீட்டல், நிகழ்நேர ஓவியம் வரைதல் எனச் சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிகழ்ச்சிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

வண்ணம் தீட்டல் உள்ளிட்ட பொதுமக்களுக்கான நடவடிக்கைகளுடன், வருகையாளர்களுக்குப் பத்தாண்டுக் கொண்டாட்டச் சிறப்புப் படம் அச்சிடப்பட்ட பைகளும் வழங்கப்படவுள்ளன.
வண்ணம் தீட்டல் உள்ளிட்ட பொதுமக்களுக்கான நடவடிக்கைகளுடன், வருகையாளர்களுக்குப் பத்தாண்டுக் கொண்டாட்டச் சிறப்புப் படம் அச்சிடப்பட்ட பைகளும் வழங்கப்படவுள்ளன. - படம்: லாவண்யா வீரராகவன்

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மருதாணியிடும் கம்பி போன்ற கருவி, 1960களில் பொங்கல் விழா அழைப்புப் பத்திரிக்கை ஆகியவையும் புதிதாக இடம்பெற்றுள்ளன.

புதிய கலைப்பொருள்களில் குறிப்பிடத் தகுந்த பல பொருள்களைச் சமூகத்திலுள்ளோர் கடனாகவும், அன்பளிப்பாகவும் அளித்துள்ளனர்.

தமது தந்தை பல்லாண்டுகளாகச் சேகரித்து வைத்த பொருள்கள், புகைப்படங்களை நிலையத்துக்கு நன்கொடையளித்த மலையரசி சீனிவாசன், 64, அது மனநிறைவு தருவதாகச் சொன்னார்.

“என் தந்தை முருகு சீனிவாசனின் நினைவாக அவரது பொருள்கள் அனைத்தையும் வைத்திருந்தோம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருள்கள் எங்கள் குடும்பத்தினருடையது என்று இல்லாமல் அனைவருக்கும் பயன்தர வேண்டும் என்பதால் நன்கொடையளித்தோம். சில பொருள்கள் அக்காலகட்டத்தின் சான்றாக, வாழ்வியலில் நினைவாக இருக்கும். அவற்றை அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும்,” என்றார் அவர்.

“இந்திய மரபுடைமை நிலையத்தின் பத்தாமாண்டு நிறைவைச் சமூகத்துடன் இணைந்து கொண்டாடும் நோக்கில் இந்நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அரும்பொருளகங்கள் கதைகளைத்தான் பேசுகின்றன. ஆனால் பெரும்பாலும் அவற்றைப் படித்துத் தெரிந்துகொள்ள பொறுமையிருப்பதில்லை. அதனை அனைத்து வயதினருக்கும், அனைத்து இனத்தவருக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் நாடக வடிவில் விளக்கம் அளிக்கவுள்ளோம்,” என்றார் இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைமை மேலாளர் மரியா பவானிதாஸ்.

“இந்தியருக்கு மட்டுமின்றி, பல்லினத்தவர்க்கும் சுற்றுப்பயணிகளுக்கும் இந்திய கலாசாரத்தைப் பறைசாற்றத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. ஏறத்தாழ 1.6 மில்லியன் மக்கள் வருகையளித்துள்ளனர். பொதுவான அரும்பொருளகம் போல அமைதியாக இல்லாமல், இந்நிலையம் எப்போதும் வண்ணமயமாக இருக்கிறது. இன்னும் பலதரப்பட்ட பார்வையாளர்களைச் சென்றடைந்து, கலாசாரத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டு செல்லவும், புரிதலை ஏற்படுத்தும் நோக்கிலும் பயணிப்பதே இலக்கு”, என்றார் இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவர் ரா ராஜாராம்.

குறிப்புச் சொற்கள்