மாணவர்கள், சிறுவர்கள், சுற்றுப்பயணிகள் உள்ளிட்ட அனைவரும் பொங்கல் பாரம்பரியம் குறித்து அறிந்துகொள்ளும் நோக்கில் இந்திய மரபுடைமை நிலையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொங்கல் பானை, மாடுகள், நெற்பயிர்கள் என கிராமத்து வாழ்வைக் கண்முன் நிறுத்தும் வண்ணம் அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.
பல இன சிறுவர்களும் பொங்கல் குறித்து தெரிந்துகொள்ள ஏதுவாக இரு பொங்கல் புத்தகங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நான்கு வயதுள்ள சிறுவர்களுக்கு எளிய முறையில் பொங்கல் பானை, செய்முறை விளக்கங்கள் கொண்ட நடவடிக்கைப் புத்தகமும், எட்டு வயதுள்ள சிறுவர்களுக்கு கூடுதல் தகவல்களுடன் கூடிய நடவடிக்கைப் புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளன. பொங்கல் சிறப்புப் பாடலும் வெளியீடு காணவுள்ளது.
சனி, ஞாயிறு (ஜனவரி 11, 12) நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம்.
சிறுவர்களுக்கான வண்ணம் தீட்டுதல், மருதாணி இடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியும் இடம்பெறும்.
“ஆண்டுதோறும் பொங்கல் காலகட்டத்தில் மரபுசார் நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்குவிக்கும் வண்ணம் சிறுவர்கள், குடும்பங்களுக்கான நிகழ்ச்சிகள் இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டும் அவை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,” என்று கூறினார் இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைமை மேலாளர் மரியா பவானிதாஸ்.
“தமிழர் மரபு, இலை விருந்தில் வெளிப்படும். அதில் பரிமாறப்படும் உணவு வகைகள், பரிமாறும் முறை, சாப்பிடும் முறை உள்ளிட்ட அனுபவங்களை அனைவர்க்கும் வழங்கும் நோக்கில் இந்த அங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்றார் இந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள வாழையிலை அனுபவம் எனும் அங்கத்தை வழிநடத்தவுள்ள ஜெயபிரேமா.
தொடர்புடைய செய்திகள்
கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழிநடத்திவரும் இவர் இவ்வாண்டு இருமுறை இந்த அங்கம் இடம்பெறும் என்று சொன்னார்.