தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘எல்லையற்ற பரிமாணங்கள்’: உருவங்கள் கடந்த உணர்வோவியங்கள்

2 mins read
5362fe2e-797e-4317-b538-d43f0800f464
நிகழ்வுக் கலையாகத் தொகுக்கப்பட்டுள்ள சுருக்க ஓவியக் கண்காட்சி. - படம்: சிஃபாஸ்

அமைதியை உணர்வதற்குப் பல வழிகள் இருந்தபோதும், சிறந்த ஓவியங்களை ஒருவர் பார்க்கும்போது நொடிப்பொழுதில் அமைதி அவரது நெஞ்சை நிரப்பும்.

ஓவியங்களின் தரமும் நுட்பமும் பார்ப்பவருக்குள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்துள்ளது என்று தமிழ் முரசிடம் தெரிவித்தனர் சிங்கப்பூர் நுண்கலைக் கழகத்தின் (சிஃபாஸ்) ‘எல்லையற்ற பரிமாணங்கள்’ (Infinite Dimensions) என்ற ஓவியக் கலைக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள்.

அக்டோபர் 18 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்ற கண்காட்சித் தளம், பிள்ளைகளின் கலகலப்புச் சூழ, நிறங்கள் பல எங்கும் சுழன்றவாறு தோற்றமளித்தது.

‘எப்ட்ஸ்டிரேக்ட் ஆர்ட்’ (abstract art) எனப்படும் சுருக்க ஓவியங்களைப் பல வண்ணங்களில் தீட்டி இதனை அமைத்திருக்கிறார் திருவாட்டி நடராஜன் ஷண்முகவடிவு.

சிஃபாஸ் பள்ளியினரால் பொன்னாடை போர்த்தப்பட்டு கெளரவிக்கப்படும் திருவாட்டி நடராஜன் ஷண்முகவடிவு.
சிஃபாஸ் பள்ளியினரால் பொன்னாடை போர்த்தப்பட்டு கெளரவிக்கப்படும் திருவாட்டி நடராஜன் ஷண்முகவடிவு. - படம்: சிஃபாஸ்

வண்ணங்கள் நிறைந்த, விழிதொட்டு பேசும் இந்த ஓவியங்கள் பரவசமூட்டும் வகையில் செங்குத்துச் சுவர்களின் மீது பொருத்தப்பட்டிருந்தன. அத்துடன், வண்ணத்துகள்களும் மேல்மட்டத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருந்தன.

இந்தக் கண்காட்சியை ஒரு வாரத்தில் அமைத்தார் திருவாட்டி ஷண்முகவடிவு.

சென்னையின் தாம்பரத்தில் வசித்து, விவசாயத் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்று, பின் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு வந்தார் திருவாட்டி ஷண்முகவடிவு, 55.

சுருக்க ஓவியக் கண்காட்சி.
சுருக்க ஓவியக் கண்காட்சி. - படம்: கி.ஜனார்த்தனன்

இல்லத்தரசியான அவர், 2008 முதல் சிஃபாஸில் ஓவியக் கலை கற்றுவந்தார்.

33 வயதாக இருந்தபோது தொடக்கத்தில் தம் மகளுடன் பரதநாட்டியம் கற்று வந்த திருவாட்டி ஷண்முகவடிவு, சில ஆண்டுகளுக்குப் பிறகு மூட்டழற்சியால் பாதிக்கப்பட்டதால் அதை அவர் கைவிட நேர்ந்தது.

உடல் வலியைப் பொறுத்துக்கொண்டு மனவுறுதியால் அவர் மீண்டெழுந்தார். 2012ல் வகுப்புகளுக்குச் செல்வதை நிறுத்திக்கொண்ட அவர், 2016ல் மீண்டும் சேர்ந்து தம் ஓவியத் திறனை மேலும் மெருகேற்றினார்.

சுருக்க ஓவியக் கண்காட்சி.
சுருக்க ஓவியக் கண்காட்சி. - படம்: கி.ஜனார்த்தனன்

பாரம்பரிய தஞ்சாவூர் ஓவியக்கலையைக் கற்றபிறகு மற்ற பாணிகளை அவர் கையாளத் தொடங்கினார்.

“எண்ணெய் ஓவியம், அக்ரிலிக் ஓவியம் என நான் படிப்படியாக என் திறனை மேம்படுத்திக்கொண்டேன்,” என்று திருவாட்டி ஷண்முகவடிவு கூறினார். சுருக்க ஓவியங்கள், அர்த்தமற்றதாகவும் வரையறை இல்லாததாகவும் சிலர் காணக்கூடுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த திருவாட்டி ஷண்முகவடிவின் ஓவிய ஆசிரியர் ரகுவீரன் பால்ராஜ், இத்தகைய ஓவியங்களுடன் துணை வாசகங்கள் வழக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும் எனப் பதிலளித்தார்.

“அத்துடன், இத்தகைய ஓவியங்கள், பார்ப்பவர் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் காண்கிறோம். வெவ்வேறு ஓவியங்களை எந்தெந்த இடத்தில் வைப்பது என்பதிலும் சரியான திட்டமிடுதல் உள்ளது,” என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்