சுவை மிகுந்த புதுமையான பொங்கல் வகைகள்

3 mins read
6d0a3db3-5959-4d5e-bba1-c1b4ec1ed8ce
தித்திக்கும் சர்க்கரைப் பொங்கலும் மணக்கும் வெண்பொங்கலும் பொங்கல் பண்டிகையின் அடையாளங்கள். - படம்: மாலை மலர்

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அந்த வகையில், பொங்கல் பண்டிகையின் அடையாளமே தித்திக்கும் சர்க்கரைப் பொங்கலும் மணக்கும் வெண்பொங்கலும்தான்.

வழக்கமான இந்த இரு வகைப் பொங்கலுடன் நாவிற்குப் புதிய விருந்தளிக்க விரும்பும் சமையல் பிரியர்களுக்காக, இதோ சில புதுமையான, சுவையான பொங்கல் செய்முறைகள்.

தேங்காய் - ஏலக்காய்ப் பொங்கல்

பாரம்பரிய சர்க்கரைப் பொங்கலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தரும் வகை இது. வழக்கமான செய்முறையோடு, துருவிய தேங்காயைச் சேர்ப்பது இதன் சிறப்பு.

அரிசி, பாசிப்பருப்பை ஒன்றாகக் குழைய வேகவைக்கவும். வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, பாகு காய்ச்சி அதனுடன் கலக்கவும். இதனுடன் துருவிய தேங்காய், ஏலக்காய்ப் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்துக் கிளறினால், தேங்காய் வாசனையுடன் கூடிய தித்திப்பான பொங்கல் தயார்.

கீன்வா (Quinoa) பொங்கல்

உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கும் உடல்நலத்தில் அக்கறை கொண்டவர்களுக்கும் ஏற்ற நவீன வகை இது. அரிசிக்கு மாற்றாகப் புரதச்சத்து நிறைந்த ‘கீன்வா’ பயன்படுத்தப்படுகிறது.

கீன்வாவையும் பாசிப்பருப்பையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். வாணலியில் நெய் ஊற்றிச் சீரகம், மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி தாளித்து, வெந்த கீன்வாவுடன் சேர்த்துக் கிளறவும். எளிதாகச் செய்யக்கூடிய இந்தப் பொங்கல் செரிமானத்திற்கு ஏற்றதாகவும் இருக்கும்.

பரங்கிக்காய்ப் பொங்கல்

வெண்பொங்கலுக்கு அழகான மஞ்சள் நிறத்தையும் மெல்லிய இனிப்புச் சுவையையும் தரக்கூடியது பரங்கிக்காய்.

அரிசி, பருப்புடனும், சிறு துண்டுகளாக நறுக்கிய பரங்கிக்காய், மஞ்சள் தூள், சிறிது மிளகுத்தூள் சேர்த்து வேகவைக்கவும். பரங்கிக்காய் சோற்றுடன் நன்கு மசிய வேண்டும். இறுதியில் நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, மிளகு தாளித்துச் சேர்க்கவும். இது பண்டிகைக் காலத்திற்கேற்ற வண்ணமயமான உணவாக அமையும்.

வாழைப்பழப் பொங்கல்

பொங்கலில் வாழைப்பழத்தைச் சேர்ப்பது இயற்கையான இனிப்பையும் தனித்துவமான மணத்தையும் கூட்டும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான, செய்வதற்கு எளிமையான வகையாகும்.

அரிசியையும் பாசிப்பருப்பையும் ஒன்றாகக் குழைய வேகவைக்கவும். நன்கு பழுத்த வாழைப்பழத்தைத் தனியாக மசித்துக்கொள்ளவும். வெந்த சோற்றுடன் வெல்லத்தையும் மசித்த வாழைப்பழத்தையும் சேர்த்துக் கிளறவும். இறுதியில் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த் தூள் சேர்த்தால், நாவில் கரையும் சுவையான வாழைப்பழப் பொங்கல் தயார்.

பலாப்பழப் பொங்கல்

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம், பொங்கலுக்கு ஒரு தனித்துவமான சுவையைத் தருகிறது. இது கேரளா, தென்தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற, பாரம்பரிய இனிப்பு வகை.

அரிசி, பாசிப்பருப்புடன் பொடியாக நறுக்கிய பலாப்பழத் துண்டுகளையும் சேர்த்து வேகவைக்கவும்.

பிறகு வெல்லத்தைச் சேர்த்து, நன்கு கிளறவும். தாராளமாக நெய்யும் வாசனைக்கு ஏலக்காயும் சேர்த்துக் கிளறும்போது வீடு முழுவதும் பலாப்பழ வாசனை வீசும் சுவையான பொங்கல் தயார்.

சிறுதானியப் பொங்கல்

உடல்நலத்தில் அக்கறை கொண்டவர்களுக்கான சிறந்த தேர்வு இது. அரிசிக்கு மாற்றாகச் சாமை அல்லது தினை போன்ற சிறுதானியங்களைப் பயன்படுத்துவது நார்ச்சத்து நிறைந்த உணவாக அமையும்.

சாமை அல்லது தினை அரிசியுடன் பாசிப்பருப்பைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீருடன் குழைய வேகவைக்கவும். வாணலியில் நெய் ஊற்றி மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். இதை வெந்த சிறுதானியக் கலவையுடன் சேர்த்துக் கிளறினால், சுவையான, சத்தான பொங்கல் தயார்.

பொங்கல் பண்டிகைக் காலத்தில் மட்டுமன்றி மற்ற நாள்களிலும் இத்தகைய சுவையான, புதுமையான பொங்கல் வகைகளைச் செய்து, ருசிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்