கேட்போரிடம் நம்பிக்கை விதைக்கும் தன்முனைப்புப் பேச்சாளர்

3 mins read
3396f7b9-3c89-41ae-a2aa-6f461e57015b
அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட 48 வயது சக்திவேல், பிறருக்கு ஊக்கம் தரும் பயிற்றுவிப்பாளராகத் திகழ்கிறார்.  - படம்: சக்திவேல் தேவர்

பன்னிரண்டு ஆண்டுக் காலமாக ராணுவத்தில் வேலைபார்த்த சக்திவேல் தேவர், 48, சுயதொழிலில் ஈடுபட முடிவு செய்தார்.

எட்டு மாதங்கள் நிதி நிலைமை சரியில்லாமல் திண்டாடியதை அவர் நினைவுகூர்ந்தார். 

“நிலையான வருமானம் இல்லாத நிலையில் உரையாற்றுதல், காப்புறுதி முகவர் என சுயதொழிலில் ஈடுபட்டேன். அப்போது ஐந்து வயதாக இருந்த என் மகள் விரும்பிக் கேட்ட 10 வெள்ளிப் புத்தகத்தை வாங்க என்னால் இயலவில்லை. எனக்கு அந்தத் தருணம் பெரும் வருத்தத்தைத் தந்தது,” என்று சக்திவேல் கூறினார். 

தற்போது பிறருக்கு ஊக்கம் தரும் பயிற்றுவிப்பாளராகத் திகழ்கிறார்.  முன்னேற்றமில்லாத, சாதாரண வாழ்க்கையை நினைத்துச் சலித்துப்போகாமல் மாறுபட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் துணிவைப் பிறர் மனங்களில் விதைப்பதே தமது நோக்கம் என்று கூறுகிறார் அவர். 

பல்வேறு வழிகாட்டிகளிடமிருந்து கற்றுக்கொண்டு, கடினமாக உழைத்துத் தம் நிலைமையைச் சரிசெய்துகொண்டபோதும் பலமுறை சுயதொழிலைக் கைவிட எண்ணியதாக சக்திவேல் கூறினார்.

“ராணுவப் பணியின்போது வளர்த்துக்காெண்ட மீள்திறனும் கட்டொழுங்கும் சவால்களை எதிர்கொள்ளக் கைகொடுத்தன. ஆனால் என் நிலையில் பலர், ஊக்கம் குன்றி, தங்கள் கனவுகளைக் கைவிட்டிருக்கக்கூடும்,” என்றார் அவர்.

ஒன்றைச் செய்துகாட்டி அதன் பின்னரே அடுத்தவர்க்கு அறிவுரை சொல்லவேண்டும், அதனைப் பொதுவாக அறிவுரையாகச் சொல்லாமல் பிறர் செய்யக்கூடிய படிநிலைகளாக விளக்கவேண்டும் என்கிறார் சக்திவேல். 

1990களில் தமது பதின்ம வயதில், ஆசியப் பொருளியல் நெருக்கடியால் தந்தை வேலையிழந்தது தமக்குப் பொறுப்புணர்வைத் தந்ததாக அவர் நினைவுகூர்ந்தார். “புல் வெட்டுவது, கழிவறையைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்தேன்,” என்றார் சக்திவேல்.

பலதுறைத் தொழிற்கல்லூரியில் பொறியியல் படித்திருந்த அவர், பின்னர் ராணுவத்தில் சேர முற்பட்டார். காலாட்படையில் இருந்த அவர், அதிகாரியாகத் தகுதிபெற்று மின்னற்படையில் சேர முதலில் விரும்பியபோதும் ‘ஏர்போர்ன் ரேஞ்சர்’ பணியை ஏற்று கேட்பன் நிலைக்கு உயர்ந்தார்.

வாழ்வில் சந்தித்த சவால்மிக்க தருணங்கள் சிலவற்றை ‘இலீட் பர்ஃபார்மன்ஸ் புளூப்ரின்ட்’ (Elite Performance Blueprint) என்ற தமது நூலில் சக்திவேல் பகிர்ந்திருக்கிறார்.

“2008ல் முட்டித்தசையில் காயம் ஏற்பட்டு சிறிது காலத்திற்கு உடற்பயிற்சி செய்ய இயலாமல் முடங்கியிருந்தேன். ஆனால் படிப்படியாக டிரையத்லான் நெடுந்தொலைவு ஓட்டங்களை மீண்டும்  மேற்கொள்ளத் தொடங்கினேன்,” என்று அவர் கூறினார். 

புற்றுநோயால் மறைந்த தம் தந்தை, உயிர் பிரியக் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்னர், முயலாமல் வருந்துவதற்குப் பதிலாக விரும்பிய இலக்குகளை எட்டுவதற்கு முயன்றாவது பார்க்கும்படி ஊக்குவித்தது குறித்தும் சக்திவேல் பகிர்ந்தார்.

60 நாள்களுக்குள் புத்தகத்தை எழுதி முடிப்பதைச் சவாலாக அவர் ஏற்றுக்கொண்டார். அவர் அயர்ன்மேன் நெடுந்தொலைவு ஓட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. 

நூலை எழுதி முடித்தபின் அதற்கான முன்னுரையை எழுத அமைச்சர் டெஸ்மண்ட் டானை அணுகியபோது அவர் அதை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார் சக்திவேல்.  

சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ளோர் சமூக ஊடகம்வழி இணைந்து, அவர் பரிந்துரைக்கும் செயல்முறை உத்திகளை சேர்ந்து செய்கின்றனர். ஒருவரையொருவர் ஊக்கத்தால் ஆதரிக்கும் ஆக்கபூர்வமான சமூகத்தை உருவாக்கும் நோக்கமும் தமக்கு இருப்பதாக சக்திவேல் கூறினார். 

சிண்டா உள்ளிட்ட அமைப்புகளில் பயிலரங்குகளை நடத்தி, மாணவர்களுக்குப் பல்வேறு உத்திகளைக் கற்பித்து அவர் ஊக்கப்படுத்துகிறார். 

சந்தேக மனப்பான்மையால் பலர், முயற்சி எடுக்காமல் முன்னேற்றம் காண்பதில்லை என்றார் சக்திவேல்.  

“நான் கல்விமானோ சிறப்பு ஆற்றல்களைக் கொண்டவரோ இல்லை என்றாலும் தியானம், மனப்பயிற்சி உள்ளிட்டவற்றால் வெற்றி கண்டேன். மனம் வைத்தால் எல்லாருக்கும் இது சாத்தியமே,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்