தேசிய நூலக வாரியத்தின் 16வது தளத்தில் (POD) வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரை பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் சிங்கப்பூர் கிளை ஆகிய அமைப்புகளுடன் இணைந்து சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் முன்னின்று அக்கருத்தரங்கை நடத்துகிறது.
கருத்தரங்கில் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைப் படைக்க இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து சுமார் 75 பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் வருகை தந்து கலந்துகொள்ளவிருக்கிறார்கள். பொதுமக்கள் கருத்தரங்கப் பார்வையாளர்களாக அனுமதிக்கப்படவிருக்கிறார்கள். மொத்தம் 150 பேராளர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுமைத்தேனீ மா. அன்பழகனின் வரவேற்புரைக்குப் பின்னர் காலை 10 மணிக்கு சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் முன்னாள் நியமன உறுப்பினர் இரா. தினகரன் விழாவைத் தொடங்கிவைத்து உரையாற்றுவார்.
தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழக இந்திய மொழிப்புலத்தின் முதன்மையர் முதுமுனைவர் அரங்கபாரி கருத்தரங்கின் நோக்கவுரையை நிகழ்த்த உள்ளார்.
இதற்கிடையில், சிங்கப்பூர் மனித இயல், அறிவியல் பள்ளி மற்றும் இலக்கியப் பட்டப்படிப்புத் துறையின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் மணிவண்ணன் முருகேசன் வாழ்த்துரை வழங்க இருக்கிறார்.
இறுதி நிகழ்வாக மாலை 5 மணியளவில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் முன்னாள் நியமன உறுப்பினர் முகம்மது இர்ஷாத் நிறைவுரை ஆற்றி ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்குவார்.
கலைஞன் பதிப்பகம் நந்தன் மாசிலாமணியின் நன்றியுரையுடன் கலைநிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேல்விவரம் அறிய, 9005 3043 என்ற எண்ணில் திரு அன்பழகனைத் தொடர்புகொள்ளலாம்.

