நம்ப முடியாத முதலீட்டுவாய்ப்புகளைத் தவிர்க்கவும்

முதலீடு மோசடிகள் கடந்தாண்டின் ஐந்து ஆக அதிக மோசடி வகைகளில் ஒன்றாகும். 4,030 முதலீடு மோசடி புகார்கள் பதிவானதாக காவல்துறை கூறியது.

நம்ப முடியாத முதலீட்டுவாய்ப்புகளைத் தவிர்க்கவும்

3 mins read
விரைவான எளிதான வரவுகள் தர உறுதியளிக்கும் முதலீட்டு திட்டமா? அது மோசடியாக இருக்கலாம்.
ccd571f6-83e6-4f02-9182-ed02dc9c82e0
பங்குச் சந்தை நிலவரத்தை வர்த்தகர் பார்க்கும்படியான மாதிரிப் படம். - படம்: ஜெட்டி இமேஜஸ்

ஒரே இரவில் பணக்காரர் ஆக்கும் முதலீடு வாய்ப்புகள் திரு நார்மன் லிம்மின் குறுஞ்செய்தி செயலிகளில் குவிகின்றன. கிட்டத்தட்ட ஆபத்தே இல்லாமல் ஒரே மாதத்தில் 20% வரவுகள் பெறலாம்; நண்பர் ஒருவரையும் சேர்த்துக்கொண்டால் லாபகரமான தொகைகளையும் கூடுதலாக பெறலாம் என்றும் கூறுபவை அவை.

மென்பொருள் பொறியியலாளரான திரு லிம்முக்கோ, வேண்டப்படாத இந்த குறுஞ்செய்திகள் அபாயத்துக்குரியவை என புலப்பட்டது.

கிட்டத்தட்ட வாரம் இருமுறையாவது 31 வயது திரு லிம் முதலீடு வாய்ப்புகளை விளம்பரப்படுத்தும் புது வாட்சாப் அல்லது டெலிகிராம் குழுக்களில் சேர்க்கப்படுகிறார்.

“உண்மையில் லாபகரமானதாக இருந்தால், அத்தகைய ரகசியத்தை ஏன் எல்லோரோடும் பகிர்கின்றனர்?” என்றார், 18 வயது முதல் நிதி சந்தைகளில் ஈடுபட்டு முதலீட்டில் அனுபவப்பட்ட திரு லிம்.

குறைந்த காலத்துக்கு மட்டும் உள்ள சலுகைகள், காலக்கெடுக்களோடு இருக்கும் அன்பளிப்புகள் அல்லது தள்ளுபடிகள், மற்றும் பல ஆண்டுகால அனுபவம், பல விருதுகள், அதிகளவில் முதலீடு வரவுகள் முதலிய போலி சாதனைகள், ஆகியவற்றை முதலீடு மோசடிகளின் பிற அறிகுறிகளாக தேசிய நிதிக்கல்வி திட்டமான ‘மனிசென்ஸ்’ குறிப்பிடுகிறது.

பொருளியல் பட்டதாரியான திரு லிம் நிதி சந்தையில் ஈடுபடும்போது சில முக்கிய கொள்கைகளைப் பின்பற்றுவதுண்டு. உதாரணத்துக்கு, சந்தையில் வரவுகள் அடிப்படையில் முந்திக்கொள்வதைவிட திரு லிம் தொடர்ச்சியாக முதலீடு செய்வதில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்.

“வெகுவிரைவில் பணம் ஈட்டும் திட்டங்களில் நான் எப்போதும் நம்பமாட்டேன். முதலீடுகள் பற்றி நான் அறிந்தவற்றுக்கு எதிர்மறையாக அவை உள்ளன,” என்றார் திரு லிம்.

மாதந்தோறும் தமது ஊதியத்தில் 20 விழுக்காட்டினை முதலீடு செய்யும் அவர், தமது 50களில் பணியோய்வு பெறும் குறிக்கோளைக் கொண்டுள்ளார். அவரின் முதலீடுகள் அனைத்தும் வங்கி தரகர் ஒருவரால் கையாளப்படுகின்றன. குறைந்த ஆபத்துள்ளதாக திரு லிம் கருதும் சிங்கப்பூர் நிலச்சொத்து முதலீடு நிதிகள் (ரெய்ட்ஸ்) அவரின் முதன்மையான முதலீட்டுத் தொகுதியாகும்.

பாதுகாப்பாய் இருக்க அதிவிழிப்புடன் இருக்கவும்

சிலருக்கு, அபாயக்குறிகள் அவ்வளவு தெளிவாக தென்படுவதில்லை.  மக்கள் ஏமாறுவது ஏன் என விளக்குகையில், “மோசடிக்காரர்கள் மக்களுடன் உரையாடும்போது அவர்களின் பலவீனங்களை குறிவைக்கும் உத்திகளைப் பயன்படுத்தி ஏமாற்றுகின்றனர்,” என்றார்,சிங்கப்பூர் காவல்துறையின் இயக்கங்கள் பிரிவில் உள்ள மோசடி பொதுக்கல்வி அலுவலகத்தின் துணை நிர்வாகி திரு ஜெஃப்ரி சின்.  

முதலீடு மோசடி புகார்களின் எண்ணிக்கை கடந்தாண்டு மட்டும் 4,030. 2023இன் ஐந்து ஆக அதிகமான மோசடி வகைகளில் அது இடம்பெற்றது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சராசரியாக $50,700 இழந்தனர். 

முதலீடு மோசடிகளுக்கான மூன்று முக்கிய தொடர்பு வழிகள்:

  1. நட்புக்கொள்வது. மோசடிக்காரர்கள் சமூக ஊடகம் வாயிலாக சில நபர்களுடன் முதலில் தொடர்புகொள்வர். நட்பு வளர்த்துக்கொண்டதன் பின்னர், போலியான முதலீடு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவர்.
  2. இணைய விளம்பரங்கள். போலி முதலீடு வாய்ப்புகளை சமூக ஊடக விளம்பரங்கள் வாயிலாக பாதிக்கப்பட்டோர் எதிர்கொள்கின்றனர்.
  3. குறுஞ்செய்தி தளங்கள். குழுக்களில் இணைக்கப்பட்டு போலி முதலீடு வாய்ப்புகளுக்கு பாதிக்கப்பட்டோர் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

முதலீட்டாளர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்? தாங்கள் எதிர்நோக்கும் முதலீட்டுத் தளம் சிங்கப்பூர் நாணய ஆணையத்தால் முறைப்படுத்தப்படுகிறதா என சரிபார்க்குமாறு ஆணையம் கூறியது. 

இவ்விவரங்களை ஆணையத்தின் கீழ்கண்ட சேவைகளில் காணலாம். 

நிதி நிலையங்கள் பட்டியல்: eservices.mas.gov.sg/fid

பிரதிநிதிகள் பதிவேடு: eservices.mas.gov.sg/rr

முதலீட்டாளர் எச்சரிக்கை பட்டியல்: mas.gov.sg/investor-alert-list 

“முறைப்படுத்தப்படாத தளத்தின் திட்டத்தில் ஈடுபடும்போது சிங்கப்பூர் நாணய ஆணையம் செயல்படுத்தும் சட்டங்கள் வழங்கும் பாதுகாப்பிலிருந்து விலகுவதாகும்,” என்றது ஆணையம்.

வஞ்சகர்கள் பிடியில் சிக்கவேண்டாம்

மோசடிக்காரர்கள் நுட்பமான உளவியல் உத்திகளைப் பயன்படுத்தி மக்களைக் கவரலாம் என்றார் சிங்கப்பூர் காவல்துறையின் திரு சின். முதலீடு மோசடிகளில் காணப்படும் அத்தகைய சில உத்திகள்:

  1. சமூக சான்றுகள் விளம்பரங்கள் அல்லது சமூக ஊடக குழுக்களின் மூலம் முதலீடு வாய்ப்புகளில் பங்கேற்பதன் பலன்களைக் குறித்த போலி சான்றுகளைப் பகிர்வது. 
  2. பற்றாக்குறை முதலீடு வாய்ப்பினை அக்குழுவில் உள்ளோரோடு மட்டும் பகிர்வதாகவும், அதை மிக தனித்துவமான, சிறப்பான சலுகையாக விளம்பரப்படுத்துவது. இது குழுவில் உள்ளோரிடையே சலுகையைக் கைப்பற்றும் பதட்டத்தை உண்டாக்கும். 
  3. நம்பிக்கை  முதலீடு வாய்ப்புகளில் பங்கேற்கும் முன்னர் அவர்களின் நம்பிக்கையைப் பெறுவது. நம்பத்தகுந்த, தாங்கள் விரும்பும் நபர்களால் மக்கள் இன்னும் எளிதாக வற்புறுத்தப்படுவர்.
  4. தொடர்ச்சியான அர்ப்பணிப்பு   பாதிக்கப்பட்டோர் தாங்கள் செலுத்திய நிதியைத் திரும்பப்பெற கூடுதலான கட்டணங்கள் செலுத்துவது அவசியம் என நம்பவைத்தல்.

ரொக்கத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்

ஸ்கேம்ஷீல்டு செயலி, பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கவும்

ஸ்கேம்ஷீல்ட் செயலியை தரவிறக்கம் செய்துகொண்டு, வங்கி செயலிகள், சமூக ஊடக தளங்கள், சிங்பாஸ் கணக்குகள் ஆகியவற்றில் இருபடி சரிபார்ப்பு முதலிய பாதுகாப்பு அம்சங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். பேநவ், பேலா உள்ளிட்ட மின்னிலக்க வங்கி பரிவர்த்தனைகளுக்கு பரிவர்த்தனை வரம்புகளை ஏற்படுத்துங்கள். உங்களின் தொலைதொடர்பு நிறுவனங்களின்மூலம் பன்னாட்டு அழைப்புகளைத் தடுக்கலாம். முக்கிய வங்கிகள் வழங்கும் ‘பணப்பூட்டு’ அம்சத்தை செயல்படுத்தி அன்றாட செலவுகளுக்குத் தேவைப்படாத நிதியை ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

அதிகாரப்பூர்வ தளங்களை நாடி மோசடி அறிகுறிகளை சரிபார்த்துக்கொள்ளவும்

ஸ்கேம்ஷீல்டின் வாட்சாப் வசதியைப் பயன்படுத்தியோ, மோசடி ஒழிப்பு உதவித் தொடர்பான 1800-722-6688 எண்ணை அலுவலக நேரங்களில் அழைத்தோ, scamalert.sg இணையத்தளத்தை நாடியோ, மோசடி அறிகுறிகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள். அலுவலக நேரங்களுக்குப் பின் 1800-255-0000 எனும் காவல்துறை உதவி தொடர்பை அழைத்து கூடுதல் சரிபார்ப்புகளையும் அறிவுரைகளையும் நாடலாம். சந்தேகப்படும்படியாக உள்ள இணைப்புகளைத் தட்டவேண்டாம். தெரியாதோரிடமிருந்து கைதொலைபேசி செயலிகளை தரவிறக்கம் செய்யவேண்டாம்.

அதிகாரிகள், குடும்பத்தார், நண்பர்களிடம் தெரிவிக்கவும்

வங்கியிடமும் காவல்துறையிடமும் உடனே மோசடி குற்றம் குறித்து பதிவு செய்யுங்கள். சந்தேகப்படும்படியான கணக்குகளை சமூக ஊடக தளங்களில் தடுக்கவும். ஆக அண்மைய மோசடி போக்குகளை குடும்பத்தார், நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அண்மைய மோசடி ஒழிப்பு ஆலோசனைகளைப் பெற தேசிய குற்றத் தடுப்பு மன்றத்தின் ஸ்கேம்அலர்ட் வாட்சாப் சேனலைப் பின்தொடருங்கள்.

சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து வழங்கப்படுகிறது

குறிப்புச் சொற்கள்