மனப் போராட்டங்களைக் கண்முன் காட்டிய ‘இன்விசிபிள்’

மனப் போராட்டங்களைக் கண்முன் காட்டிய ‘இன்விசிபிள்’

2 mins read
c9298e30-f553-4da0-b630-cf464496af70
‘இன்விசிபிள்’ நாடகத்தில் நடித்த பெரியாச்சி ரோஷினி (இடது), ஜஸ்பிரீத் கவுர் செகோன். - படம்: டக்கிஸ் போட்டோகிராபி 

தொண்டு நிறுவன அங்கீகாரம் பெற்ற ‘தி நெசஸரி ஸ்டேஜ்’ எனும் லாப நோக்கமற்ற நாடக நிறுவனமும் ‘ஆர்ட் டிஸ்’ (ART:DIS) எனும் லாப நோக்கமற்ற நாடகக் குழுவும் இணைந்து, எஸ்பிளனேட் அரங்கில் ஜனவரி 21 முதல் 25 வரை இன்விசிபிள் (invisible) எனும் உணர்வுபூர்வமான நாடகத்தை மேடையேற்றின.

‘தி நெசஸரி ஸ்டேஜ்’ நிறுவனத்தின் நாடக ஆசிரியரும் இணை இயக்குநருமான ஹரேஷ் சர்மா, 60, எழுதி, அவருடன் சேர்ந்து இணை இயக்குநர் கிரேஸ் கலைச்செல்வி, 48, இயக்கியுள்ள இந்த 90 நிமிட நாடகம், சமூகத்தில் வெளிப்படையாகத் தெரியாத குறைபாடுகளையும் (Invisible Disabilities) மனப் போராட்டங்களையும் பற்றிப் பேசுகிறது.

பார்வையற்றவர்களும் கண்டு மகிழவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நாடகத்தில் பாரம்பரிய கதைக்குள் கதை (embedded narration) சேர்க்கப்பட்டுள்ளது.

இன்விசிபிள் நாடகத்தில் நடித்த (இடமிருந்து) தலிஃபா ஷாரில், ஜஸ்பிரீத் கவுர் செகோன், தியான் யாங் மற்றும் பெரியாச்சி ரோஷினி.
இன்விசிபிள் நாடகத்தில் நடித்த (இடமிருந்து) தலிஃபா ஷாரில், ஜஸ்பிரீத் கவுர் செகோன், தியான் யாங் மற்றும் பெரியாச்சி ரோஷினி. - படம்: டக்கிஸ் போட்டோகிராபி

நாடகத்தின் கதையானது ஒரு ஹோட்டலில் சந்திக்கும் நான்கு பெண்களின் வாழ்வியலைச் சுற்றி நகர்கிறது.

இயக்குநர் கிரேஸ் கலைச்செல்வி, உடற்குறையுள்ளோரின் பிரதிநிதித்துவம் குறித்துப் பகிர்கையில், “நடிகர்களுக்கு ஏதேனும் சிறப்புத் தேவை இருந்தாலும், மேடையில் எப்போதும் அதே குறிப்பிட்ட சிறப்புத் தேவைகளை அவர்கள் சித்திரிக்க வேண்டிய அவசியமில்லை,” என்றார்.

நாடக ஒத்திகையின்போது இயக்குநர் கிரேஸ் கலைச்செல்வியுடன் (வலது) நடிகர்கள்.
நாடக ஒத்திகையின்போது இயக்குநர் கிரேஸ் கலைச்செல்வியுடன் (வலது) நடிகர்கள். - படம்: டக்கிஸ் போட்டோகிராபி

மேலும், மேடை உத்திகள் பற்றிக் குறிப்பிட்ட கிரேஸ், “நாங்கள் பேசும் சில கதாபாத்திரங்கள் மேடையில் இருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு கலைஞர் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்,” என்றார்.

நடிகர்கள் தலிஃபா ஷாரில் (இடது), பெரியாச்சி ரோஷினி.
நடிகர்கள் தலிஃபா ஷாரில் (இடது), பெரியாச்சி ரோஷினி. - படம்: டக்கிஸ் போட்டோகிராபி 

இந்த நாடகத்தில் நடித்துள்ள பெரியாச்சி ரோஷினி, 24, சக கலைஞர்களுடனான அனுபவம் குறித்து விவரிக்கையில், “கலைஞராகவும் நடிகராகவும் வளர இது எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. சக நடிகர்களுடன் பொறுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தப் பயணம் உணர்த்தியது,” என்றார்.

மேலும், “ஒருவர்மீது ஒருவர் அக்கறை செலுத்தி, மற்றவர்களுக்காகக் காத்திருந்து உதவுவது பற்றியும் நான் இங்குப் புரிந்துகொண்டேன்,” என்றும் அவர் சொன்னார்.

நடிகர் ஜஸ்பிரீத் கவுர் செகோன்.
நடிகர் ஜஸ்பிரீத் கவுர் செகோன். - படம்: டக்கிஸ் போட்டோகிராபி 

“பயிற்சியின்போது அவர்கள் வேகத்திற்கு ஏற்ப என்னை ஈடுகொடுக்க வைத்தனர். இது எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது,” என்றார் நடிகர் ஜஸ்பிரீத் கவுர் செகோன், 45.

“நடிப்பில் நான் இன்னும் நிறைய செய்ய விரும்புகிறேன். இந்த நாடகத்தின் பயணம் மிகவும் சிறப்பானது,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் அவர்.

ஹரேஷ் சர்மா, பீட்டர் சாவ் ஆகியோரின் ஓராண்டுகால உழைப்பில் உருவான இந்த நாடகம், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை (Inclusive Society) நோக்கிய ஒரு முக்கியமான முயற்சி.

குறைபாடுகள் என்பது உடலில் மட்டும் இருப்பதல்ல, அவை சமூகப் பார்வைகளால் மறைக்கப்படுகின்றன என்பதையும் இந்த நாடகம் ஆழமாகப் பதிவுசெய்தது.

குறிப்புச் சொற்கள்