மறதிநோய் (டிமென்ஷியா) என்றால் என்ன, அதற்கு எத்தகைய சிகிச்சைகள் உண்டு, நோயை எவ்வாறு தவிர்க்கலாம் எனப் பல தகவல்களை தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார் சாங்கி பொது மருத்துவமனை மூப்பியல் மருத்துவத் துறையின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் திரவியம் பாலசுப்ரமணியன்.
நினைவாற்றல், பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், சிந்திக்கும் ஆற்றல், மொழி போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படுவது மறதிநோய் இருப்பதைக் குறிக்கும்.
“மறதிநோய் உள்ள பலரும், தங்களுக்கு மறதிநோய் இருப்பதை உணர்வதில்லை. அவர்களது குடும்பத்தினரும் சுற்றத்தாருமே பெரும்பாலும் அதன் அறிகுறிகளைக் கண்டு, மருத்துவரிடம் தெரியப்படுத்துகின்றனர்.
“அதே சமயம், சிங்கப்பூரில் பெரும்பாலான குடும்பத்தினர் மறதிநோய்க்கான அறிகுறிகளை, மூப்படைதலோடு குழப்பிக்கொள்கின்றனர். மேலும், மறதிநோய் ஏற்படுத்தும் மாற்றங்கள் படிப்படியாக ஏற்படுவதால், நோயைக் கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது,” என்றார் டாக்டர் பாலா.
குறிப்பாக, ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியான ‘சிங்கப்பூர் முதியோர் நல’ ஆய்வின்படி, சிங்கப்பூரில் மறதிநோய் சீன சமூகத்தைவிட, இந்தியர்கள், மற்ற இனத்தாரிடையே சற்று பரவலாகக் காணப்படுகிறது.
65 வயதுக்கு மேற்பட்டோரிடத்தில் மறதிநோய் சற்று பரவலாக இருந்தாலும், 40கள், 50களில் இருப்போரும் மறதிநோயால் பாதிப்படையலாம் என்றார் டாக்டர் பாலா.
அல்சைமர்ஸ் நோய், ரத்தநாள (vascular) மறதிநோய், பர்கின்சன்ஸ் மறதிநோய் (Parkinson’s disease dementia), ‘லூவி பாடிஸ்’ மறதிநோய் (Dementia with Lewy bodies), மதுபானம் தொடர்பான மறதிநோய் எனப் பலவகையான மறதிநோய்கள் உள்ளன.
மறதிநோயிலிருந்து குணமடைய வாய்ப்பில்லை என்றாலும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் சிகிச்சைகள் உள்ளன என்றார் டாக்டர் பாலா.
மறதிநோய்க்கான சிகிச்சைகள்
மறதிநோய்க்கான சிகிச்சைகள் சிலவகைப்படும். ஒன்று, மருந்துகள் இல்லாமலேயே கைவினை நடவடிக்கைகள், இசை, நடனம், சத்துணவு போன்றவற்றின்மூலம், மறதிநோயின் வளர்ச்சியை மெதுவடையச் செய்வது. வாழ்க்கைமுறை மாற்றங்களும் உதவும். நினைவு, நடத்தைக்கான மருத்துவ சிகிச்சைகளும் உண்டு.
“முடிந்தவரையில் அவரையே தனியாகச் செயல்பட விடுங்கள். ஒரு புத்தகத்தில் நிகழ்ச்சி, சந்திப்பு நேரங்களைக் குறித்துக்கொள்ள ஊக்குவியுங்கள்,” எனப் பராமரிப்பாளர்களை அறிவுறுத்தினார் டாக்டர் பாலா.
மறதிநோய்க்கான அறிகுறிகள்
தேதிகள், நிகழ்ச்சிகள், அண்மைய கலந்துரையாடல்கள், உணவுகளை மறப்பது, அதே விஷயத்தை மீண்டும் மீண்டும் கேட்பது, ஒரே சமயத்தில் சில கலந்துரையாடல்களைக் கவனிப்பதிலோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கதையைப் புரிந்துகொள்வதிலோ சிரமப்படுவது முதலானவை மறதிநோயின் அறிகுறிகள் என்றார் டாக்டர் பாலா.
பிறரது உணர்ச்சிகளைக் கருத்தில் கொள்ளாமல் நடந்துகொள்வது, தமது உடையும் நடத்தையும் சமூகத்துக்கு ஏற்புடைய விதத்தில் இல்லாமல் இருப்பது, தெரிந்த இடத்திலேயே தொலைந்துபோவது, பேசும்போது சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தச் சிரமப்படுவது போன்றவையும் இந்நோய்க்கான அறிகுறிகள்.
உடை அணிவது, நிதி நிர்வாகம், மருந்துகளை உட்கொள்வது, சமைப்பது, போக்குவரத்தில் செல்வது போன்றவற்றிலும் மறதிநோய் உடையோர் தடுமாறக்கூடும் என டாக்டர் பாலா கூறினார்.
‘பி12’ உயிர்ச்சத்துக் குறைபாடு அல்லது ‘ஃபோலேட்’ (Folate) எனப்படும் ‘பி’ வகை உயிர்ச்சத்துக் குறைபாடு, மன அழுத்தம் போன்றவையும் மறதிநோயைப் போலவே நினைவாற்றலைப் பாதித்தாலும் அவற்றிலிருந்து குணமடைய வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
மறதிநோயைத் தடுக்க உத்திகள்
“மறதிநோய்க்கான அபாயத்தைக் குறைக்க ஆரோக்கியமான வாழ்க்கைமுறை உதவும். ரத்த அழுத்தத்தையும் சர்க்கரை அளவையும் உடற்கொழுப்பையும் கட்டுப்படுத்தல், உடற்பயிற்சி செய்தல், புகைப்பிடித்தலையும் அளவுக்கதிக மதுபானம் அருந்துதலைத் தவிர்த்தல், கண், காது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது, மூளைக்குக் கூடுதல் பயிற்சி கொடுப்பது ஆகியவையும் இதில் உள்ளடங்கும்,” என்றார் டாக்டர் பாலா.
மனதளவில் ஆரோக்கியமாக இருப்பதும் முக்கியம் என்றார் டாக்டர் பாலா. உற்றார் உறவினரோடும் சமூகத்தோடும் தொடர்பில் இருந்து, தனிமையையும் மன அழுத்தத்தையும் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.