பாருக்குள்ளே நல்ல நாடு. பரந்த வளர்ச்சியைத் தொடர்ந்து நோக்கிச் செல்லும் நாடு. உலகில் ஆக வேகமாக வளரும் பொருளியல்களில் ஒன்றாய்த் திகழ்கிறது இந்தியா என்கிற தனிப்பெரும் நாடு.
இந்நாட்டின் வளர்ச்சி, புத்தாக்கத்திறன், மரபு உள்ளிட்ட சிறப்புகளை வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு எடுத்துக்காட்டுவதற்கான சுற்றுலா ஒன்றை இந்திய வெளியுறவு அமைச்சு, செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை நடத்தியது.
ஆற்றலை விரிவுபடுத்தும் ஆய்வு
சுற்றுலாவின் முதல் நாளன்று ஆர்ஐஎஸ் எனப்படும் வளர்ந்துவரும் நாடுகளுக்கான ஆய்வு, தகவல் கட்டமைப்புக்குச் சென்றோம். லோதி ரோட்டிலுள்ள இந்திய ஹெபிடாட் நிலையத்தில் அது அமைந்துள்ளது.
ஆய்வமைப்பின் கல்வியாளர்களும் இந்திய ஆட்சிப் பணியில் (ஐஏஎஸ்) முன்னதாக ஈடுபட்டிருந்தவர்களுமான ராஜீவ் கர், அதுல் கெளஷிக் ஆகியோர், வந்திருந்த செய்தியாளர்களிடம் அமைப்பின் குறிக்கோள்களைப் பற்றி விளக்கினர்.
ஆப்பிரிக்கா, தென்கிழக்காசியா, லத்தீன் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல் என வளர்ந்துவரும் பொருளியலைக் கொண்டுள்ள உலகத் தென்பகுதி வட்டாரங்களைச் சேர்ந்த நாடுகளுடன் கூட்டுறவு வளர்ப்பதிலும் ஐக்கிய நாடுகள், ஜி20 போன்ற அனைத்துலகத் தளங்களில் பொருளியல் விவகாரங்களை ஆராய்வதிலும் இந்த அமைப்பு கவனம் செலுத்துகிறது.
வர்த்தகம், முதலீடு, பொருளியல் ஒத்துழைப்பு ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவதாகச் சந்திப்பில் கூறப்பட்டது. அதில், ஆசியானுடன் இந்தியா கொண்டுள்ள உறவு முக்கியத் தூணாகக் கருதப்படுவதாகவும் அமைப்பினர் கூறினார். இணைப்பு, போக்குவரத்து ஆகியவற்றைப் பொறுத்தவரையில் ஆசியான் நாடுகளிடம் கற்றுக்கொள்வதற்கு ஏராளமாக உள்ளதாக கூட்டத்தில் இருந்த மற்றொரு கல்விமான் டாக்டர் சப்யசாச்சி சாஹா தெரிவித்தார்.
தாக்ஷின் என்ற திட்டத்தின் வழியாகவும் ஆர்ஐஎஸ், ஆசியான் வட்டாரத்தில் உள்ள எட்டு சிந்தனைக் களங்களுடன் உறவுகளை உறுதிசெய்துள்ளதையும் அந்த அமைப்பு விளக்கியது.
அதன் பின்னர் நாங்கள், அதே கட்டடத்தில் உள்ள சிடிஆர்ஐ எனப்படும் பேரிடர் மீள்திறன் கட்டமைப்பினரைச் சந்தித்தோம்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவின் நீள்நிலப்பரப்பிலேயே நிலவகைகள் பலவற்றைக் கையாள்வதில் உள்ள சிக்கல்களை அந்த அமைப்பின் நகர்ப்புற மீள்திறன் ஆலோசகரான டாக்டர் உமாமகேஷ்வரன் ராஜசேகர் விவரித்தார்.
டெல்லியின் சுற்றுலாத் தலங்கள்
புதுடெல்லி, பழைய பூமி என்றே மனத்திற்குத் தோன்றியது. பழைய நாகரிகத்தின் சுவடுகளை அந்நகரின் பல இடங்களில் காணலாம். சின்னஞ்சிறு கலைவடிவம் முதல் அரும்பெரும் கட்டடங்கள் வரையிலும் வட இந்தியாவுக்கே உரித்தான தனிப்பெரும் பண்பாட்டுக் கூறுகளைக் காண முடிந்தது.
‘தில்லி ஹட்’ தெருவோர அங்காடியில் பிடித்தவர்களுக்கு நான் அச்சுநூல்களை வாங்கினேன். புத்தகங்களின் முதல் அட்டையில் துணியில் தைக்கப்பட்ட கண்கவர் வடிவங்கள். கலைப்பொருள்கள் அங்கு ஏராளம்.
பின்னர் ஆக்ராவில் தாஜ்மகாலுக்கும் ஆக்ரா கோட்டைக்கும் சென்றேன். இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்.
தாஜ்மகால், இதமூட்டும் தன்மை கொண்டது. ஆக்ரா கோட்டையோ, அதற்குள் செல்பவர்க்கு வெப்பத்தை மூட்டுகிறது.
தாஜ்மகாலைப் பற்றிய ஏராளமான திரைப்படப் பாடல்களைக் கேட்டு வளர்ந்துள்ளபோதும் அங்கு அதனைக் கண்ட தருணத்தில், கல்கியின் ‘அலையோசை’ நூலில் உள்ள தாஜ்மகாலின் அற்புத வர்ணனையே என் நினைவுக்கு வந்தது.
யமுனை நதியின் இயற்கை அழகை, வெண்பளிங்கு மாடத்திலிருந்து கண்ட உணர்வே தனி.
ஆக்ரா கோட்டையில் வேலைப்பாடுகளுக்குக் குறையில்லை. எனினும் முழுவதுமாகச் சுற்றிப்பார்க்கவில்லை. வெளியேற வேண்டும் என்ற எண்ணமே வலுவாக இருந்தது. தாஜ்மகால் பூமியின்மீது தரையிறங்கிய நிலவு என்றால் ஆக்ரா கோட்டை செவ்வாய்க் கிரகம் போன்ற சிவப்பான, ஒருவித கோபத்துடன் தோற்றமளித்தது.
நவீனமய நகரங்கள்
செப்டம்பர் 27 வரை புதுடெல்லியில் இருந்த நாங்கள், அங்கிருந்து புறப்பட்டு உள்நாட்டு விமானச் சேவை வழியாக சில மணி நேரத்தில் பெங்களூர் சென்றடைந்தோம்.
சாலையோரங்களில் பச்சை பசுமை, மனத்திற்கு இதம் தந்த குளிர்ந்த வெப்பநிலை போன்றவற்றால் பெங்களூரு, சுற்றுலாவிற்கு வந்திருந்த எல்லோர்க்கும் பிடித்துப்போனது.
திங்கட்கிழமை எங்கள் குழு, இந்திய அறிவியல் நிலையத்திற்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்துக்கும் (இஸ்ரோ) சென்றது.
அத்துடன், நாங்கள் ‘இந்திய இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ்’ எனப்படும் இந்திய அறிவியல் கழகத்திற்குச் சென்றோம்.
பழம்பெரும் மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையாரும் பெருவணிகர் ஜம்செட்ஜி டாட்டாவும் தோற்றுவித்த இந்தப் பல்கலைக்கழகம், முதுநிலை அறிவியல் பட்டக்கல்வி மையமாகத் திகழ்கிறது.
மருத்துவம், பொறியியல் முதல் பகுதிமின்கடத்திகள் உற்பத்தி வரை இந்தப் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கு வசதி உள்ளது. காலனித்துவக் காலத்தைச் சேர்ந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டட வேலைப்பாடுகள் அருமை.
மாளிகைகளுக்குப் பெயர்போன பெங்களூர்
பெங்களூரில் கண்களுக்கு விருந்தளிக்கும் மாளிகைகளைக் காணும் வாய்ப்பு கிட்டியது.
19ஆம் நூற்றாண்டில் மைசூர் மன்னர்களுக்காகக் கட்டப்பட்ட பெங்களூரு அரண்மனையின் வெளிப்புறம், குளிர்மிகு பருவநிலையுடன் சேர்ந்து டிஸ்னி அரண்மனையைப் போன்ற உணர்வைத் தந்தது.
அரண்மனையின் உட்புறத்தில் ராஜா ரவிவர்மா ஓவியங்களுடன் மேற்கத்திய ஐரோப்பிய ஓவியங்களும் பார்ப்பவர்க்கு விருந்தளித்தன.
பின்னர் விதான் செளதா எனப்படும் மாநிலச் சட்டமன்றக் கட்டடத்திற்கும் நாங்கள் சென்றோம்.
சாலுக்கிய, ஹோசல, விஜயநகர கட்டடக்கலை வடிவமைப்பைக் கொண்டுள்ள இந்தக் கட்டடம், கர்நாடகத்தின் கலாசாரச் சின்னமாகவும் திகழ்கிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள காந்தியடிகளின் உருவச்சிலையைப்போல இங்கேயும் காணப்பட்டது.
8.2 மீட்டர் உயரமுள்ள இந்தச் சிலை, மகாத்மா காந்தி அமர்ந்த நிலையில் உள்ளது.
இந்தப் பயணம் விழிப்பூட்டும் அனுபவமாகத் திகழ்வதாக இதில் பங்கேற்ற தாய்லாந்தைச் சேர்ந்த மூத்த செய்தியாளர் பிரவித் ரோஜனாப்ருக் தெரிவித்தார்.
வளரும் வல்லரசாகத் திகழும் இந்தியாவின் பலதரப்பட்ட ஆற்றல்களை இந்தப் பயணம் எங்களுக்குக் காண்பித்தது. முக்கிய அமைப்புகளுக்கு எங்களால் சென்று வெளிப்படையான கேள்விகளைக் கேட்டு கலந்துரையாடலில் ஈடுபட முடிந்தது.
“தென்கிழக்காசியாவுடன் இந்தியா மேலும் தனது உறவுகளை ஆழப்படுத்தும் என இந்தப் பயணம் என்னை நம்ப வைக்கிறது. சீனாவையும் அமெரிக்காவையும் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ள ஆசியான் நாடுகள், இந்தியாவுடனான உறவைப் பயன்படுத்தலாம்,” என்று திரு பிரவித் கூறினார்.
இத்தகைய பயணங்கள் செய்தியாளர்களுக்குப் பயனுள்ளதாக இருப்பதாக இந்தோனீசியாவைச் சேர்ந்த செய்தி ஆசிரியர் கைரிசா ஃபெரிடா தெரிவித்தார்.
“இந்தியாவுக்குச் சென்று கிட்டிய அனுபவ அறிவும் பின்புலமும் அந்நாட்டைப் பற்றி நாங்கள் எழுதும் செய்தி அறிக்கைகளுக்குச் செறிவூட்டும். அத்துடன், பல்வேறு அமைப்பினரைச் சந்தித்த எங்களுக்கு மதிப்புமிக்க தொடர்புகள் கிடைத்தன,” என்று தெரிவித்தார்.
வருங்காலப் பயணங்களில் சமூகத் தலைவர்கள், கலைஞர்கள், நடிகர்கள் உள்ளிட்டோரைச் சந்திக்கும் வாய்ப்புகளுடன் இந்தியாவின் சமையல் மரபையும் எடுத்தியம்பும் அங்கங்களும் இருக்க வேண்டும் என்றும் திருவாட்டி ரிசா விருப்பம் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு முதன்முறையாகச் சென்றுள்ள தாம், இந்தப் பயணத்தின்வழி இந்தியாவின் கலாசார, பருவநிலை பன்முகத்தன்மையை அனுபவிக்க முடிந்ததாக சாவ்பாவ் செய்தியாளர் கிளோடியா லியாவ் தெரிவித்தார்.
“நாங்கள் சென்று பார்த்த ஆய்வகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அமைப்புகளின்வழி இந்தியாவைப் பற்றிய பலதரப்பட்ட கண்ணோட்டங்களைப் பெற முடிகிறது. ஆசியான் செய்தியாளர்களுடன் இந்தப் பயணத்தில் உறவாடும் வாய்ப்பு, இந்தப் பயணத்தின் மிகப்பெரிய நன்மையாகும்,” என்று திருவாட்டி லியாவ் கூறினார்.
நற்பெயரை வளர்ப்பது நம் பொறுப்பு
அரசதந்திர உறவுகளை அமைக்கும் பொறுப்பு நாட்டுத் தலைவர்களுக்கும் தூதர்களுக்கும் மட்டும் இருப்பதில்லை. பிற நாடுகளில் வேலைக்காகவும் வேலை நிமித்தமான பயணங்களுக்காக செல்பவர்களுக்கும் உறவுப்பாலம் அமைக்கும் பொறுப்பு உள்ளது.
கொந்தளிப்புமிக்க உலகச் சூழலில் இந்திய மக்கள் இதனைக் கருத்தில்கொண்டு செயல்படவேண்டும்.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த எங்கள் பெயர்கள் ஒன்றுக்கொன்று மிகவும் மாறுபட்டிருந்ததால் தொடக்கத்தில் ஒருவரையொருவர் ‘கம்போடியா, வியட்னாம், தாய்லாந்து’ என அந்தந்த நபரின் நாட்டின் பெயர் சொல்லி அழைத்தோம்.
அந்நேரத்தில், என் நாட்டின் பிரதிநிதியாக நான் இருக்கிறேன் என்ற எண்ணம், என்னை மேலும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளும்படி தூண்டியது.
பண்பாடு, சமயம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையே உறவுப்பாலம் நீடித்துள்ளது.
தென்கிழக்காசியாவுக்கு இந்தியா, கடந்த காலத்தில் பெருவாரியாகப் பங்களித்துள்ளபோதும் ஆசியான் வட்டாரத்தில் இந்தியாவின் நற்பெயரைக் காப்பாற்றுவது அதன் மக்களின் கையிலும் உள்ளது. தனிமனிதர்களாக நாம் நம்மைக் குணத்தளவில் உயர்த்தும் விதம், பிறரிடையே நம் நாட்டிற்கு நற்பெயர் தேடித் தருவதை இந்தப் பயணத்தின்மூலம் நான் நேரடியாகக் கண்டேன்.
சுற்றுப்பயணியாகவோ ஊழியராகவோ ஆசியான் நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் தங்கள் அரசாங்கமும் நாட்டுநலன் பேணும் அமைப்புகளும் எடுத்துவரும் முயற்சிகளை நினைவில்கொண்டு செல்லும் இடத்தில் நற்பெயரை வாங்க முற்படவேண்டும்.
இந்தியக் குடிமக்களுக்கும் பிற நாட்டுக் குடிமக்களாக உள்ள இந்திய வம்சாவளியினருக்கும் இது பொருந்தும். பொருளியல், சமூக உறவுப்பாலங்களை நனவாக்குவது நம் கையில்.

