தோ பாயோவில் பொங்கல் கோலாகலம்; தலைமுறைகளைக் கடந்த உறவுப்பாலம்

தோ பாயோவில் பொங்கல் கோலாகலம்; தலைமுறைகளைக் கடந்த உறவுப்பாலம்

படம்: மக்கள் கழகம்

23 Jan 2026 - 11:38 am

2 mins read

பொங்கல் குதூகலத்தை மாதம் முழுவதும் நீட்டிக்கும் நிகழ்ச்சிகளின் வரிசையில் இடம்பெற்ற ‘நம்ம பொங்கல்’ நிகழ்ச்சி, தோ பாயோ வட்டாரத்தில் கொண்டாட்டக் களிப்புடன் வட்டாரவாசிகளை வரவேற்றது.

தோ பாயோ வெஸ்ட் சமூக மன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் பொங்கல் நிகழ்ச்சி, இவ்வாண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) நடந்தேறியது.

கிட்டத்தட்ட 200 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகத் தேசிய வளர்ச்சி அமைச்சரும் பீஷான் - தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சீ ஹொங் டாட் வருகையளித்தார்.

வண்ணம் தீட்டும் நடவடிக்கையில் ஈடுபடும் பிள்ளைகள். 
வண்ணம் தீட்டும் நடவடிக்கையில் ஈடுபடும் பிள்ளைகள்.  - படம்: மக்கள் கழகம்

கிராமிய நடனங்கள் மேடைகளையும் வண்ணக் கோலங்கள் தரைகளையும் அலங்கரித்தன. கரும்புகளும் தோரணங்களும் சூழ பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.

சிறார் முதல் முதியோர்வரை பலரும் இணைந்த நிகழ்ச்சியில் ராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்கள், பண்பாடு சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மலர் மாலை தொடுப்பது, உறியடிப்பது, கோலமிடுவது, பொங்கல் பானைக்கு வண்ணம் தீட்டுவது போன்ற அங்கங்கள் இடம்பெற்றன. அத்துடன், கடந்தகாலச் சிங்கப்பூரில் பிள்ளைகள் விளையாடிய பல்லாங்குழி, அஞ்சாங்கல், ‘சாப்தே’(chapteh) ஆகியவையும் இடம்பெற்றன.

ஜல்லிக்கட்டு பற்றிய குறும்படமும் நிகழ்ச்சியின்போது காண்பிக்கப்பட்டது. இந்தியர் அல்லாதோருக்கு தமிழரின் வீர விளையாட்டுகளைப் பற்றித் தெரிவிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உற்சாக உறியடி.
உற்சாக உறியடி. - படம்: மக்கள் கழகம்

முதிர்ச்சி அடைந்த பேட்டையான தோ பாயோவில் முதியவர்கள் அதிகம் இருந்தாலும், தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளைச் சேர்ந்த (பிடிஓ) இளம் குடும்பங்களைச் சேர்ந்தோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குதூகலம் சேர்த்தனர்.

எல்லாரும் ஒருவரோடு ஒருவர் உறவாடும் இன்பகரமான சூழலைப் பொங்கல் ஏற்படுத்துவதாக தோ பாயோ வெஸ்ட் சமூக மன்றத்தைச் சேர்ந்த இந்தியர் நற்பணிச் செயற்குழுத் தலைவர் பாலசந்தர் தெரிவித்தார். பல்வேறு சமூகத்தினருக்கு இடையே இதுபோன்ற நிகழ்ச்சிகள் பாலம் அமைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நகரச் சூழலில் பொங்கலுக்கும் தமிழுக்கும் இத்தகைய சிறப்பு கிடைத்திருப்பதைக் கண்டு அகமகிழ்வதாக தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் நீலா, 66, தெரிவித்தார். தம் மகளின் குடும்பத்தைக் காண்பதற்காகச் சிங்கப்பூர் வந்துள்ள அவர், இங்குள்ள தமிழர்கள் பொங்கலைத் தொடர்ந்து பெரிய அளவில் கொண்டாடவேண்டும் என விரும்புவதாகக் கூறினார். 

குறிப்புச் சொற்கள்
பொங்கல்சமூக மன்றம்கொண்டாட்டம்தோ பாயோ