விரைவில் விற்றுத் தீர்ந்த ‘ஜுஜு’ முயல் பொம்மைகள்

விரைவில் விற்றுத் தீர்ந்த ‘ஜுஜு’ முயல் பொம்மைகள்

2 mins read
46eb52fd-713a-4fb4-9ecc-22b51a171f25
‘ஜுஜு முயல் பொம்மைகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இளமனங்களைக் கவர்ந்துவரும் ‘ஜுஜு’ முயல் பொம்மைகள், சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஜுஜு வோர்ல்ட்’ கண்காட்சியின் முதல் வார இறுதியிலேயே முழுமையாக விற்றுத் தீர்ந்துவிட்டன. 

மக்கள் அதிக அளவில் வாங்கியதால் அந்தப் பொம்மைகள் விற்பனையில் இல்லை என்பதைத் தவிர, சிங்கப்பூர்ச் சுங்கத்துறையின் தாமதத்தால் பொம்மைகள் கையிருப்பு குறையவில்லை என்று ‘ஐஎம்பிஏ தியேட்டர்’ தெரிவித்துள்ளது.

நியூயார்க்கில் வசிக்கும் ஆஸ்திரேலியக் கலைஞரான சிஜே ஹென்றி, ஜூன் 19ல் தொடங்கிய ‘ஜுஜு வோர்ல்ட்’ கண்காட்சியில் பொம்மைகள் இல்லாமல் அலமாரிகள் காலியாக இருப்பதைப் பார்த்து இன்ஸ்டகிராம் தளத்தில் தம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அத்துடன், பொம்மைகள் சுங்கத்துறை அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் அவர் கூறியதைத் தொடர்ந்து, சிங்கப்பூர்ச் சுங்கத்துறை தனது விளக்கத்தை வெளியிட்டது.

‘ஜுஜு’ என்பது செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட, கண்ணில் பூ வடிவம் கொண்ட, மென்மையான முயல் பொம்மை ஆகும். 

கரையோரப் பூந்தோட்டத்தில் நடைபெறும் மிதவை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இவை சிங்கப்பூரில் மட்டுமே சிறப்பாக விற்கப்படுகின்றன. இப்போது இந்தப் பொம்மைகளை வாங்க விரும்புபவர்கள் செப்டம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும். 

மேலும், அவர்கள் கூடுதலாக $15 விநியோகக் கட்டணம் செலுத்த வேண்டும். அத்துடன், ‘ஜுஜு வோர்ல்ட்’ கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டை வாங்கியதற்கான சான்றையும் காட்ட வேண்டும். 

பெரிய அளவிலான ‘ஜுஜு’ பொம்மைகள் ஏற்கெனவே கெரோசல் மின்வணிகத் தளத்தில் $250 வரை விற்கப்படுகின்றன. இது, பொம்மையின் அசல் விலையைவிட இரண்டு மடங்கு அதிகம் எனக் கூறப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“கண்காட்சி தொடங்கிய முதல் வார இறுதியில் எதிர்பார்த்ததைவிட மிக அதிகமான மக்கள் வாங்கியதால், குறிப்பிட்ட ஜுஜு பொம்மைகள் முன்கூட்டியே விற்றுத் தீர்ந்துவிட்டன,”  என்று கண்காட்சி மையமான ஐஎம்பிஏ தியேட்டர் கூறியது. 

ஜூலை 18 வரை நடைபெறும் கண்காட்சியில் இதுவரை எத்தனை ஜுஜு பொம்மைகள் விற்கப்பட்டுள்ளன என்பதைச் சொல்ல ஐஎம்பிஏ தியேட்டர் மறுத்துவிட்டது.

ஹாங்காங்கைச் சேர்ந்த வரைகலைஞர் கேசிங் லுங் உருவாக்கிய லபுபு பொம்மைக்கு அடுத்து இந்த ஜுஜு பொம்மைகள் உலக அளவில் புகழ்பெற்று வருகின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்