தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காணும் பொங்கல்: சகோதரப் பாசத்திற்கான பொன்னாள்

3 mins read
ecd30485-978c-4afb-a37d-184474a2bf1b
இரண்டாவது மகள் 22 வயது வசுதாவுடன் கிருபா முகுந்தன். - படம்: கிருபா முகுந்தன்

கணக்காய்வாளராக வேலை செய்யும் கிருபா முகுந்தன், 54, தைப்பொங்கலுடன் கூடுதலாக ஒரு பொங்கல் நாளை முக்கியமாகக் கொண்டாடுகிறார்.

தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் எனக் கொண்டாடிய பின்னர், இவரது இல்லத்தில் கன்னிப்பொங்கல் அனுசரிக்கப்படுகிறது. கன்னிப்பொங்கல் எதற்காக என்ற கேள்வி பலருக்கு எழக்கூடும். தைத்திருநாளைக் கோலாகலமாகக் கொண்டாடும் சிங்கப்பூரில் காணும் பொங்கல் அல்லது கன்னிப்பொங்கல் பொதுவாகச் சிறப்புடன் கொண்டாடப்படுவதில்லை.

அண்ணன்-தங்கை, அக்கா -தம்பி உறவுகளையும் சகோதர, சகோதரிகளாகப் பழகுபவரின் நட்பையும் பெருமைப்படுத்தும் ‘ரக்‌ஷா பந்தன்’ கொண்டாட்டத்தைப் பலர் அறிந்திருக்கக்கூடும். கன்னிப்பொங்கலுக்கும் இத்தகைய சிறப்பு உள்ளது என்ற தகவல் பரவலாக அறியப்படவில்லை. சிலர் அதை, போகி முதலான நான்கு நாள் கொண்டாட்டத்தின் மூன்றாம் நாளிலும் (தைப்பொங்கலுக்கு மறுநாள்), வேறு சிலர் நான்காவது நாளிலும் கொண்டாடுகின்றனர்.

மூன்று பெண் பிள்ளைகளுக்குத் தாயாரான திருவாட்டி கிருபா, உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் வசிக்கிறார். இத்திருநாளன்று அதிகாலையில் எழுந்து வாழையிலையில் ‘கணுப்பிடி’ வைப்பது இவரது வழக்கம்.

வாழையிலையின் மீது வரிசையாக அடுக்கப்பட்ட கணுப்பொங்கல் பிடி.
வாழையிலையின் மீது வரிசையாக அடுக்கப்பட்ட கணுப்பொங்கல் பிடி. - படம்: கிருபா முகுந்தன்

முதல் நாள் மீதமான பொங்கல் சோற்றுடன், தயிர் சோறு, மஞ்சள் கலந்த சோறு, குங்குமம் கலந்த சோறு ஆகியவை தனித்தனியாக தயாரிக்கப்படுகின்றன. பின்னர், சிறு சிறு பிடிகளாக அந்தச் சோறு வகைகளை வரிசையாக அடுக்கி, துளசி அல்லது திருமகள் உள்ளிட்ட பெண் தெய்வங்களுக்கு அவை படைக்கப்படும்.

வாழையிலை மீதான பலவண்ணச் சோற்று வரிசை. சர்க்கரைப் பொங்கல், தயிர், மஞ்சள் சாதம், குங்குமம் கலந்த சோறு வகைகள்.
வாழையிலை மீதான பலவண்ணச் சோற்று வரிசை. சர்க்கரைப் பொங்கல், தயிர், மஞ்சள் சாதம், குங்குமம் கலந்த சோறு வகைகள். - படம்: ஶ்ரீலக்‌ஷ்மி, ஸமாக்யா

கணுப் பொங்கலைப் படைக்கும்போது, “காக்காபிடி வைச்சேன், கணுப்பிடி வைச்சேன், காக்கைக்கும் குருவிக்கும் கல்யாணம், காக்காபிடி வைச்சேன், கணுப்பிடி வைச்சேன், காக்காக்கூட்டம் கலைஞ்சாலும் எங்கக் கூட்டம் கலையாமல் இருக்கணும்,” என்று கூவி, கணுப்பிடிகள் நிறைந்த இலையைப் படைப்பதாகக் கிருபா கூறினார்.

“இது ஒற்றுமைக்கான வழிபாடு. தங்கை அல்லது தமக்கைகளின் திருமணம் வரை அவர்களின் சகோதரர்கள் எண்ணற்ற உதவிகளைச் செய்கிறார்கள். அ;ej;r சகோதரர்கள் என்றும் நலமுடன் வாழவேண்டும் என்பது எங்கள் பிரார்த்தனை,” என்றார் அவர்.

இந்தியாவில் இருந்தபோது கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் கோயில் அருகில் உள்ள குளத்தருகே கணுப்பிடிகள் உள்ள இலையை விடுவது வழக்கம் என்று கூறினார்.

திருவாட்டி கிருபாவின் அண்ணனும் தங்கையும் தற்போது வெளிநாடுகளில் வாழ்கின்றனர். கணுப்பிடிகள் உள்ள இலையைப் படமெடுத்து அவர்களுக்கு அனுப்பி, அவர்களுக்கான தனது பிரார்த்தனைகளைத் தெரிவிப்பதாக இவர் கூறினார்.

தனது மகள்கள் மூவருக்கும் உடன்பிறந்த சகோதரர்கள் இல்லை என்றாலும் உறவினர்களையும் உடன்பிறவாச் சகோதரர்களைப்போலப் பழகும் நண்பர்களையும் வாழ்த்தி, அவர்களின் நலனுக்காக வேண்டிக்கொள்ளும் பண்பைக் கற்பிப்பதாகக் கிருபா கூறுகிறார்.

கன்னிப்பொங்கலைப் பற்றிய நேரடிக் குறிப்புகள் சங்க இலக்கியத்தில் இல்லை என்கிறார் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி, இலக்கியப் பாடத்திட்டத் தலைவரான முனைவர் மணிவண்ணன் முருகேசன்.

“ஆனால் பரிபாடல் உள்ளிட்ட சில இலக்கியங்கள் நீராடல் பற்றி விளக்குகின்றன. அந்த வகையில் இந்தக் கன்னிப் பொங்கல் நீர்நிலைகளுக்கு அருகே அந்த நீர்நிலைகளை வணங்கி நடைபெறுவதால் இது தமிழர் மரபில் இருந்துள்ளது எனலாம்,” என்று அவர் கூறினார்.

திருவாட்டி கிருபாவைப்போலக் காணும் பொங்கலை புதன்கிழமை (ஜனவரி 15) கொண்டாடிய 42 வயது அனிதா சுனில், கர்நாடகாவைச் சேர்ந்தவர். இருந்தாலும் தமிழர்களைப்போலக் கொண்டாடும் வழக்கம் அவரது குடும்பத்தினர்க்கும் உள்ளது.

துளசிச் செடிக்கு முன்பு கணுப்பிடி இலைகளைப் படைத்து வழிபட்டதாக அனிதா கூறினார்.

துளசிச்செடி முன் கணுப்பிடி இலையைப் படைக்கிறார் அனிதா சுனில்.
துளசிச்செடி முன் கணுப்பிடி இலையைப் படைக்கிறார் அனிதா சுனில். - படம்: திருவாட்டி அனிதா சுனில்

அங் மோ கியோ வட்டாரத்தில் வசிக்கும் அனிதாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இலையுடன் கரும்பு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பரங்கிக் காய் ஆகியவற்றைப் படைத்து ‘காக்காப்பிடி வைத்தேன்’ என்ற பாடலைப் பாடிப் படைப்பதாக அனிதா கூறினார்

பூஜையின் நிறைவாக, துளசிச் செடியுடன் வேருடனான மஞ்சள் செடியை வைத்து, இரண்டையும் வலம் வந்தபின் வீட்டில் உள்ள பெரியவர்கள், தன் நெற்றியிலும் தாலிக்கயிற்றிலும் மஞ்சள் தடவி வாழ்த்துவர் என்று அனிதா கூறினார். “மற்ற பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தருவேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்