இசையும் தமிழும் சங்கமித்த நிகழ்ச்சி

2 mins read
8febd19c-23fd-4ec8-9b05-c68cc7730948
கலாபம் பாடல் போட்டி. - படம்: ஃபேஸ்புக்

பாடல்கள் மூலம் தமிழ்மொழி மீதான ஆர்வத்தை வளர்க்கும் விதமாகப் பாடல் போட்டியொன்று அண்மையில் நடத்தப்பட்டது.

இந்த ஆண்டின் தமிழ் இளையர் விழாவை முன்னிட்டு சக்தி நுண்கலைக் கூடம் ‘கலாபம் இசையில் இளமை’ எனும் அப்போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

போட்டியின் முக்கிய நோக்கம் போட்டியாளர்கள் ஆங்கில வார்த்தைகள் கலக்காத தமிழ்ப் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாட வேண்டும்.

போட்டியாளர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாடலின் பொருளை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் பாடல்களைப் பாடிய பின்னர் பாடல்களில் இடம்பெற்ற சில வார்த்தைகளின் பொருளையொட்டி அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

1980 முதல் 2025 வரை வெளியான தமிழ்ப் பாடல்களைக் கிட்டத்தட்ட 12 போட்டியாளர்கள் தேர்வு செய்து பாடினர்.

பள்ளி மாணவர்களுடன் பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட பெரியவர்களும் போட்டியில் கலந்துகொண்டனர்.

செப்டம்பர் 12ஆம் தேதி உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தில் போட்டி நடைபெற்றது.

பிரபல பாடல்களான ‘அனல் மேலே பனித்துளி’, ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’, ‘ஊரு சனம் தூங்கிருச்சு’, ‘முத்த மழை இங்கு’ போன்ற பாடல்களைப் போட்டியாளர்கள் பாடினர்.

இளையர்கள், பெரியவர்கள் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

தனிப்பிரிவுக்கான போட்டிகளுடன் குழுப் போட்டிகளுடன் இடம்பெற்றன.

“பாடல்கள் அனைவரையும் எளிதில் கவரக்கூடியது. அதனால் இளையர்களை ஈர்க்க பாடல்களை வைத்துப் போட்டி ஏற்பாடு செய்தோம். தமிழ்மொழி விழாவைவிட தமிழ் இளையர் விழாவில் இளையர்களின் பங்கேற்புக் குறைவாக உள்ளது. இளையர்கள் நன்கு அறிந்த பாடல்களைப் பாட அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது,” என்றார் சக்தி நுண்கலைக் கூடத்தின் கலை இயக்குநர் தேவி வீரப்பன், 40.

இளம் வயதிலிருந்தே கலைகளில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் பார்த்திபன் ஸ்வாதி, 16, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அகநக அகநக முகநகையே’ பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடினார்.

“பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்கள் நிறைந்தவை. அதனால் நான் அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடலைத் தேர்ந்தெடுத்தேன். இதனால் என் மொழி வளமும் அதிகரிக்கும்,” என்று சொன்னார் ஸ்வாதி.

பாடல் போட்டியில் கலந்துகொண்ட ஸ்வாதி (நடுவில்)
பாடல் போட்டியில் கலந்துகொண்ட ஸ்வாதி (நடுவில்) - படம்: ஃபேஸ்புக்
குறிப்புச் சொற்கள்