வாழ்வில் நம் முன் நிற்கும் பாதைகள் அனைத்தும் அதே இடத்தில்தான் முடிவடையும் என்றால் நம் கைகளில் ஒன்றுமில்லையா? விதிதான் வலியதா?
பார்வையாளர்களின் மனதில் இதுபோன்ற வினாக்களை எழுப்பிய களரி அகேடமியின் ‘இம்மோர்ட்டல்’ நாடகம், ஸ்டேம்ஃபர்ட் கலைகள் நிலையத்தில் செப்டம்பர் 20, 21ஆம் தேதிகளில் அரங்கேறியது.
களரிப்பயட்டு, சிலம்பம், அடிமுறை போன்றவற்றைக் கற்பிக்கும் உள்ளூர்ப் பயிற்சிக்கூடமான களரி அகேடமி, தத்ரூபமான 11 சண்டைக் காட்சிகளுடனும் வீர வசனங்களுடனும் மகாபாரதப் போரைப் பரசுராமரின் பார்வையிலிருந்து திசை திருப்பி புத்துயிரூட்டியது.
உண்மையான ஆயுதங்களோடு நடிகர்கள் ஒருவர்மீது ஒருவர் பாய்ந்தனர். ஒரு சிறு தவறு நேர்ந்தாலும் ரத்தம் வந்திருக்கும். ஆனால், பல்லாண்டுகாலப் பயிற்சியால் குறி தப்பவில்லை.
“பல ஒத்திகைகளால் எங்களுக்கிடயே நல்ல புரிந்துணர்வு இருந்தது,” என்றார் பரசுராமராக நடித்த களரி அகேடமி இணை நிறுவனர் இ. ரூபன்.
2015லேயே இந்நாடகக் கதை தனக்குத் தோன்றினாலும், ஆயுதங்களோடு சண்டையிடும் நிலைக்கு தன் மாணவர்களின் ஆற்றலை வளர்ப்பதற்காக ஒன்பது ஆண்டுகளாகக் காத்திருந்தார் நாடக இயக்குநரும் களரி அகேடமி இணை நிறுவனருமான வேதகிரி கோவிந்தசாமி.
“இந்நாடகம், வேதம் சார்ந்த முத்தொகுப்பின் முதற்பகுதிதான். மற்ற பகுதிகளுக்கு நான் இன்னும் கதைவசனம் எழுதிவருகிறேன்,” என்றார் வேதகிரி.
பார்வையாளர்க் கருத்துகள்
பல்லின பார்வையாளர்கள் நாடகத்தைக் கண்டு மகிழ்ந்தது, நாடகத்தின் மற்றொரு சிறப்பு. “இந்து இதிகாசங்கள் பற்றி எனக்குத் தெரியாவிட்டாலும் எனக்குக் கதை புரிந்தது,” என்றார் சார்லீன். “நாடகக் கதை பற்றிக் கூடுதலாக முன்கூட்டியே தெரிந்திருந்தால் இன்னும் புரிந்திருக்கும். ஆனால் சண்டைக் காட்சிகளும் மொத்த அனுபவமும் சிறப்பாக இருந்தன,” என்றார் மேக்சிம்.
தொடர்புடைய செய்திகள்
“இந்து இதிகாசங்களை தற்காப்புக் கலை நாடகமாகக் கூறுவது புதிய விஷயம், பாராட்டத்தக்கது,” என்றார் பார்வையாளர் ராஜ்குமார்.
நாடகத்தின் சண்டைக் காட்சிகளில் பங்கேற்ற பத்து வயது சிறுவர் குரு ராஜா, நான்கு ஆண்டுகளாக களரி அகேடமியில் பயிற்சியெடுத்துவருகிறார். அவரது தந்தை சோலை ராஜன் நாடகத்தைப் பாராட்டினார்.
“இந்நாடகத்தைச் சிறப்பாகப் படைத்த களரி அகேடமி, எதிர்காலத்தில் மற்ற நாடக நிறுவனங்களுடன் கைகோத்து இணைமுயற்சிகளையும் செய்யலாம். தமிழிலும் படைத்தால் சில வசனங்கள் நன்கு எடுபடும்,” என்றார் அவர்.
‘இம்மோர்ட்டல்’ நாடகக் கரு
“என் கண் முன் என் மொத்த குடும்பத்தையும் அழித்தனர்,” என ஆவேசத்துடன் சிவனிடம் முறையிட்டு, சத்ரியர் குலத்தினரை அழிக்க பரசுராமர் உறுதிமொழி எடுக்கும் காட்சியோடு நாடகம் தொடங்குகிறது. சிவன் அவருக்கு ஒரு கோடாலியையும் சிரஞ்சீவி வரத்தையும் கொடுக்கிறார். அதற்குக் குரு தட்சணையாக, சிவன் என்ன கூறினாலும், மறுப்பு தெரிவிக்காமல் செய்ய பரசுராமர் ஒப்புக்கொள்கிறார்.
சிவனுக்குத் தந்த வாக்குறுதியால் தம் விருப்பத்திற்கு முரணாக பரசுராமர் சத்திரியரான பீஷ்மருக்கு யுத்த முறைகளைக் கற்பிக்கிறார். மகாபாரதக் காட்சிகள் ஒவ்வொன்றும் நடக்கின்றன. இறுதியில், ரத்த வெள்ளமாக இருக்கும் போர்க்களத்தைக் காணும்போது பரசுராமரின் வேதனை பார்வையாளர்களின் மனங்களைத் தைக்கிறது.
“என்னால் உலகையே மாற்றமுடியும் என நினைத்தேன். ஆனால் ஒன்றும் மாறவில்லை. என் வாழ்வே அர்த்தமற்றது,” என பரசுராமர் புலம்பும்போது, நடந்தது உண்மையிலேயே பரசுராமர், போர்வீரர்களின் தீர்மானங்களால்தானா என சிவன் வினா எழுப்பி சிந்திக்கவைக்கிறார்.
இந்து புராணங்கள் சார்ந்த நாடகங்களை (‘ஒடிஸ்ஸி’, ‘வானர அசென்ஷன்’, ‘சப்தமாத்ரிகா’) இஸ்தானா, ஆசிய நாகரிக அரும்பொருளகம், இந்திய மரபுடைமை நிலையம், எஸ்பிளனேட், போன்ற இடங்களில் வழங்கியுள்ள களரி அகேடமிக்கு நாடகம் படைப்பது புதிதல்ல. எனினும், வசனங்களுடன் தற்காப்புக் கலைக் கருவில் அமைந்த முழு நீள நாடகத்தைப் படைப்பது இதுவே அதற்கு முதன்முறை.