அம்பரமாய் விரிந்த கம்பரின் கவியமுதம்

அம்பரமாய் விரிந்த கம்பரின் கவியமுதம்

1 of 2
படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

10 Oct 2026 - 5:30 am

3 mins read

காலத்திற்கும் அறத்தை எடுத்துரைக்கும் ராமரின் கதையைச் செந்தமிழில் வடித்த கவிச்சக்கரவர்த்தி கம்பரின் எழுதுகோல் இன்றளவும் தலைமுறைகளைக் கடந்து இதயங்களைத் தொடுகிறது. 

தன்னடக்கம், புலனடக்கம், பெற்றோரை மதித்தல், உண்மை உரைத்தல், வாழ்க்கைத் துணைக்கு உண்மையோடு இருத்தல், பிறன்மனை நோக்காப் பேராண்மை போன்ற வாழ்வியல் அறநெறிகளைக் கம்பரின் தேனொழுகும் செந்தமிழ் வரிகள் பரிமாறின.

எக்கொள்கையினராயினும் அறத்தை ஒற்றுமையுணர்வுடன் போற்றும் நோக்கில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்த கம்பன் விழாவில் பல்வேறு வயதுப் பிரிவுகளையும் பின்புலங்களையும் சேர்ந்தவர்கள் பங்குபெற்றனர்.

13வது முறையாக நடத்தப்பட்ட கம்பன் விழா, இவ்வாண்டு விக்டோரியா ஸ்திரீட்டிலுள்ள தேசிய நூலகக் கட்டடத்தில் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற்றது 

இளையர்களின் பங்களிப்பு

எழுத்தாளர் கழகத்தின் இளையர் குழுவின் துணைத் தலைவர் சாய் பாலாஜி, நிகழ்ச்சியின் நெறியாளராகவும் செயல்பட்டார். தெளிவாகவும் உற்சாகமாகவும் பேசிய அவர், கம்பர் எழுதிய சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி போன்றவற்றைப் பற்றியும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் முதல் அங்கமாக ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், தாடகை வதத்தை நடித்துக் காண்பித்தனர். ‘சொல்லொக்கும் கடிய வேக’ எனத் தொடங்கும் தாடகை வதைப் படலத்தின் 40வது பாடலும் மேடையில் காண்பிக்கப்பட்டது.

அத்துடன், ‘கம்பன் கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள்’ எனும் தலைப்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டுத் தத்துவம், அரசியல், பொருளியல் துறை மாணவி வைஷ்ணவி கண்ணன்  உரை நிகழ்த்தினார்.

தெளிவான மனத்துடன் அறத்தின்வழி நின்று சரியான முடிவெடுப்பது, சிக்கல்களுக்கான காரணத்தைத் தீர ஆராய்வது, தகுதியானவர்களிடம் பொறுப்பளிப்பது, சிறு செயல்களையும் மனமுவந்து செய்வது  போன்ற கருத்துகளை வைஷ்ணவி, தமது சிற்றுரை வழியாக விளக்கினார்.

“இன்றைய இளைய தலைமுறையினரிடமும் கம்பனை அறிமுகப்படுத்துவது மட்டுமன்றி கம்பனின் படைப்பில் இருக்கும் தமிழின் அழகையும், சிந்தனையின் ஆழத்தையும், மனிதநேயத்தையும் அவர்கள் உணர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்று கழகத்தின் செயலாளர் பிரோமா மகாலிங்கம் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் தலைவர் ராஜகுமார் சந்திரா, பொதுநிகழ்ச்சிகளில் தமிழுக்கு முன்னுரிமை தரப்படவேண்டும் என வலியுறுந்தினார். 

அழியா உண்மைப் பெட்டகம்

நிகழ்ச்சிக்கான சிறப்புரை ஆற்றிய ந.செல்லக்கிரு‌ஷ்ணன், கம்பராமாயணத்தின் மையக்கருத்துகள் மூன்று வகைகளில் வெளிப்படுவதாகக் கூறினார். 

பிறன் மனைவியை விரும்புபவன் சுற்றத்தோடு அழிவான், அறம் வெல்லும் பாவம் தோற்கும், உலக சகோதரத்துவம் ஆகிய பண்புகளை கம்பர் அழுத்தமாக வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனால் அக்காவியம் பொதுத்தன்மை பெற்று மிளிர்வதாகப் போற்றும் திரு செல்லக்கிரு‌ஷ்ணன், “இஸ்லாமியரான மு.மு.இஸ்மாயில், கிறிஸ்துவரான தனிநாயகம் அடிகள், பொதுவுடைமைவாதி ஜீவானந்தம் போன்ற வெவ்வேறு கருத்தியலைக் கொண்டவர்களும் ஈர்க்கப்பட்டு, போற்றி ரசித்த காவியம் இது,” என்பதைச் சுட்டினார். 

காவியத்தின் 1926 ஆம் பாடலான ‘வெய்யோன் ஒளி தன் மேனியின்’ வழி ராமனின் கருமையின் இனிமையைப் பற்றி கம்பர் வடித்ததை முனைவர் செல்லகிரு‌ஷ்ணன் உணர்வோடு விவரித்திருந்தார்.

மையால் ஆன கருமை கண்ணீரில் கரைந்துவிடும், மரகதம் என்பது வெறும் கல்லுக்கு மனிதன் கொடுத்த மதிப்பு, கரிய மேகம் மழை பெய்ததும் வெண்மையாக நிறம் மாறிவிடும் என ஒவ்வொன்றின் குறைகளையும் கூறி நிராகரித்துவிட்டு, ராமனின் அழகு எதனோடும் ஒப்பிட முடியாத “அழியா அழகு”  என கம்பர எழுதியதை முனைவர் பரவசம் பொங்க விளக்கியதும் கேட்க இனிமையாக இருந்தது.  

‘கம்பன் கழகம்’

தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் மு.ஹரிகிரு‌ஷ்ணன், தாம் கம்பன் கழகத்தை  உருவாக்கப்போவதாக அவ்வமைப்பின் அண்மைய பாரதியார் நிகழ்ச்சியில் அறிவித்ததை அடுத்து எழுத்தாளர் கழகத்தின் தலைவர் சு. முத்துமாணிக்கம், முன்னாள் தலைவர் நா. ஆண்டியப்பன் ஆகியோர் கம்பன் விழாவின்போது ஒற்றுமைக்காகவும் தெளிவுக்காகவும் குரல் எழுப்பினர்.

கம்பன் விழாவில் அதற்குப் பதிலளித்த திரு ஹரிகிரு‌ஷ்ணன், “தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தனி, கம்பன் கழகம் தனி. எந்த வகையில் ஒத்துழைப்பு கொடுக்க முடியுமோ ஒற்றுமையாகச் செயல்படுவோம் எனப் பதிவுசெய்கின்றேன்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்