‘கண்ணம்மா’ என்ற பெயரைக் கேட்டவுடன் நம் மனக்கண்முன் தோன்றுவது மகாகவி பாரதியாராகத்தான் இருப்பார்.
பேராற்றல் படைத்த முண்டாசுக்கவியின் கற்பனை, பேரண்டத்திற்கு ஊற்றாக விளங்குவது பெண் என்பதைக் கண்ணம்மா மீது பாடப்பட்ட பல கவிதைகள் காட்டுகின்றன.
பாரதியின் தமிழுக்குள் பொதிந்துள்ள உணர்வுகளின் வெவ்வேறு நீட்சிகளை நன்கு புரிந்துகொண்டு, அவற்றைத் திறம்பட கையாண்டிருக்கிறார் இசைக்கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
அவரது வழிகாட்டுதலில் அவருடைய இசைக்குழு, பாரதியார் பாடல்களை மாறுபட்ட இசைப்புனைவுடன் வழங்கியுள்ளது.
பிரம்மாஸ்த்ரா இசைக்குழு, இவ்வாண்டிற்கான தனது இறுதி இசை நிகழ்ச்சியாக கண்ணம்மா நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமையன்று நடத்தியது.
ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் நடந்த அந்த இசை நிகழ்ச்சி, வானொலி நிகழ்ச்சி போன்றதொரு பாணியைக் கொண்டிருந்தது.
காளிகா, மழையைத் துரத்திச் செல்லல், ஏக்கம், அசுரனின் முழக்கம், ஆசைகள் ஆகிய பெயர்களைத் தாங்கிய இசைப்படைப்புகள் மேடையேறின.
வியோலா, செல்லோ என மேற்கத்திய செவ்விசைக் கருவிகளுடன், குழலும் வீணையும் சேர்ந்து இனிய நாதங்களை ஒலித்தன.
தொடர்புடைய செய்திகள்
‘எல்லாமே வணிகமன்று’
மற்ற தொழில்களைப் போல கலையிலும் வணிக நோக்கம் இருப்பது மாற்ற இயலாத உண்மை நிலை. இருந்தபோதும், கலையின் உன்னதம், எந்த அளவுக்குப் பணத்தை ஈட்ட முடியும் என்பதில் இல்லை என்கின்றனர் திரு நிரஞ்சன் போன்ற கலையுணர்வு நிரம்பியவர்கள்.
“இசையின் பிரம்மாண்டத்தில் மூழ்கிய நான், விடுதலையை உணர்கிறேன். இசையைப் படைப்பதில் பெருமை. அந்த உன்னதப் பணியில் என் சிறுமையை நான் உணர்ந்தேன். குறைகளை எதிர்கொண்டு அவற்றையும் அரவணைத்து தொடர்ந்து என்னை வளர்த்துக்கொள்வதில் கடப்பாடு காட்ட வேண்டிய பயணமாக இது அமைந்துள்ளது,” என்றார் திரு நிரஞ்சன்.
கலையைக் காட்டிலும் கலைசார்ந்த வணிகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலகில், தற்பெருமை பாடும் படைப்புகள் கவனத்தை அதிகம் கவர்கின்றன.
பிறரின் ஒப்புதலுக்கான ஏக்கத்திலிருந்தும் வஞ்சனையிலிருந்தும் விடுபட புனித சரணாலயங்கள் தேவைப்படுவதாகத் திரு நிரஞ்சன் கூறினார்.
“உண்மைத் தன்மைக்குச் சொந்தமான இந்த இடங்கள் மலர்ந்தும் வளர்ந்தும் வருவதைக் கண்டு இன்பம் அடைகிறேன். உடன் கைகோத்து நானும் வளர்வதைக் கண்டு மகிழ்கிறேன்,” என்றும் அவர் சொன்னார்.


