தேசியச் சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனமான சைனேப்ஸ்சின் (Synapxe) ‘ஹீலிக்ஸ்’ தளம், ஒட்டுமொத்த பொதுச் சுகாதாரத் துறைக்குமான முதல் முழுமைவாய்ந்த தரவு ஆய்வு இணையத்தளம் (comprehensive, cloud-based analytics platform) ஆகும். ஜூன் 2024 முதல் அனைத்து பொதுச் சுகாதார அமைப்புகளும் ‘ஹீலிக்ஸ்’ தளத்தில் படிப்படியாக இணைந்துவருகின்றன. செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை விரைவாக உருவாக்கவும் ‘ஹீலிக்ஸ்’ வழிவகுக்கிறது.
‘ஹீலிக்ஸ்’ தளம் சிறப்பாக இயங்குவதற்கு முக்கிய பங்காற்றிவருகிறார் சைனேப்ஸ் தரவு ஆய்வு, செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் தலைமைப் பொறியாளர் கவின் கணேஷ் முருகேசன், 38.
சைனேப்சின் ‘டிஎன்ஏ’ எனப்படும் தரவு ஆய்வு, செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் அவர் நவம்பர் 2023ல் சேர்ந்தார். சுகாதாரத் துறையில் விரைவாக வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் அவரை ஈர்த்தன.
“அத்தொழில்நுட்பங்கள் நோயாளியின் உடல்நலனை மேம்படுத்துவதுடன் சுகாதாரச் சேவைகளை உருமாற்றவும் செய்கின்றன,” என்றார் கவின் கணேஷ்.
வங்கித் துறை, கடை விற்பனைத் துறைகளில் இதற்குமுன் பணியாற்றிய கவினுக்கு சுகாதாரத் துறை புதிதாக இருப்பினும் பல்கலைக்கழகத்தில் தரவுக் கட்டமைப்புகள் பற்றிக் கற்றவை கைகொடுத்தன.
“சிங்கப்பூரில் சைனேப்ஸ், சுகாதாரத் தொழில்நுட்பம் மிகவும் உயர்ந்தது. ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு - அதாவது இயந்திரக் கற்றல் மாதிரிகள் - போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். என் வேலையில் எனக்குப் பிடித்த அம்சங்களில் இவையும் அடங்கும்,” என்றார் கவின்.
குறிப்பிட்ட இடங்களில் அமைந்துள்ள தரவு நிலையங்களை ஓர் ஒன்றிணைந்த இணைய நிலையமாக மாற்றும் திட்டமே ‘ஹீலிக்ஸ்’.
“அதாவது இயந்திரங்களை ஓர் இடத்தில் கொண்ட வழக்கமான தரவு நிலையங்களிலிருந்து இணையத்துக்கு மாறிவருகிறோம். மற்ற துறைகளும் இதைத்தான் செய்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
“இணையத்துக்கு மாறும்போது விரிவாக்கம் இன்னும் எளிதாகும். ஏனெனில், வழக்கமான தரவு நிலையங்களை விரிவுபடுத்த, கூடுதல் ‘சர்வர்’ இயந்திரங்களை வாங்கிவைக்க வேண்டும். ஆனால், இணையத்தில் ஒரே ஒரு தட்டச்சுமூலம் தேவைக்கேற்ப அவற்றைக் கூடுதலாகவோ குறைவாகவோ பயன்படுத்திக்கொள்ளலாம். அவற்றை நிர்வகிப்பது சேவை வழங்குநர், நாமல்ல,” என்றார் கவின்.
இது நம்மை எதிர்காலத்துக்குத் தயார்படுத்தும் என்றும் செயல்முறைகளைச் சீராக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் பிறந்து வளர்ந்த கவின் கணேஷ், கணினி அறிவியல் பொறியியலில் பட்டம் பெற்றார்.
தொடக்கத்தில், கடைகளில் வாங்கும் பொருள்களை ‘ஸ்கேன்’ செய்து கட்டணம் செலுத்தும் இயந்திரத்தின் பின்னணியிலுள்ள தரவுகள் தொடர்பாகப் பணியாற்றினார்.
பின்பு, பெருந்தரவுச் (Big Data) செயலிகளில் கவனம் செலுத்தினார். அனைத்துலக வங்கியில், வாடிக்கையாளர்களை வகைப்படுத்தி, அவர்களுக்குத் தகுந்த விளம்பரங்களை அனுப்புவதில் பணியாற்றினார். ‘பிக் 4’ நிறுவனத்தில் தணிக்கையும் செய்தார்.
‘சைனேப்ஸ்’, சிங்ஹெல்த் உடன் உருவாக்கிய ‘பிலிஎஸ்ஜி’ (BiliSG) செயலி, கைத்தொலைபேசிப் புகைப்படங்கள்மூலம் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதைக் கண்டறியும். பாரம்பரியச் சீன மருத்துவத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் வகையில், ஒருவரின் நாக்கைப் புகைப்படம் எடுத்து ஆரோக்கியத்தைக் கண்டறிகிறது ‘சைனேப்’சின் ‘சின்செ’ (Synseh) தளம். ‘டேட்டாபிரிக்ஸ்’, ‘ஓப்பன்ஏஐ’ போன்றவற்றுடன் ‘சைனேப்ஸ்’ இணைமுயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
“இன்று உலகம் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவை நோக்கிச் செல்கிறது. எடுத்துக்காட்டாக, குறிப்பு எழுதுவது தானியக்கமயமாகிவிட்டது; அதனால் மருத்துவர்கள் நோயாளிகள்மீது அதிகக் கவனம் செலுத்த முடிகிறது. தரவு ஆய்வில், டெராபைட், பெட்டாபைட்டுக்கு அப்பாலும் தரவுகள் விரிவாகின்றன. குவாண்டம் கணினியியலும் வளர்ந்துவருகிறது,” என்றார் கவின்.

