சிங்கப்பூர் சாதனைப் புத்தக முயற்சியுடன் கியட் ஹொங் கலை விழா

2 mins read
e3c23153-9ea2-442e-a53e-4138e2f0afe3
சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் ஏகேடி தியேட்டரின் தலைமையில் 395 பேர் ஒயிலாட்டம் ஆடிய சாதனையை முறியடிக்க, இவ்விழாவில் எதிர்பார்க்கப்படும் 1,000 குடியிருப்பாளர்களுடன் நடனக் கலைஞர்கள் இணைந்து ஆடுவர். - படம்: சிங்கப்பூர் சாதனைப் புத்தகம்
கலை விழா 2024, சனிக்கிழமை செப்டம்பர் 7ஆம் தேதி மாலை 3 முதல் 5.30 மணி வரை கான்கார்ட் தொடக்கப்பள்ளி அருகிலுள்ள கியட் ஹொங் மைதானத்தில் (Hardcourt) நடைபெறவுள்ளது.
கலை விழா 2024, சனிக்கிழமை செப்டம்பர் 7ஆம் தேதி மாலை 3 முதல் 5.30 மணி வரை கான்கார்ட் தொடக்கப்பள்ளி அருகிலுள்ள கியட் ஹொங் மைதானத்தில் (Hardcourt) நடைபெறவுள்ளது. - படம்: கியட் ஹொங் இந்தியர் நற்பணிச் செயற்குழு

ஆக அதிகமானோர் ஆடும் ஒயிலாட்ட நடனத்துடன் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் முயற்சி, சனிக்கிழமை செப்டம்பர் 7ஆம் தேதி பிற்பகல் 3 முதல் 5.30 மணி வரை கான்கார்ட் தொடக்கப்பள்ளி அருகிலுள்ள கியட் ஹொங் கட்டாந்தரையில் நடைபெறவுள்ளது.

கியட் ஹொங் இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்யும் கலை விழா 2024ன் ஓரங்கமாக இம்முயற்சி இடம்பெறும்.

விழாவிற்கு சிறப்பு வருகையளிக்கவுள்ளார் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங்.

சிறப்பு விருந்தினராக சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் கலந்துகொள்வார்.

இந்தியக் கலைகளையும் அவற்றின் சிறப்புகளையும் வருங்காலத் தலைமுறையினருக்கு நினைவூட்டுவதே இவ்விழாவின் நோக்கம். சிறப்பு அம்சமாக, 30க்கும் மேற்பட்ட பாரம்பரியக் கலை, இசை நிகழ்ச்சிகள் நிகழவுள்ளன.

குச்சிப்புடி, கதக்களி, கூமர், சிலம்பாட்டம், கும்மி, பாங்க்ரா, மோகினியாட்டம் போன்ற நடனங்களையும் பம்பை, உறுமி மேளம், செண்ட மேளம், டோல், நையாண்டி மேளம் போன்ற இசைக் கருவிகளின் இனிமையையும் மக்கள் ரசித்து மகிழலாம்.

தமிழக விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமளி புகழ் மணிமேகலையும், உள்ளூர் தொலைக்காட்சிப் படைப்பாளர் ஜிடி மணியும் விழாவைத் தொகுத்து வழங்குவர்.

தலைசிறந்த பாரம்பரிய உடைப் போட்டி, அதிர்ஷ்டக் குலுக்கல், இந்தியப் பண்பாட்டு விளையாட்டுகளையும் உணவுகளையும் வழங்கும் சாவடிகள் என பலவும் இடம்பெற்றிருக்கும்.

மூன்று உணவுப் பற்றுச்சீட்டுகளையும் ஒரு தண்ணீர்ப் பாட்டில் பற்றுச்சீட்டையும் உள்ளடக்கும் 8 வெள்ளி நுழைவுச்சீட்டுகளுக்கு 90183786 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது https://go.gov.sg/artfestival2024 என்ற இணையப்பக்கத்தில் பதிவுசெய்யலாம்.

குறிப்புச் சொற்கள்