உடற்பயிற்சிக் கூடத்தின் பயிற்றுவிப்பாளர் செரில் சின் பணி முடிந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது, அவரது திறன்பேசியில் தோழியிடமிருந்து குறுந்தகவல்கள் வரத்தொடங்கின.
தகவல் தொடர்பு ஊடகமான டெலிகிராமில் வந்த அந்த குறுந்தகவல் வழக்கமான நலம் விசாரிப்பு உரையாடல் போலத் தொடங்கி, உதவி கேட்கும் கட்டத்துக்கு நகர்ந்தது.
அந்தத் தோழி ஒரு இணைய இணைப்பை அனுப்பி அதன் உள்ளடக்கங்களைச் சரிபார்க்க கோரினார்.
சற்றும் சிந்திக்காமல் அந்த இணைப்புக்குள் சென்றார் 31 வயது செரில். ஒரு உணவகத்தின் உணவுப்பட்டியல் முன் நின்றபடியிருக்கும் தோழியின் புகைப்படத்தை சரிபார்க்கக் கூறியது அந்த வலைபக்கம்.
செரிலுக்கு இது சற்றே விசித்திரமாகத் தோன்றியது. தனது தோழி வழக்கமாக உரையாடுவது போல இல்லை என்ற சந்தேகமும் எழுந்தது.
உடனே செரில் மற்றொரு தகவல் பரிமாற்ற ஊடகமான வாட்ஸ்அப் மூலம் தனது தோழியைத் தொடர்பு கொள்ள முடிவெடுத்தார். “அவளது டெலிகிராம் பக்கம் ஊடுருவப்பட்டு விட்டது என உறுதியாகத் தோன்றியது” என்றார் செரில்.
அவரது உள்ளுணர்வு பொய்க்கவில்லை.
சரிபார்த்ததில், தோழி தனது டெலிகிராம் கணக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதையும், மீண்டும் உள்நுழைய இயலாமல் போனதையும் அறிந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
எச்சரிக்கப்பட்டவுடன் விரைந்து செயல்பட்ட செரிலின் தோழி, தனது தொலைபேசி எண்ணை மாற்றியதுடன், பழைய எண் மேலும் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க அதனை முடக்கினார்.
அப்பாவி மக்களை மோசடிப் பேர்வழிகள் எவ்வாறு தகவல் தொடர்பு ஊடகங்கள் மூலம் தொடர்பு கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.
கடந்த 2023ஆம் ஆண்டில் தகவல் தொடர்பு ஊடகங்கள் மூலம் மோசடி செய்த வழக்குகள் 12,368ஆக உயர்ந்துள்ளது. இது 2022ஆம் ஆண்டில் 7,599 ஆக இருந்ததாகக் காவல்துறை கூறியது.
இதில் 68 விழுக்காடு மோசடிகள் வாட்ஸ்அப் மூலமாகவும், 26.5 விழுக்காடு டெலிகிராம் மூலமாகவும் நடந்துள்ளது.
சிங்கப்பூரர்கள் அன்றாடம் பயன்படுத்தும் இரு முக்கியத் தகவல் தொடர்பு ஊடகங்கள் இவைதான். அதனால் மோசடிப் பேர்வழிகள் இவற்றைப் பயன்படுத்துவதாக சிங்கப்பூர் காவல் படையின் மோசடி விழிப்புணர்வு அலுவலக செயல்பாட்டுத் துறையின் உதவி இயக்குநர், காவல்துறைக் கண்காணிப்பாளர் ரோஸி ஆன் மெக்கின்டைர் தெரிவித்தார்.
வாட்ஸ்அப் செயலியை வைத்திருக்கும் மெட்டா நிறுவனந்த்தின் செய்தித் தொடர்பாளர் பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான குறுந்தகவல்களுக்குப் பதிலளிப்பதற்கு முன் அனைவரும் சற்றே நிதானித்து, சிந்தித்து செயல்படும்படி வலியுறுத்தினார்.
இந்தக் குறுந்தகவல் வந்தாலும் அனுப்புனர் தெரிந்தவரா என்பதை சரிபார்க்க வேண்டும். சமூக ஊடகங்களின் இரு படிநிலை சரிபார்ப்புக் குறியீடுகள், பதிவுக் குறியீடுகள் உள்ளிட்ட எந்தத் தகவலையும் யாரிடமும் பகிர வேண்டாம்.
3 மோசடி வகைகள்
- தொடர்பு கணக்குகளைக் கையகப்படுத்துதல் மோசடிக்காரர்கள் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் கணக்குகளை சூழ்ச்சி செய்து கையகப்படுத்துவது ஒரு வகை மோசடி. அப்படி செய்தவுடன் தொடர்பில் உள்ள மற்றவர்களை அதே பாணியில் அணுகுகிறார்கள். அல்லது பணம் கேட்பது (கடன் போன்று) அல்லது அங்கீரிக்கப்படாத பரிவர்த்தனைகளைச் செய்ய வங்கிக் கணக்கு விவரங்களை கேட்பார்கள்.
- வேலை மோசடிகள் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் எளிய, லாபகரமான இணைய வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து அவர்களை தொடர்புக் குழுக்களிலும் சேனல்களிலும் உறுப்பினர்களாகச் சேர்ப்பர். மோசடி செய்பவர்கள் டிக்டாக், யூடியுப் அல்லது ஸ்பாட்டிஃபை போன்ற உண்மையான நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என்று கூறலாம். பாதிக்கப்பட்டவர்கள் செய்து முடிக்கும் எளிய பணிகளுக்கு சிறிய அளவில் சேவைக்கட்டணத்தை இவர்கள் முதலில் கொடுத்து, பின் மேலும் அதிகமான அளவில் பணத்தை சம்பாதிக்க வேண்டுமென்றால் ஒரு தொகையை செலுத்த வேண்டும் என்று சொல்லி மோசடி செய்வார்கள்.
- முதலீடு மோசடிகள் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்ட நபர்களைத் தகவல் பரிமாற்ற தடங்களில் தொடர்புக் குழுக்களிலும் சேனல்களிலும் உறுப்பினர்களாகச் சேர்த்து ‘இலாபகரமான முதலீட்டு வாய்ப்புகள்’ என்று ஆசை வார்த்தைகளைக் காட்டுவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இந்த ‘முதலீட்டு வாய்ப்புகள்’ மூலம் லாபம் பெற்றதாக சில போலி உறுப்பினர்கள் தங்கள் சான்றுகளை வழங்குவார்கள்.
மோசடி அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பு
- ஈரடுக்கு சரிபார்த்தல் முறையையும் செயலிக்குள் நுழைய கடவுச்சொல் பயன்பாட்டை முடுக்கிவிடுங்கள்
- ஒருமுறை கடவுச்சொல், வங்கிக் கணக்கு, சரிபார்ப்பதற்கான மறைச்சொல் போன்றவற்றைக் கேட்கும் சந்தேக குறுஞ்செய்திக்குப் பதிலளிக்கவேண்டாம். வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் சிங்பாஸ் இணைப்புகளில் சொடுக்கவேண்டாம்
- உங்களுக்கு அறிமுகமானவர்கள் உட்பட வழக்கத்திற்கு மாறான கோரிக்கைகள் வந்தால் கவனமாகச் செயல்படுங்கள். அவர்கள் கணக்கு ஊடுருவப்பட்டிருக்கலாம்.
- ஸ்கிரீன்ஷேர் செய்யவேண்டாம். உங்கள் கடவுச்சொல் உட்பட நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று மோசடிக்காரர்களுக்குத் தெரியும். அறிமுகமானவர்களாயினும் தொலைபேசி மூலம் உறுதிசெய்துகொள்ளுங்கள்
- உங்கள் தொடர்பு எண்ணை வைத்துள்ளவர்கள் மட்டுமே அழைக்கவோ தொடர்புக் குழுக்களில் சேர்க்கவோ முடியும் என்று அந்தரங்க செயல்முறைகளை மாற்றிக்கொள்ளுங்கள்
- அதிகாரத்துவ இணையப்பக்கத்தில் மட்டுமே செயலியைப் பயன்படுத்தவும். (வாட்ஸ்அப்) கட்டண, விநியோக தரவுகளை அழித்துவிடவும். (டெலிகிராம்)
- அடிக்கடி இணைப்பைச் சரிபார்க்கவும். செயல்படுத்தாத இடங்களில் இணைப்பைத் துண்டிக்கவும் (வாட்ஸ்அப்) செயல்படுத்தாத இடங்களில் இணைப்பைத் துண்டிக்கவும். ‘சீக்ரட் சேட் ஆப்ஷன்’ முடுக்கவும் (டெலிகிராம்)
சிங்கப்பூர் காவல்துறையுடன் இணைந்து வழங்கப்படுகிறது