விறுவிறுப்புடன் விளையாடிய பின்னர் வாழையிலை விருந்துணவு

துடிப்பும் சுறுசுறுப்பும் நிறைந்த ‘கியட் ஹோங்’ பொங்கல் விழா

2 mins read
182c49fd-99ab-4334-8620-649c151ce85b
கியட் ஹோங் சமூக மன்றத்தின் 2026 பொங்கல் கொண்டாட்டத்தில் கயிறு இழுக்கும் போட்டி. - படம்: கியட் ஹோங் இந்தியர் நற்பணிச் செயற்குழு

இயற்கையின் சிறப்பை எடுத்துரைக்கும் பொங்கல் விழாவிற்குத் துடிப்புமிக்க உடற்பயிற்சி சிறப்பு சேர்க்கிறது. ஏனெனில், உடற்பயிற்சி செய்து நல்ல உடல்நலத்துடன் இருப்போர்க்குப் பொங்கலும் விருந்துணவும் சுவைகூட்டும்.

கயிறு இழுப்பு, உறியடி, ‘மியூசிக்கல் சேர்ஸ்’ விளையாட்டு போன்ற துடிப்பான நடவடிக்கைகள், கியட் ஹோங் சமூக மன்றத்தின் பொங்கல் கொண்டாட்டத்தில் முக்கிய இடம்பிடித்தன.

வசிப்போருடன் இணைந்த கொண்டாட்டம்

சுவா சூ காங் வட்டாரவாசிகளுக்காகக் கியட் ஹோங் இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) சுவா சூ காங் அவென்யு 4, புளோக் 421க்கு அருகில் நடைபெற்றது.

கண்ணைக் கட்டிக்கொண்டு உறியடிக்க முயலும் துணையமைச்சர் ஸூல்கர்னைன் அப்துல் ரஹிம். 
கண்ணைக் கட்டிக்கொண்டு உறியடிக்க முயலும் துணையமைச்சர் ஸூல்கர்னைன் அப்துல் ரஹிம்.  - படம்: கியட் ஹோங் இந்தியர் நற்பணிச் செயற்குழு

வெளியுறவு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சரும் சுவா சூ காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம், 700க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். 11 பானைகளில் பொங்கலிடப்பட, நிகழ்ச்சிக் கூடாரத்தைச் சுற்றியிருந்தோர் ‘பொங்கலோ பொங்கல்’ என ஆனந்தமாக முழங்கினர்.

பழைய நினைவுகள் திரும்பின

விளையாட்டுகளுடன் கும்மி, கரகாட்டம், புலியாட்டம் ஆகியவையும் இடம்பெற்றன. நிகழ்ச்சிக்குப் பிறகு வாழையிலை உணவு பரிமாறப்பட்டது. கந்தரப்பம், சமோசா, தே தாரிக், சர்பத் ஆகியவையும் தரப்பட்டன.

கியட் ஹோங் சமூக மன்றத்தினர் ஏறத்தாழ 15 ஆண்டுகளாகப் பொங்கல் கொண்டாடி வருவதாகக் கியட் ஹோங் இந்திய நற்பணிச் செயற்குழுவின் தலைவர் ஷாகுல் ஹமீது தெரிவித்தார். “முன்னதாக 294க்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கலிட்டு, சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றோம். எங்களது நிகழ்ச்சிகளில் புதுமை சேர்க்க இயன்றவரை முற்படுவோம்,” என்றார் திரு ஹமீது.

பொங்கலைச் சுவைத்து மகிழும் வட்டாரவாசிகள். 
பொங்கலைச் சுவைத்து மகிழும் வட்டாரவாசிகள்.  - படம்: கியட் ஹோங் இந்தியர் நற்பணிச் செயற்குழு

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கியட் ஹோங் பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவரும் ஸ்வர்ணலதா உடையப்பன், 45, வட்டாரவாசிகள் கூட்டுக் குடும்பம் போல இணைந்து பொங்கல் கொண்டாடியதாகக் கூறினார்.

“எப்போதும்போல இம்முறையும் பாரம்பரியத்துடன் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. எல்லா வயதினரையும் ஈடுபடுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் இருந்தன. நேரத்துடன் தொடங்கி முடிந்த அந்நிகழ்ச்சி நேர்த்தியுடன் நடத்தப்பட்டது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்